பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு ரொக்கமில்லாப் பரிவர்த்தனைகளை அரசு பெரிய அளவில் ஊக்குவித்து வருகிறது. இதற்கு உதவும் வகையில் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாறுவதற்கான புதிய வசதிகளும் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் அறிமுகமான ‘பீம்’ செயலி தொடக்க நிலையிலேயே அதிக வரவேற்பைப் பெற்று கவனத்தை ஈர்த்துள்ளது.
‘தேசிய கொடுக்கல்கள் நிறுவனம்’ (பேமென்ட் கார்ப்பரேஷன்) உருவாக்கிய இந்தச் செயலியைப் பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்து வைத்தார். ‘பாரத் பேமெண்ட் இண்டர்ஃபேஸ் ஃபார் மணி’ என்பதன் சுருக்கமான பீம் செயலி சட்ட மேதை அம்பேத்கர் பெயரையும் குறிக்கும் வகையில் அமைந்துள்ளது.
ஆண்ட்ராய்டு போன்களில் செயல்படக்கூடிய இந்தச் செயலி ஏற்கெனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ள ‘யூனிஃபைட் பேமெண்ட் இண்டர்ஃபேஸ்’ எனப்படும் யு.பி.ஐ. தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. யு.பி.ஐ., வசதி ஸ்மார்ட் போன் மூலம் வங்கிக் கணக்கில் இருந்து நேரடியாகப் பணப் பரிவர்த்தனை செய்ய வழி செய்கிறது. இந்தப் பரிவர்த்தனைகளின் போது வங்கிக் கணக்கு உள்ளிட்ட விவரங்களைச் சமர்பிக்க வேண்டிய அல்லது உள்ளீடு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்பது இந்த வசதியின் சிறப்பாக அமைகிறது.
யு.பி.ஐ. வசதி சார்ந்து, முன்னணி வங்கிகள் தனிச் செயலிகளை அறிமுகம் செய்துள்ளன. அந்த வரிசையில் பீம் செயலியும் அறிமுகம் செய்யப்பட்டாலும், எளிமையானப் பயன்பாட்டில் இது மற்ற செயலிகளில் இருந்தெல்லாம் வேறுபட்டிருக்கிறது.
யு.பி.ஐ. செயலியின் சுலபமான வடிவமாக வெகுமக்களை மனதில் கொண்டு மிகவும் எளிமையாக இந்தச் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. எளிமையான கையாடல், மொபைல் வங்கிச்சேவைக்குப் பதிவு செய்திருக்க வேண்டிய அவசியமில்லை என்பன போன்ற அம்சங்கள் பீம் செயலியின் பயன்பாட்டை எளிதாக்குகின்றன.
வங்கிக் கணக்கு மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் கொண்ட எல்லோரும் பீம் செயலியைப் பயன்படுத்தலாம். பீம் செயலி மூலம் எளிதான பணப் பரிவர்த்தனையை மேற்கொள்ளலாம்.
பீம் செயலியைப் பயன்படுத்த ஆண்ட்ராய்டு போன் வழியே கூகுள் பிளேஸ்டோரில் இருந்து இந்தச் செயலியை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்துகொள்ள வேண்டும்.
பீம் செயலியைத் தரவிறக்கம் செய்யும் போது, அதிகாரபூர்வமான செயலியைத்தான் தரவிறக்கம் செய்கிறோம் என்பதை உறுதி செய்து கொள்வது மிகவும் அவசியம். ஏனெனில் பீம் பெயர் போலவே பல போலிச் செயலிகள் உலாவுகின்றன. எனவே செயலியைத் தரவிறக்கம் செய்யும் முன் அது தேசிய பேமனெட் கார்ப்பரேஷன் உருவாக்கிய செயலியா என்பதைக் கண்டறிய வேண்டும். அதிகாரபூர்வ இணைப்பு மூலம் இதை நாடுவது நலம்.
பொதுவாகவே வங்கி மற்றும் நிதிச்சேவை செயலிகளைப் பயன்படுத்துவதற்கு முன், அவை அதிகாரபூர்வ செயலிகள்தானா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். இமெயில் அல்லது குறுஞ்செய்தி மூலம் வரும் இணைப்புகளை எல்லாம் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
செயலியை நிறுவிய பின் விருப்ப மொழியைத் தேர்வு செய்ய வேண்டும். இப்போது முதல் கட்டமாக ஆங்கிலம் மற்றும் வட இந்திய மொழிகள் மட்டுமே உள்ளன. வரும் வாரங்களில் தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளும் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இதன் பிறகு பயனாளியின் போன் மற்றும் குறுஞ்செய்திகளை அணுகும் அனுமதியைக் கேட்கும். இதற்கு அனுமதி அளித்தவுடன், பயனாளியின் போன் எண்ணை உறுதி செய்து கொள்ளும்.
இரட்டை சிம் கார்டு கொண்ட போன் எனில் எது பரிவர்த்தனைக்கான சிம்கார்டு எனக் குறிப்பிட வேண்டும். அடுத்த கட்டமாக நான்கு இலக்க பாஸ்கோடை உருவாக்கிக்கொள்ள வேண்டும். இந்த பாஸ்கோடைத்தான் தொடர்ந்து கடவுச்சொல்லாகப் பயன்படுத்துவோம். பாஸ்கோடை உருவாக்கிய பிறகு வங்கியைத் தேர்வு செய்ய வேண்டும்.
