ஐரோப்பாவில் உள்ள எல்லா நாடுகளையும் சுற்றிப் பார்ப்பது சாத்தியமா? அது, உங்கள் கைவசம் உள்ள நேரத்தையும் வசதியையும் பொறுத்தது. சில நாட்கள் முதல் ஓரிரு வாரங்கள் செலவிட முடிந்தால், ஐரோப்பாவின் முக்கிய நாடுகளைச் சுற்றிப் பார்த்துவிட்டு வரலாம். ஆனால், அப்போதும்கூடப் பல நாடுகளைத் தவறவிட வேண்டியிருக்கும். கால் வைத்த நாடுகளில் கூட, அடையாளத்துக்குச் சில இடங்களைப் பார்க்கலாம். அவ்வளவுதான். ஆனால், இந்த அனுபவமே மறக்க முடியாததாக இருக்கும் என்பது வேறு விஷயம்.
ஐரோப்பாவுக்குச் சுற்றுலா செல்வது சாத்தியமோ இல்லையோ, நீங்கள் விரும்பினால் ஐரோப்பியக் கலாச்சாரம் மற்றும் அதன் செழுமையான பாரம்பரியத்தில் மூழ்கி மகிழலாம் தெரியுமா? ‘யூரோபியானா’ என்ற இணையதளம் ( >http://www.europeana.eu/portal/en# ) இதைச் சாத்தியமாக்குகிறது. அரை மணி நேரத்தை இந்தத் தளத்தில் செலவிட முடிந்தால், ஐரோப்பாவின் கலாச்சாரச் செழுமை, ஃபேஷன் பெருமைகள் போன்ற பலவற்றை ஒளிப்படங்களாகப் பார்த்து மகிழலாம். இசைக்கோவைகளைக் கேட்டு ரசிக்கலாம். கலைப் பொருட்களைப் பார்த்து வியக்கலாம்.
இணையம் ஓர் அற்புதம் என்பதைப் பலமுறை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். சில அரிய தருணங்களில் இந்த அற்புதத்தை நீங்களே உணர்ந்திருக்கலாம். யூரோபியானா இணைய தளத்தில் நுழைந்ததுமே அத்தகைய தருணத்தை உங்களால் உணர முடியும். இந்த உணர்தலை ஒளிப்படங்களில் இருந்தே தொடங்கலாம். ஏனெனில், சமீபத்தில்தான் இந்தப் பகுதி அறிமுகமாகியிருக்கிறது. ‘யூரோபியானா போட்டோகிராபி’ எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்தப் பகுதி, 20 லட்சத்துக்கும் மேற்பட்ட வரலாற்று ஒளிப்படங்களைக் கொண்டிருக்கிறது. 34 ஐரோப்பிய நாடுகளின்
50க்கும் மேற்பட்ட அருங்காட்சியக அமைப்புகளின் பங்களிப்புடன் இந்த ஒளிப்படத் தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது.முகப்புப் பக்கத்தில், ஐரோப்பியக் கலை, ஐரோப்பிய ஃபேஷன், ஐரோப்பிய இசை என வரிசையாக உள்ள பட்டியலில் ஐரோப்பிய ஒளிப்படங்கள் எனும் தலைப்பில் இந்தப் படங்களைப் பார்த்து ரசிக்கலாம். ஒளிப்படக் கலையில் விஷயம் தெரிந்தவர்கள் எனில், ஐரோப்பாவின் புகழ் பெற்ற ஒளிப்பட மேதைகளின் பெயரைத் தட்டச்சு செய்து அவர்களின் ஒளிப் படைப்புகளைத் தேடலாம். குறிப்பிட்ட தலைப்புகள் சார்ந்தும் ஒளிப்படங்களை அணுகலாம்.
சும்மா சொல்லக் கூடாது, ஐரோப்பிய ஒளிப்படக் கலையின் முதல் நூறு ஆண்டுகளில் எடுக்கப்பட்ட ஒளிப்படங்களையும் இந்தப் பகுதியில் பார்த்து ரசிக்க முடிகிறது. எதைப் பார்ப்பது, எப்படிப் பார்ப்பது எனத் திகைத்து நிற்பவர்களுக்கு வழிகாட்டும் வகையில் இந்தத் தளமே இணையக் கண்காட்சிகளாக விளக்குகிறது. உதாரணத்துக்கு, ‘இயந்திரங்களின் யுகத்தில் எடுக்கப்பட்ட தொழிற்கூடப் படங்கள்’ கண்காட்சி மூலம் அந்தக் காலத் தொழிற்சாலைகள், இயந்திரங்கள், தொழிலாளர்கள் உள்ளிட்டவற்றை ஒளிப்படங்களாகப் பார்த்த படி பின்னோக்கிச் செல்லலாம். இதே போல குறிப்பிட்ட தலைப்புகள், கலைஞர்கள் சார்ந்த ஒளிப்படங்களையும் காணலாம்.
