இளமை .நெட்: உங்களைச் செதுக்கும் யூடியூப் சேனல்கள்!

By சைபர் சிம்மன்

யூடியூப் வெறும் பொழுதுபோக்கு வீடியோக்களின் இருப்பிடம் மட்டுமல்ல. பாடம் பயில உதவும் கல்வி சார்ந்த வீடியோக்கள் முதல், விஞ்ஞானத் தகவல்களை எவருக்கும் புரியும் வகையில் எளிதாக விளக்கும் வீடியோக்கள்வரை பயனுள்ள சேனல்கள் பல இருக்கின்றன. ஆர்வம் மட்டும் இருந்தால், போட்டோஷாப் முதல் ஒளிப்படக்கலைவரை எல்லாவற்றையும் யூடியூப் வீடியோக்களைப் பார்த்துக் கற்றுக்கொள்ளலாம்.

கட்டுரைகள் அல்லது புத்தகங்களை வாசிப்பதைவிட வீடியோவாகப் பார்த்துத் தெரிந்துகொள்வது சுவாரசியமாக இருக்கிறது என நினைப்பவர்களுக்கு யூடியூப் ஒரு பல்கலைக்கழகம்தான். அந்த வகையில், உங்களை நீங்களே செதுக்கிக்கொள்ள விரும்பினாலும் அதற்கேற்ற வீடியோ சேனல்கள் அநேகம் இருக்கின்றன.

‘செயல்திறன் மேம்பாடு’ என்பது நிறுவனங்களுக்கும் தனிமனிதர்களுக்கும் முக்கியம்தான். சோம்பலை வெல்ல, எதையும் தள்ளிப்போடாமல் குறித்த நேரத்தில் முடிக்க, நினைத்ததைச் செய்து இலக்கை நோக்கி முன்னேற செயல்திறன் மேம்பாட்டு உத்திகள் அவசியம். இதற்கு வழிகாட்டும் புத்தகங்களும் அநேகம் இருக்கின்றன. கட்டுரைகளும் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன.

இந்தப் புத்தகங்கள், கட்டுரைகள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்துக்கொண்டு, அதில் உள்ள வழிகளை சுவாரசியமாக வீடியோ வடிவில் விளக்கும் சேனல்கள் சிலவற்றைப் பார்க்கலாம்:

வாரம் ஒரு வீடியோ: (http://www.productivitygame.com/)

‘புரொடக்டிவிட்டி கேம்’ யூடியூப் சேனலில் வாரம் ஒரு வீடியோவைப் பார்க்கலாம். ஒவ்வொரு வீடியோவும், புகழ்பெற்ற செயல்திறன் மேம்பாட்டுப் புத்தகத்தின் சாராம்சம் அல்லது அதில் உள்ள முக்கிய வழிகளை விளக்கும் வகையில் அமைந்துள்ளன. அனிமேஷன் முறையில் சுவாரசியமாகக் கருத்துகள் விவரிக்கப்படுகின்றன. இந்த சேனலுக்குப் புதியவர்கள் ஏற்கெனவே பதிவேற்றப்பட்ட வீடியோக்களையும் பார்க்கலாம். செயல்திறன் மேம்பாட்டு நுணுக்கங்களை அறிந்துகொள்ள சிறந்த வழி என்பதோடு, அடுத்ததாக என்ன புத்தகம் படிக்கலாம் என்பதற்கான வழிகாட்டியாகவும் இவற்றைக் கருதலாம். இந்த வீடியோ விளக்கத்துக்குப் பிறகு மூல நூலைப் படிப்பது இன்னும் சுவாரசியமாக இருக்கும். இதே பெயரிலான இணையதளமும் இருக்கிறது. வீடியோவில் இடம்பெறும் புத்தகச் சுருக்கத்தின் பிடிஎஃப் வடிவங்கள் இந்தத் தளத்தில் இடம்பெற்றுள்ளன.

மேதைகளின் பாதை (http://www.evancarmichael.com/)

புத்தகங்களைப் பார்த்துக் கற்றுக்கொள்வதைவிட, முன்னணித் தொழிலதிபர்கள் வாழ்க்கையிலிருந்தும் செயல்திறனுக்கான வழிகளைக் கற்றுக்கொள்ளலாம். அதைத்தான் இவான் கார்மைக்கேல் என்பவரின் யூடியூப் சேனல் செய்கிறது. ஸ்டீவ் ஜாப்ஸ் முதல் வாரன் பஃபேவரை பலரது வாழ்க்கையில் இருந்தும் முன்னேற்றத்துக்கான வழிகளைத் தனது வீடியோக்கள் மூலம் இவர் தொகுத்தளிக்கிறார். கனடாவைச் சேர்ந்தவரான இவானும் ஒரு தொழில்முனைவோர்தான். வெற்றிகரமான தொழில்முனைவோர்களின் வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொள்ளக்கூடியவற்றை வீடியோ வழியில் விளக்கி ஊக்கம் அளிக்கிறார். யூடியூப் சேனலில் இவருக்கு ஏழு லட்சத்துக்கும் மேற்பட்ட சந்தாதாரர்கள் இருக்கின்றனர். அமைதியான தூக்கம், முடிவெடுக்கும் ஆற்றல், வெற்றிக்கான வழிகள் எனப் பல்வேறு விஷயங்களில் வழிகாட்டுகிறார். தொழில்முனைவில் ஆர்வம் கொண்டவர்களுக்கு இந்த இணையதளம் கூடுதலாக ஊக்கம் அளிக்கும்.