யு.பி.ஐ. பட்டியலில் உள்ள 31 வங்கிகளிலிருந்து தேர்வு செய்து கொள்ளலாம். ஒரு வங்கிக் கணக்கை மட்டும்தான் தேர்வு செய்ய முடியும். வங்கிக் கணக்கை இணைத்தவுடன், டெபிட் கார்டின் கடைசி ஆறு இலக்கத்தைத் தெரிவித்து, யு.பி.ஐ. பரிவர்த்தனை பின் எண்ணை உருவாக்கிக் கொள்ள வேண்டும். இதன் பிறகு பரிவர்த்தனைக்கான வி.பி.ஏ. எனப்படும் ‘விர்ச்சுவல் பேமெண்ட் அட்ரஸ்’ எனும் முகவரியை உருவாக்கிக்கொள்ள வேண்டும். இது மொபைல் எண் அல்லது பெயராக இருக்கலாம். பணம் அனுப்ப அல்லது கோர இந்த முகவரி அவசியம்.
வி.பி.ஏ.வை உருவாக்கிக் கொண்ட பிறகு, பரிவர்த்தனைக்கான பக்கம் தோன்றும். அதில் அனுப்ப (செண்ட்), கோர (ரிக்வஸ்ட்) மற்றும் ஸ்கேன் ஆகிய மூன்று பகுதிகள் இருக்கும். செண்ட் பகுதி மூலம் பணம் அனுப்பலாம். ரிக்வஸ்ட் பகுதி மூலம் பணம் அனுப்பக் கோரலாம்.
பணம் அனுப்ப, பெறுபவரின் மொபைல் எண் அல்லது பரிவர்த்தனை முகவரியைக் குறிப்பிட வேண்டும். உடனே அதைப் பரிசோதித்து உறுதி செய்யும். அதன் பிறகு தொகையைத் தெரிவித்து ‘பின்’ எண்ணை அடித்தவுடன் பணம் பரிவர்த்தனை செய்யப்படும்.
பணம் பெறுபவர் யு.பி.ஐ பரிவர்த்தனை முகவரி கொண்டவராக இருக்க வேண்டும். இல்லை எனில் அவரது வங்கிக் கணக்கு மற்றும் ஐ.எப்.எஸ்.சி கோடு தெரிவித்து பரிவர்த்தனை செய்யலாம். பரிவர்த்தனை முகவரி கொண்டவர்கள் எனில், எளிதாகப் பரிவர்த்தனை செய்யலாம். ஸ்கேன் செய்வது மூலமும் பரிவர்த்தனை செய்யலாம். பணம் அனுப்புவதற்கான ‘கியூ.ஆர்’ கோடையும் உருவாக்கி அதனைப் பகிர்ந்து கொள்ளலாம். மற்றவர்கள் உருவாக்கிய கோடை ஸ்கேன் செய்தும் பணம் செலுத்தலாம்.
சாதாரண போனில் ‘*99#’ என்ற எண்ணை அணுகுவது மூலமும் இந்த வசதியைப் பயன்படுத்தலாம். பணப் பரிவர்த்தனை தவிர கணக்கில் உள்ள தொகையை அறியவும் இந்த வசதியைப் பயன்படுத்தலாம். ஆனால் மற்ற யு.பி.ஐ செயலியில் உள்ளது போல காசோலை கோருவது போன்ற மற்ற வசதிகளை அணுக முடியாது. பீம் செயலி மூலமான பரிவர்த்தனை நேரடியான வங்கிக் கணக்கிற்குச் சென்றுவிடும். இதைப் பயன்படுத்தக் கட்டணம் கிடையாது. ஆனால் வங்கிகள் தரப்பில் சிறிதளவு கட்டணம் வசூலிக்கப்படலாம்.
தற்போது பணப் பரிவர்த்தனை செயலிகளை விட பீம் செயலி மிகவும் எளிதானதாகக் கருதப்படுகிறது. முதல் முறை பயனாளிகளை டிஜிட்டல் பரிவர்த்தனை உலகிற்குள் ஊக்குவிக்கும் வகையில் இந்தச் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் கருதப்படுகிறது. இந்தச் செயலி பாதுகாப்பான செயல்பாடுகளைக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று அடுக்குப் பாதுகாப்பைக் கொண்டுள்ளது. ஒரு முறை 10 ஆயிரம் ரூபாய் வரை பணம் அனுப்பலாம். நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை எனும் வரம்பும் உள்ளது.
நேரடி பணப் பரிவர்த்தனைக்கு இது மிகவும் ஏற்றது. இந்தச் செயலி பரிவர்த்தனையை ஏற்கும் வர்த்தர்களிடமும் இதைப் பயன்படுத்தலாம். வருங்காலத்தில் இந்த எண்ணிக்கை தற்போதுள்ளதைவிட அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பீம் செயலி பயன்பாட்டில் சில சிறிய இடர்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் ‘ஸ்பேம்’ கோரிக்கைகளும் தொல்லை தருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இவற்றைச் சரி செய்யும் வகையில் அப்டேட்டட் வெர்ஷன் வெளியாகியுள்ளது. ஸ்பேம் தொல்லை குறித்துப் புகார் தெரிவிக்கும் வசதியும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
மேலும் விவரங்களுக்கு:>https://upi.npci.org.in/static/faq/en_US/
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
23 hours ago
தொழில்நுட்பம்
1 day ago
தொழில்நுட்பம்
2 days ago
தொழில்நுட்பம்
2 days ago
தொழில்நுட்பம்
4 days ago
தொழில்நுட்பம்
5 days ago
தொழில்நுட்பம்
6 days ago
தொழில்நுட்பம்
7 days ago
தொழில்நுட்பம்
11 days ago
தொழில்நுட்பம்
15 days ago
தொழில்நுட்பம்
19 days ago
தொழில்நுட்பம்
20 days ago
தொழில்நுட்பம்
29 days ago
தொழில்நுட்பம்
1 month ago
தொழில்நுட்பம்
1 month ago