அந்தக் கால ஐரோப்பா எப்படி இருந்தது என்று பார்க்க விரும்பினாலும் சரி, கால வெள்ளத்தில் ஐரோப்பா எப்படி மாறிவந்திருக்கிறது என்று அறிய விரும்பினாலும் சரி, ஒளிப்படங்கள் வாயிலாக அந்த அனுபவத்தைப் பெறலாம். அவரவர் விருப்பம் அல்லது தேடலுக்கு ஏற்ப மிலன், லண்டன் என நகரங்களின் பெயரைத் தட்டச்சு செய்து ஒளிப்படங்களைத் தேடலாம். ஐரோப்பிய ஃபேஷனில் ஏற்பட்ட மாற்றங்கள், கலாச்சாரச் சுவடுகள், மனிதர்கள் எனப் பல விதங்களில் வரலாற்றின் பக்கங்களைத் திரும்பிப் பார்க்கலாம். உதாரணத்துக்கு, ஐரோப்பிய நடன அறைகளில் அணியப்பட்ட ஆடைகளைச் சித்தரிக்கும் ஒளிப்படங்களைப் பார்த்து ரசிக்கலாம். அதே போல பிரபலங்களின் ஃபேஷனையும் பார்க்கலாம்.
ஒளிப்படங்களைப் பயன்படுத்துவது தொடர்பான காப்புரிமை சார்ந்த விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. வண்ணங்கள், கால வரிசை எனப் பல விதங்களில் தேடலை மாற்றி அமைத்துக்கொள்ளும் வசதி இருக்கிறது. குறிப்பிட்ட ஒளிப்படம் கவனத்தை ஈர்த்தால், அந்தப் படம் தொடர்பான மேலதிகத் தகவல்கள், அதைப் பகிர்ந்துகொண்டுள்ள அருங்காட்சியக அமைப்பு குறித்த விவரங்கள் ஆகியவற்றையும் தெரிந்துகொள்ளலாம்.
ஒளிப்படங்களின் தேடல் இந்தத் தளத்தின் ஓர் அம்சம்தான். ஐரோப்பா தொடர்பான இன்னும் பல விஷயங்களைத் தேடலாம். குறிப்பிட்ட நாடு தொடர்பாக அறிய விரும்பினால், அந்த நாடு தொடர்பாக உள்ள ஒளிப்படங்கள் உள்ளிட்ட தகவல்கள் பட்டியலாகத் தோன்றுகின்றன. காணொலிகள், ஒலிக்கோப்புகள், புத்தகங்கள், கலை வடிவங்கள் எனப் பல வகையான தகவல்கள் அணிவகுக்கின்றன. தேவை எனில், தேடலில் ஈடுபடும்போது எந்த வகையான தகவல் வேண்டும் எனத் தேர்வு செய்துகொள்ளலாம். ஒளிப்படங்களைத் தேர்வு செய்தால் படங்கள் மட்டும் வரும். இசை, கலையைத் தேர்வு செய்தால் தொடர்புடைய தகவல்களைக் காணலாம்.
சோவியத் யூனியன் வரலாற்றில் ஆர்வம் உள்ளவர்கள் ரஷ்யப் புரட்சிக்கு வித்திட்ட லெனினின் அரிய ஒளிப்படங்களைக் காணலாம். அதேபோல, உளவியல் மேதை சிக்மண்ட் பிராய்டின் ஒளிப்படங்களைக் காணலாம். லண்டன் தெருக்களில் உலாவலாம். மிலன் ஃபேஷன் போக்குகளைக் கண்டு வியக்கலாம்.
இந்தத் தளத்தைப் பயன்படுத்த வரலாற்றில் ஆர்வம் கொண்ட வராகவோ ஆய்வாளராகவோ இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. சாமானியர்களைக் கவரக்கூடிய அம்சங்களும் இங்கே உள்ளன.
ஐரோப்பியப் பாரம்பரியம் தொடர்பான தரவுகளை இணையம் மூலம் அனைவருக்கும் அளிக்கும் நோக்கில் ‘யூரோபியானா’ அமைப்பு இந்தத் தளத்தை நடத்திவருகிறது. பல ஐரோப்பிய அமைப்புகள் ஒன்றிணைந்து உருவாக்கிய ஐரோப்பிய அறக்கட்டளை சார்பில் இந்தத் தளம் செயல்பட்டுவருகிறது. கலைப் படைப்புகளும், ஒளிப்படங்களும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு, பகிரப்படும்போது என்னவெல்லாம் சாத்தியம் என்பதையும், கூட்டு முயற்சியின் அருமையையும் உணர்த்தும் வகையிலும் இந்தத் தளம் அமைந்துள்ளது.
யூரோபியானா திட்டம் பற்றிய அறிமுகம் : >http://pro.europeana.eu/about-us/our-vision
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
3 days ago
தொழில்நுட்பம்
4 days ago
தொழில்நுட்பம்
4 days ago
தொழில்நுட்பம்
5 days ago
தொழில்நுட்பம்
8 days ago
தொழில்நுட்பம்
9 days ago
தொழில்நுட்பம்
11 days ago
தொழில்நுட்பம்
11 days ago
தொழில்நுட்பம்
14 days ago
தொழில்நுட்பம்
16 days ago
தொழில்நுட்பம்
16 days ago
தொழில்நுட்பம்
17 days ago
தொழில்நுட்பம்
18 days ago
தொழில்நுட்பம்
18 days ago
தொழில்நுட்பம்
18 days ago