மூளையைக் கசக்கிப் பிழிந்து ஒரு ஸ்டேட்டஸைத் தட்டிவிட்டால், அதற்கு நோட்டிபிகேஷனாக கேண்டி கிரஷ் சாகா விளையாடும் அழைப்பு வந்தால் எவ்வளவு கோபம் வரும் என்பது நெட்டிசன்களுக்குத்தான் தெரியும். சைடுபார் விளம்பரங்கள், டேக்கிங் தொல்லைகள், தொடர்பில்லாத அழைப்புகள் என இப்படி பேஸ்புக்கை நினைத்து பொங்க எவ்வளவோ இருக்கிறது. என்ன செய்வது லைக்கிற்கும், ஷேருக்கும் ஏங்கி இந்தத் தொல்லைகளைப் பொறுத்துக்கொண்டிருக்கிறார்கள் ஃபேஸ்புக்கர்கள்.
ரிசொல்யூஷன் எடுத்து சிகரெட்டை விட்டவர்கள்கூட, ஃபேஸ்புக்கை விட முடியாமல் தவிக்கிறார்கள். மார்க் என்ன சத்திரமா நடத்துறாரு, விளம்பரம் போட்டா தானே அவரும் நாலு காசு பார்க்க முடியும் என்ற சமாதானங்களும் உண்டு.
வந்துவிட்டது ‘எல்லோ’
இந்த நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக நெட்டிசன்கள் மத்தியில் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது எல்லோ. “சமூக வலைதளங்களில் உங்களைப் பல்லாயிரம் பேர் பின் தொடரலாம், உங்கள் ஸ்டேட்டஸுக்கு லட்சம் லைக்ஸ் விழலாம், சாட்டிங், போக்கிங் என்று பட்டையைக் கிளப்பிலாம். ஆனால், நீங்கள் ஒரு சந்தைப்பொருள், ஒவ்வொரு கணமும் நீங்கள் விற்பனை செய்யப்படுகிறீர்கள்” இந்த வாசகங்களோடு இணைய உலகில் கால் பதித்துள்ளது ‘எல்லோ’.
அது என்ன எல்லோ.. என்கிறீர்களா? பேஸ்புக், டிவிட்டருக்குப் போட்டியாக வந்திருக்கும் மற்றுமொரு சமூக வலைதளம். எளிமை, அழகு, விளம்பரமின்மை போன்ற வார்த்தைகளைக் கூறி நெட்டிசன்களுக்கு வலை விரித்து வருகிறது ‘எல்லோ’.
அமெரிக்காவைச் சேர்ந்த பால் பட்னிட்ஸ் என்பவர் இந்தத் தளத்தை உருவாக்கியுள்ளார். அவரது சுயவிவரக் குறிப்பே நெட்டிசன்களைக் கொஞ்சம் மெர்சலாக்குகிறது. ரோபோட்டிக் பொருட்கள் விற்பனை, பொம்மை சைக்கிள் வியாபாரம், கொஞ்ச நாள் போட்டோகிராபி, அப்புறம் குறும்படம் எனப் பல வேலைகளைச் செய்தவர், 48-வது வயதில் எல்லோவை உருவாக்கியிருக்கிறார்.
எப்படி இணைவது?
எல்லோவில் மற்ற சமூக வலைதளங்கள்போல், எடுத்த எடுப்பிலேயே கணக்கு தொடங்கிவிட முடியாது. முதலில் நாம் அவர்களின் பக்கத்துக்கு போய், நமது மின்னஞ்சலுக்கு ஒரு அழைப்பிதழ் அனுப்பச் சொல்ல வேண்டும். அவர்களும் அன்போடு அனுப்பி வைப்பார்கள். அவர்கள் அனுப்பும் அழைப்பிதழின் சுட்டியைக் கிளிக்கினால், அது எல்லோ பற்றிய கொள்கைகள் விளக்கி விரிகிறது.
