அமெரிக்காவில் உள்ளது ஜாக்சன் நகரம். அந்த நகரத்துக்கு இப்போது இணையத்தில் திடீர் புகழ்! ஏன்? அந்த நகரிலிருந்து ஒளிபரப்பாகும் வீடியோ காட்சி ஒன்றுதான் இந்தத் திடீர் புகழுக்குக் காரணம்.
‘லைவ் ஸ்ட்ரீமிங்' முறையில் நேரடியாக ஒளிபரப்பாகும் இந்தக் காட்சியை ஆயிரக்கணக்கான இணையவாசிகள் ஆர்வத்துடன் பார்த்து ரசிக்கின்றனர். அது மட்டுமல்ல, அந்த வீடியோவில் பார்க்கும் விஷயங்களை மையமாகக் கொண்டு இணைய அரட்டையிலும் ஈடுபட்டுவருகின்றனர். இதற்காகவென்றே பிரத்யேக ‘ஹாஷ்டேக்' உருவாக்கப்பட்டு டிவிட்டரிலும் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டுவருகின்றனர்.
இந்த வீடியோவின் திடீர் புகழ் இணையத்தின் கவனத்தை ஈர்த்திருப்பதுடன் குழப்பத்திலும் ஆழ்த்தியுள்ளது. குழப்பத்திற்குக் காரணம் அந்த வீடியோ ஏன் பார்க்கப்படுகிறது என்பதற்கான காரணம் யாருக்கும் தெரியவில்லை என்பதுதான். அந்த வீடியோவில் அப்படி என்ன இருக்கிறது என்பது புரியாத புதிராக இருக்கிறது.
குறிப்பிட்ட அந்த வீடியோவை முதன்முறை பார்க்கும்போது உங்களுக்கும் இந்தக் கேள்வி நிச்சயம் மனதில் எழலாம். ஆனால் ஆச்சரியமான விஷயம் என்னவெனில், நீங்களும்கூட அந்த வீடியோவை ரசிக்கலாம் என்பதுதான்! அது மட்டுமல்ல, இந்த வீடியோவை ஏன் ரசிக்கிறோம் என்பது உங்களுக்கும்கூட புரியாத புதிராக இருக்கலாம்.
இப்படி, வைரலாகப் பரவும் வீடியோக்கள் இணையத்திற்குப் புதிதல்ல. ஆனால் பெரும்பாலும் அந்த வீடியோக்கள் வைரலாகப் பரவியதற்கான காரணம் ஒன்று இருக்கும். வீடியோவைப் பார்க்கும்போதே அதைப் புரிந்துகொள்ளலாம். ஆனால், இணையத்தைக் கவர்ந்திருக்கும் ஜாக்சன் நகர வீடியோவைப் பொறுத்தவரை இப்படி எந்தக் காரணத்தையும் கூற முடியாது.
அமெரிக்காவின் யோமிங் மாநிலத்தில் இந்த ஜாக்சன் நகரம் அமைந்துள்ளது. ‘ஜாக்சன் ஹோல்' எனக் குறிப்பிடப்படும் பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள இந்த நகரின் சதுக்கத்தின் சாலை சந்திப்புக் காட்சிதான் வீடியோவில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. சுற்றிலும் இயற்கை எழிலான சூழல் அமைந்திருந்தாலும் ஒரு சாலை சந்திப்புக் காட்சியில் சுவாரஸ்யமாக என்ன இருந்துவிட முடியும்?
கார்களும் டிரக்குகளும் என வாகனங்கள் சென்று கொண்டிருக்கும். மனிதர்கள் கடந்து செல்வார்கள். மற்ற நேரங்களில் அதிக இயக்கம் இல்லாமல் அமைதியாக இருக்கும். இந்தக் காட்சிதான் ‘வெப்கேமரா' வழியே பதிவாகி யூடியூப்பில் ஆர்வத்துடன் பார்த்து ரசிக்கப்படுகிறது. இது ஏன் என்றுதான் யாருக்கும் புரியவில்லை.
