சமூக ஊடகங்களின் வருகையாலும் அதிகரித்து வரும் அதன் பயன்பாட்டாலும் இணையக் குற்றங்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.
சைபர் வேட்டையாளர்கள் (Cyber Stalkers)எனப்படும் இணைய விஷமிகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
இணையம், ஈமெயில் போன்ற அனைத்து மின்னணு தகவல் முறைமைகள் வழியாக, விருப்பம் இல்லாத ஒருவரை தொடர்பு கொள்வது, தொந்தரவு செய்வது, மிரட்டுவதை இணைய வேட்டையாடல் (Cyber Stalking) எனலாம்.
ஷ்ரதா முரளிதரன், நகரத்தில் வேலை பார்க்கும் ஓர் ஆலோசகர். அவருக்கு இணைய விஷமி ஒருவர், சமூக ஊடகமொன்றின் வழியாக குறுஞ்செய்திகள், கவிதைகள், படங்களைத் தொடர்ந்து அனுப்பிக்கொண்டே இருக்கிறார். ஷ்ரதா என்ன செய்தார்?
''நான் பதில் அனுப்பினால்தான், அவர் மேலும் பேச்சை வளர்ப்பார் என்று தோன்றியது. அதனால் அவர் அனுப்பிய எதற்கும் பதில் சொல்லாமலேயே இருந்தேன். ஆனால் அது பலனளிக்கவில்லை. அவர் என்னுடைய மற்ற நண்பர்களை அறிந்துகொண்டு அவர்களுடன் பழகத் தொடங்கினார். பின்னர் அவர்களிடமே சென்று என்னை அறிமுகப்படுத்தி வைக்குமாறு கேட்டிருக்கிறார்" என்கிறார்.
புற்றீசலாகப் பெருகிவரும் சமூக ஊடகங்களில் பகிரப்படும் சுய படங்களும், தனிப்பட்ட தகவல்களும் கடைசியில் அவர்களுக்கே தொல்லையாக மாறுகின்றன. முக்கியமாகப் பெண்களின் ப்ரொஃபைல் படங்களால் கவரப்படுபவர்கள், அவர்களுக்கு தொடர்ந்து குறுஞ்செய்திகளை அனுப்புகிறார்கள். அவர்களின் புகைப்படங்களை வைத்து, அவர்களையே மிரட்டுகிறார்கள்.
பொறியாளரான வந்தனா, எந்த ஒரு செய்தியையோ, படத்தையோ தன்னுடைய சமூக ஊடகப் பக்கத்தில் பதிவு செய்வதற்கு முன், ஒன்றுக்கு இரண்டு முறை யோசிப்பதாகக் கூறுகிறார். தன்னுடைய ப்ரொபைல் பக்கத்தை போதுமான அளவு பாதுகாப்பு வசதிகளோடு வைத்திருப்பதாகக் கூறுகிறார். ஆனாலும் அவருடைய புகைப்படங்களை, மற்ற நண்பர்கள் அவர்களின் டைம்லைனில் பகிரும்போது அந்நியர்கள் அவற்றைக் காண நேரிடுகிறது என்கிறார். கடைசியில் அந்த அடையாளம் தெரியாத நபர் தன்னைத் தொந்தரவு செய்ய வாய்ப்பிருக்கிறது என்றும் கவலைப்படுகிறார்.
சமூக ஊடகங்களில் எதைப் பகிர வேண்டும்?
இணையம் மற்றும் சமூகப் பாதுகாப்புக்கான திட்டக்குழு இயக்குநர் பிரனேஷ் பிரகாஷ், இதைப் பற்றிப் பேசுகிறார்.
''நாம் எதைப் பகிர வேண்டும் என்பதை நாமே தீர்மானிக்கும் சுதந்திரத்தை, இணைய சமூகம் நமக்குக் கொடுத்திருக்கிறது. இதில்தான் நாம் பார்க்க விரும்பாத நபர்களை ம்யூட் செய்யலாம்; பிளாக் செய்யலாம்; அவர்களின் மேல் சமூக ஊடகத்திடம் புகார் கூடக் கொடுக்கலாம்.