உசுப்பேற்றும் கொள்கை
எல்லோவின் அறிமுகப் பக்கத்தில், “நீங்கள் ‘காஃபி குடித்தேன்’ என்று போடும் சில்லி ஸ்டேட்டஸில் ஆரம்பித்து, ‘கல்யாணம் செய்துகொண்டேன்’ எனப் பதியும் லைஃப்டைம் ஹிஸ்டரிவரை எல்லாவற்றையும் பதிவுசெய்யலாம். ‘உங்கள் பக்கத்தை மட்டுமன்றி, நண்பர்கள் பக்கம், நண்பர்களின் நண்பர்கள் பக்கம் என எல்லாவற்றையும் கண்காணித்து டேட்டாவாக்கி, டேட்டாவை மெட்டா டேட்டாவாக்கி, சந்தைப்படுத்துகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் உங்கள் சமூக வலைதளப் பக்கத்திற்கு நீங்கள் உரிமையாளர் இல்லை. எல்லாம் இந்த விளம்பரதாரர்கள்தான். இந்த நிலை மாற வேண்டாமா?” இப்படி உசுப்பலாக உள்ளது அந்தக் கொள்கை விளக்கப் பத்தி.
குவியும் நெட்டிசென்கள்
எல்லோவின் கொள்கைகள் தற்போது மணிக்கு 30 ஆயிரம் பேரை, அந்தத் தளத்திற்குச் செல்ல வைத்துள்ளது. கிட்டத்தட்ட ஒரு ஸ்மார்ட்போனின் ஹோம் ஸ்கிரீனைப் போல் இருக்கும் அந்தத் தளத்தில் ஏற்கெனவே கணக்கு தொடங்கியுள்ள 9 பேரின் முகங்கள் வட்டத்திற்குள் சிரிக்கின்றன. பேஸ்புக்கிலிருந்து வித்தியாசப்படும் விதத்தில் துளிக்கூட விளம்பரங்கள் இல்லாமல் உள்ளது. மேலும் பேஸ்புக்கில் ஒரு கணக்கை அழிக்க 15 நாட்களுக்குக் காத்திருக்க வேண்டும். ஆனால் எல்லோவில் அப்படியில்லை. அந்தக் கணமே கணக்கை அழிக்க முடியும். மேலும் பதிவேற்றும் தகவல்களைப் பத்திரமாகப் பதிவுசெய்து வைக்கத் தனியே டேட்டா சென்டர் நிறுவியுள்ளார்களாம். நாம் பதிவேற்றும் தகவல்களை எப்போது வேண்டுமானாலும் பதிவிறக்கலாம், கணக்கை அழித்த பிறகுகூட இது சாத்தியம்.
போலிக்கு அனுமதி இல்லை
மேலும் எல்லோவில் ஆபாசப் பதிவர்கள், வன்முறையைத் தூண்டுபவர்கள், முக்கியமாக ஃபேக் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களைக் கண்டறியத் தனிக்குழு இருக்கிறது. அதனால் போலி அக்கவுண்ட்கள் உடனுக்குடன் நீக்கப்படுமாம். தேவையில்லாமல் ஒருவரை டேக் செய்ய முடியாது. இப்படி ஏகப்பட்ட விஷயங்களை வகை தொகையின்றி அடுக்கிக் கொண்டே போகிறார்கள் எல்லோ நிறுவனத்தார்கள்.
எது எப்படியோ இந்த எல்லோ பேஸ்புக்கை அழிக்கும் முயற்சியென்று அப்பட்டமாகத் தெரிகிறது. ஆனால் இந்த முயற்சி, ஃபேஸ்புக்கைக் கொண்டே மேற்கொள்வதுதான் எல்லோரையும் கவனிக்க வைத்துள்ளது. அதாவது, இந்தத் தளத்தில் கணக்கு தொடங்க வேண்டுமென்றால், ஒருவருக்குத் தனக்கு ஏற்கெனவே இருக்கும் ஃபேஸ்புக் பக்கத்திலும் இதைப் பற்றிப் பகிர வேண்டும்.
இப்படியாக எத்தனிக்கும் எல்லோ என்ன சாதிக்க போகிறது என்பதைக் காலம்தான் சொல்ல வேண்டும்.
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
20 hours ago
தொழில்நுட்பம்
3 days ago
தொழில்நுட்பம்
3 days ago
தொழில்நுட்பம்
6 days ago
தொழில்நுட்பம்
7 days ago
தொழில்நுட்பம்
7 days ago
தொழில்நுட்பம்
9 days ago
தொழில்நுட்பம்
9 days ago
தொழில்நுட்பம்
10 days ago
தொழில்நுட்பம்
10 days ago
தொழில்நுட்பம்
14 days ago
தொழில்நுட்பம்
16 days ago
தொழில்நுட்பம்
17 days ago
தொழில்நுட்பம்
17 days ago
தொழில்நுட்பம்
20 days ago