கேரியைக் கேளுங்கள் (https://www.garyvaynerchuk.com/)

அமெரிக்கரான கேரி வெயனர்சக் தொழில் நிறுவனங்களைத் தொடங்குவதையே தொழிலாக வைத்துக்கொண்டிருப்பவர். தொடர் தொழில்முனைவாளர் என்று வர்ணிக்கப்படுகிறார். இணைய ஆற்றலைப் புரிந்துகொண்டு அவற்றைத் தொழில் வாய்ப்புகளாக மாற்றுவது கேரிக்குக் கைவந்த கலை. தொழில் அனுபவத்தில் தான் கற்ற பாடங்களை கேரி வீடியோவாகப் பகிர்ந்துகொள்கிறார். தானே ஒரு தொடர் நிகழ்ச்சியையும் நடத்திவருகிறார். என் வாழ்க்கையின் வெற்றிக்குப் பொறுமைதான் முக்கியக் காரணம் என ஒரு வீடியோவில் உற்சாகமாகச் சொல்கிறார். இவரது வாழ்க்கைப் பாடங்கள் உங்களுக்கும் ஊக்கம் அளிக்கலாம். 7 லட்சத்துக்கும் மேற்பட்ட சந்தாதாரர்களைக் கொண்ட யூடியூப் சேனல் தவிர, தனது பெயரில் இணையதளத்தையும் நடத்திவருகிறார்.

இணைய நுணுக்கங்கள் (https://www.youtube.com/user/dottotech)

செயல்திறன் மேம்பாட்டுக் குறிப்புகள் இணையப் பயன்பாடு சார்ந்ததாக இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என நீங்கள் நினைத்தால் ஸ்டீவ் டோட்டோவின், டோட்டோடெக் சேனலை நாடலாம். கூகுள் வரைபடச் சேவையைப் பயன்படுத்தும் வழிகள், இணையக் குறிப்பேடு சேவையான எவர்நோட்டை இன்னும் சிறப்பாகப் பயன்படுத்துவது எப்படி? ஜிமெயிலில் நீங்கள் அறிய வேண்டியவை எனப் பல்வேறு விதமான இணைய நுணுக்கங்களை வீடியோவில் இவர் விளக்குகிறார். பிரவுசர் குறிப்புகள் முதல் பாஸ்வேர்டு பாதுகாப்பு வரை எண்ணற்ற விஷயங்களை அறியலாம். தினம் ஒரு வீடியோவாகப் பார்த்து வந்தால்கூட போதும். இணையப் பயன்பாட்டில் நீங்கள் கில்லாடியாகிவிடலாம். தொழில்நுட்ப சந்தேகங்கள் இருந்தாலும் இவரிடம் கேட்டுத் தெளிவு பெறலாம்.

மாணவர்களுக்கு.. (https://collegeinfogeek.com/)

நீங்கள் மாணவராக இருந்து கற்றல் திறனை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என விரும்பினால் ‘காலேஜ்இன்ஃபோஜீக்’ யூடியூப் சேனல் அதற்கு வழிகாட்டுகிறது. படித்தவற்றை எப்படி மறக்காமல் நினைவில் நிறுத்திக்கொள்வது, அதிகாலைப் பழக்கங்களை ஏற்படுத்திக்கொள்வது எப்படி, சுய ஒழுக்கத்தை உருவாக்கிக் கொள்வது எப்படி, வகுப்பில் குறிப்புகள் எடுப்பது எப்படி எனப் பலவகையான தலைப்புகளில் வீடியோக்கள் வழிகாட்டுகின்றன. அமெரிக்கத்தன்மை இருந்தாலும் இதில் இடம்பெறும் குறிப்புகள் பொதுவானவை. தாமஸ் பிராங்க் என்பவர் இந்த சேனலை நடத்தி வருகிறார். இவருக்கும் தனியே இணையதளம் இருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

2 days ago

தொழில்நுட்பம்

4 days ago

தொழில்நுட்பம்

4 days ago

தொழில்நுட்பம்

4 days ago

தொழில்நுட்பம்

7 days ago

தொழில்நுட்பம்

8 days ago

தொழில்நுட்பம்

11 days ago

தொழில்நுட்பம்

11 days ago

தொழில்நுட்பம்

14 days ago

தொழில்நுட்பம்

15 days ago

தொழில்நுட்பம்

15 days ago

தொழில்நுட்பம்

17 days ago

தொழில்நுட்பம்

17 days ago

தொழில்நுட்பம்

18 days ago

தொழில்நுட்பம்

18 days ago

மேலும்