ஆன்லைன் உலகத்தைப் பொறுத்தவரை நம்பிக்கையே அதனை ஆட்சி செய்கிறது. நமக்கு எதுவும் நேராது; நாம் பாதுகாப்பான வளையத்துக்குள்தான் இருக்கிறோம் என்ற எண்ணமே, பயனாளிகளை சுதந்திரமாக இயங்கச் செய்கிறது. அதே நேரம் தவறுகள் நிகழும்போது அதைத் தடுக்கும் வகையிலான தொழில்நுட்ப வசதிகள் வரைமுறைக்கு உட்பட்டதாகவே இருக்கின்றன.
சில வரம்புமீறல்கள் சட்டத்துக்கு உட்பட்டதாகவும், சில உட்படாமலும் இருக்கின்றன. ஆனால் இணையக் குற்றங்கள் தொடர்பாக என்னென்ன சட்ட வழங்கல்கள் இருக்கின்றன என்பதைப் பயனாளிகள் தெரிந்துகொள்வது முக்கியமானது'' என்கிறார்.
சமூக ஊடகங்களில் நண்பர்களாக மாறுபவர்கள், வெளியில் சந்திப்பதும் வழக்கமாகி வருகிறது. மெய்நிகர் உலகத்தில் உலவியவர்கள், இப்போது மெய்யான உலகத்திலும் நண்பர்களாக மாறி வருகின்றனர். கடந்த ஐந்து வருடங்களில் இந்த கலாச்சாரம் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. அதற்கேற்ப பாதுகாப்பு திட்டங்களும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
சமூக ஊடகங்களில் மோசமான அனுபவத்தைப் பெற்றவர்களில் ஒருவரான கார்த்திகா, தன்னுடைய வாழ்க்கையில் நடந்ததை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.
''இணைய விஷமி ஒருவரால் எனக்கு மோசமான அனுபவம் ஏற்பட்டது. நடந்ததை நான் பொதுவெளியில் சொல்ல முற்பட்டேன். ஆனால் புகழுக்காகவே நான் அப்படிச் செய்கிறேன் என்று அவதூறு பரப்பப்பட்டது. அதிலிருந்து காவல் துறையினர்தான் என்னை மீட்டெடுத்தனர். இவற்றால் பாதிக்கப்பட்ட நபர்களை தவறான தொனியில் பார்ப்பதை விடுத்து, மக்கள் அவர்களுக்கு ஆதரவாக இருக்க முன்வர வேண்டும்'' என்கிறார் கார்த்திகா.
இணைய விஷமிகளை எப்படித் தடுக்கலாம்?
* ஆன்லைன் பயனர்கள், தங்களது விபரங்களை தவறான முறையில் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க, தங்களது பிரைவசி அமைப்புகளை மற்றவர்கள் பார்க்க இயலாதவாறு அமைத்துக் கொள்ளலாம்.
* சில சமூக ஊடகங்களுக்கான ஸ்மார்ட் போன் செயலிகள் பயனர்களின் இருப்பிட விவரங்களை அணுகும். இதை நாம்தான் முறைப்படுத்தி பயன்படுத்த வேண்டும்.
* சமூக ஊடகங்களில் ஆர்வம் காட்டும் குழந்தைகளை பெற்றோர்களே கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும். அவர்கள் பகிரும் தகவல்கள் சரியானவையா என்று பார்க்க வேண்டும்.
* இணையக் குற்றங்கள் என்றால் என்ன என்பது குறித்த தெளிவான அறிவு இருக்க வேண்டும். அத்தகைய சம்பவங்கள் நடந்தால் எங்கே, யாரிடம் புகார் தெரிவிக்க வேண்டும் என்று தெரிந்திருக்க வேண்டும்.
தமிழில்:க. சே. ரமணி பிரபா தேவி
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
6 hours ago
தொழில்நுட்பம்
8 hours ago
தொழில்நுட்பம்
1 day ago
தொழில்நுட்பம்
1 day ago
தொழில்நுட்பம்
4 days ago
தொழில்நுட்பம்
5 days ago
தொழில்நுட்பம்
6 days ago
தொழில்நுட்பம்
7 days ago
தொழில்நுட்பம்
11 days ago
தொழில்நுட்பம்
15 days ago
தொழில்நுட்பம்
18 days ago
தொழில்நுட்பம்
20 days ago
தொழில்நுட்பம்
28 days ago
தொழில்நுட்பம்
1 month ago
தொழில்நுட்பம்
1 month ago