எங்கே சென்றாலும், அங்கு இணைய இணைப்பு வேகமாக இருக்குமா, வயர்லெஸ் சிக்னல் வலுவாக இருக்குமா என்பன போன்ற கேள்விகளே மனதில் எழுகின்றன. இணையத்தின் தேவைதான் இப்படிக் கேட்க வைக்கின்றன. இணைய வசதி உள்ள இடங்களில்கூட, அதன் தரத்தை சீர்தூக்கிப் பார்க்கவே தோன்றுகிறது. இணையம் அந்த அளவுக்கு முக்கியமாகி இருக்கிறது.
இது நவீன வாழ்க்கையின் இயல்பு என்றாலும், எப்போதாவது இணையம் இல்லாத இடங்கள் பற்றி யோசித்திருக்கிறோமா? நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த வடிவமைப்பாளரான ரிச்சர்டு விஜென் இந்தக் கேள்வியைக் கேட்டு அதற்கான பதிலைத் தேட உதவும் செயலியை உருவாக்கியிருக்கிறார். ‘ஒயிட் ஸ்பாட்ஸ்' எனும் பெயரிலான அந்தச் செயலி பற்றிப் பார்ப்பதற்கு முன் விஜென் பற்றி அறிந்துகொள்ள வேண்டும்.
டிஜிட்டல் கலைஞர்
விஜென் டிஜிட்டல் கலைஞர்கள் என்று குறிப்பிடக்கூடிய நவீன பிரிவின் கீழ் வருகிறார். கலைக்காக அவர் கையாளும் சாதனங்கள் மட்டும் புதிதல்ல. அவர் உருவாக்கும் கலையும் புதுமையானவை. ஆய்வு மற்றும் வடிவமைப்பு வாயிலாக ‘பிக் டேட்டா' எனப்படும் தரவுகளின் குவியல்களிலிருந்து பெரிய கதைகளைத் தேட முற்படுவதாக அவர் சொல்கிறார்.
தகவல்களைக் காட்சியாக உருவகப்படுத்திப் பார்க்கும் வகையிலான டிஜிட்டல் படைப்புகளை அவர் உருவாக்கிக் கொண்டிருக்கிறார். இந்த வரிசையில்தான் சமீபத்திய செயலியான ‘ஒயிட் ஸ்பேஸ்' வருகிறது.
இந்தச் செயலி பற்றிப் பார்க்கும் முன், இதற்கு முன்பாக அவர் உருவாக்கிய செயலியை அறிந்துகொள்வது பொருத்தமாக இருக்கும். ஏனெனில் அந்தச் செயலியின் தொடர்ச்சியாகவே இது அமைந்துள்ளது.
விஜென் உருவாக்கியுள்ள செயலிகள் நாம் வழக்கமாக அறிந்திருக்கும் செயலிகளைப் போன்றவை அல்ல. நோக்கம், செயல்பாடு இரண்டிலுமே அவை வித்தியாசமானவை. அவை அடிப்படையில் டிஜிட்டல் கலைப் படைப்புகள். அதே நேரத்தில் நம் காலத்துத் தகவல்களைப் புரிய வைப்பவை!
மறைந்திருக்கும் தகவல் உலகம்
‘ஒலியின் கட்டிடக்கலை' எனப் பொருள்படும் வகையிலான ‘ஆர்கிடெக்சர் ஆப் சவுண்ட்' என்பதுதான் விஜென் இதற்கு முன்னர் உருவாக்கிய செயலி. நம்மைச் சுற்றியுள்ள கண்ணுக்குத் தெரியாத தகவல் உலகைக் காட்சிப்படுத்திப் பார்க்க வழி செய்யும் செயலி இது. ஜெர்மனியில் உள்ள கலைக்கூடத்தை இதைக் கண்காட்சியாக நிறுவி அதற்குத் துணையாக ஒரு ‘ஐபேட்' செயலியையும் உருவாக்கியிருந்தார்.
நாம் இணையத்தை எளிதாகப் பயன்படுத்துகிறோம். ஆனால் இணயத்தை நம்மால் கண்ணால் பார்க்க முடிவதில்லை. இதைப் பார்க்கச் செய்யும் வகையில், இந்தச் செயலி ஜி.பி.எஸ் மூலம் இருப்பிடத்தை உணர்ந்துகொண்டு சுற்றியுள்ள செல்போன் கோபுரங்கள், செயற்கைக்கோள்கள் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டுகிறது. அதோடு, வைஃபை ரவுட்டர்கள், கேபிள்கள் மூலம் நம்மைச் சுற்றி சுழன்றுகொண்டிருக்கும் தரவுகளின் கட்டமைப்பையும் பார்க்க வைக்கிறது.
ஒரு தகவல் கலைஞராக நம்மால் பார்க்க முடியாமல் இருப்பதைக் காட்சிப்படுத்திக் காட்டுவதே தனக்குச் சுவாரஸ்யம் அளிப்பதாக அவர் சொல்கிறார். 24 மணி நேரமும் நாம் இணையம் அல்லது வயர்லெஸ் மூலம் சாதனங்களுடன் இணைக்கப்பட்டிருக்கிறோம். ஆனாலும் தகவல் உலகின் அடிப்படைக் கட்டமைப்பு நம் கண்ணில் படாமல் மறைந்திருக்கிறது என்கிறார் அவர். வைஃபை ரவுட்டர்கள் புத்தக அலமாரியின் பின்னே மறைந்திருக்கின்றன. செல்போன் கோபுரங்கள் கட்டிடங்களுடன் கட்டிடங்களாகக் கலந்திருக்கின்றன.
ஏன் முக்கியம்?
இப்படிக் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும் டிஜிட்டல் பரப்பை, உருவகப்படுத்துவதன் மூலம் ஐபேடில் பார்க்க வைக்கிறார் விஜென். இதென்ன அத்தனை முக்கியமா என்று கேட்கலாம்.
‘நம்முடைய காலத்தில் எது நீக்கமற நிறைந்திருக்கிறதோ அதை நம்மால் பார்க்க முடியாமல் இருப்பது என்னைக் கவலையில் ஆழ்த்துகிறது' என்கிறார் விஜென். தொழில்நுட்பம் மேலும் மேலும் வெளிப்படையான தன்மை கொள்ளும்போது, நம் வாழ்க்கையில் முக்கிய அங்கம் வகிக்கும் தரவுகளுடன் தொடர்புகொள்ளக் காட்சிப்படுத்தல் உதவுகிறது என்றும் அவர் சொல்கிறார். இதைத்தான் நம்மைச் சுற்றியிருக்கும் தகவல் மண்டலமாக அவர் உருவாகப்படுத்திக் காட்டியிருக்கிறார்.
இதன் தொடர்ச்சியாகத்தான் ‘ஒயிட் ஸ்பாட்ஸ்' செயலியை வடிவமைத்துள்ளார். இந்தச் செயலியை இயக்கியதுமே அது நம்மைச் சுற்றியுள்ள செல்போன் கோபுரங்களையும், அவை நம்முடன் எப்படித் தொடர்பு கொண்டுள்ளன என்பதையும் பார்க்க முடியும். நாம் இருக்கும் இடத்திலிருந்து அவை எவ்வளவு தொலைவில் உள்ளன என்பதைத் தெரிந்து கொள்ளலாம். ஸ்மார்ட்போனை உயர்த்திப் பார்ப்பதன் மூலம் இந்த விவரங்களைத் திரையில் காணலாம். இதன் மூலம் நம்மைச் சுற்றியுள்ள இணைய உலகைக் காட்சிப்படுத்திக்கொள்ளலாம். இது முதல் பகுதிதான்.
இனி அடுத்த கட்டமாக, இணையம் இல்லாத இடங்களுக்கு அழைத்துச் செல்லவும் எனக் கட்டளையிட்டால், திரையில் வெள்ளைக் கோடுகள் தோன்றுகின்றன. இவையெல்லாம் இணைய வசதி இல்லாத இடங்கள். இவை பெரும்பாலும் கடல் பரப்பில் அமைந்திருதாலும், நிலப்பரப்பிலும் பல பகுதிகளில் வெள்ளைக் கோடுகளைப் பார்க்கலாம். அங்கெல்லாம் இணைய இணைப்போ வயர்லெஸ் வசதியோ இல்லை எனப் புரிந்துகொள்ளலாம்.
பொதுவாக இணையத்தை நாம் புவியியல் நோக்கில் பார்ப்பதில்லை, ஆனால் அது அந்த தன்மை கொண்டதே என்கிறார் விஜென். அவரது செயலி இதைப் புரிய வைக்கிறது.
21-ம் நூற்றாண்டில் இணைய வசதி இல்லாத இடங்களில் இருப்பவர்கள் எந்தத் தரவுகளையும் உற்பத்தி செய்வதில்லை, அவர்களை கூகுளில் தேட முடியாது. மேலும் அவர்கள் இணையம் மூலம் புரிந்து கொள்ளப்படும் உலகில் அங்கம் வகிக்காதவர்களாக இருக்கின்றனர் என்கிறார் விஜென்.
இவற்றை எல்லாம் உணரக்கூடிய வகையில், இணைய வசதி இல்லாத பகுதிகளில் வசிப்பவர்களிடம் எடுக்கப்பட்ட கதைகள் மற்றும் வீடியோக்களையும் வரைபடத்தின் மூலம் அணுக வழி செய்யப்பட்டுள்ளது.
இந்தச் செயலியை ஆண்ட்ராய்டு போன்களில் அணுகலாம். சொடுக்க:
ரிச்சர்ட் விஜ்ஜென் படைப்புகள் பற்றி அறிந்துகொள்ள: >http://www.richardvijgen.nl/
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
6 hours ago
தொழில்நுட்பம்
1 day ago
தொழில்நுட்பம்
1 day ago
தொழில்நுட்பம்
3 days ago
தொழில்நுட்பம்
3 days ago
தொழில்நுட்பம்
3 days ago
தொழில்நுட்பம்
10 days ago
தொழில்நுட்பம்
10 days ago
தொழில்நுட்பம்
16 days ago
தொழில்நுட்பம்
17 days ago
தொழில்நுட்பம்
17 days ago
தொழில்நுட்பம்
18 days ago
தொழில்நுட்பம்
21 days ago
தொழில்நுட்பம்
22 days ago
தொழில்நுட்பம்
24 days ago