ஒரு சாலை சந்திப்புக் காட்சியை நேரில் பார்த்தாலே அலுப்பூட்டுகிறது என அலட்சியம் செய்து விடுவோம். அப்படியிருக்க, கேமரா மூலம் பதிவாகும் சாலை சந்திப்புக் காட்சியை அலுப்பில்லாமல் பலரும் பார்த்து ரசிப்பது எப்படி? இத்தனைக்கும் ஜாக்சன் நகரில் இதேபோல பல கேமரா காட்சிகள் பதிவாகி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன. உள்ளூர் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் சுற்றுலாக் காட்சிகளைப் பிரபலமாக்க அமைக்கப்பட்ட ‘ஜாக்சன்ஹோல்' இணையதளத்தில் இவை ஒளிபரப்பாகி வருகின்றன.
இவற்றில் சாலை சந்திப்பு வீடியோ காட்சி மட்டும் இப்போது பிரபலமாகி இருக்கிறது.
ஒரு வீடியோ வைரலாகி ஆயிரக் கணக்கானோரால் ரசிக்கப்படுகிறது, ஆனால் அது ஏன் என்றுதான் புரியவில்லை எனும் கேள்வியையே இதுதொடர்பான செய்திகளில் முன்வைக்கப்பட்டன. ஆனால் இந்தப் புதிருக்கும் இப்போது மெல்ல விடை கிடைத்துவருகிறது. மெதுவான இணையத்தைப் பலரும் விரும்புவதே இதற்கான காரணம்!
‘அதென்ன மெதுவான இணையம்?' என்று கேட்கலாம். இதற்கான பதில் மெதுவான தொலைக்காட்சியில் இருக்கிறது. இந்த நிகழ்வு ‘ஸ்லோ டிவி' எனக் குறிப்பிடப்படுகிறது. நார்வே நாட்டில்தான் ‘ஸ்லோ டிவி' உருவானது. அந்நாட்டில்தான் விரும்பிப் பார்க்கப்படுகிறது.
வழக்கமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போல பரபரப்பு, விறுவிறுப்பு, திடீர்த் திருப்பம் போன்ற அம்சங்கள் எல்லாம் இல்லாமல், ஒரே நேர்க்கோட்டில் சென்றுகொண்டிருக்கும் நிகழ்ச்சியைத்தான் ஸ்லோ டிவி என்கின்றனர். உண்மையில் இது நிகழ்ச்சிகூட கிடையாது. சாதாரண நிகழ்வு ஒன்றின் தொடர் ஒளிபரப்பாகவே இது அமைகிறது. உதாரணத்திற்கு ஒரு நீண்ட ரயில் பயணத்தை அப்படியே ஒளிபரப்பு செய்வதை நினைத்துப் பாருங்கள். திரைக்கதையோ, திருப்பங்களோ இல்லாமல் பயண நிகழ்வுகள் அப்படியே பதிவானால் எப்படி இருக்கும்? இப்படித்தான் 2009-ல் நார்வேயில் பெர்ஜன் மற்றும் ஆஸ்லோ நகரங்களுக்கு இடையிலான 7 மணி நேர ரயில் பயணம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிப் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இதனையடுத்து இதே பாணியிலான ஸ்லோ டிவி நிகழ்ச்சிகள் பிரபலமாயின. பின்னலாடை பின்னும் காட்சி போன்றவை எல்லாம் நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கின்றன. இந்த ஸ்லோ டிவி இப்போது ‘நெட்ஃப்ளிக்ஸ்' இணையதளம் மூலம் அமெரிக்காவிலும் அறிமுகமாகி இருக்கிறது.
இதை எல்லாம் யார் பார்ப்பார்கள் என நாம் கேட்கலாம். இவற்றில் பார்த்து ரசிக்க என்ன இருக்கிறது என்றும் கேட்லாம். ஆனால், ஒன்றும் இல்லை எனும் காரணத்தினால்தான் இவை பார்த்து ரசிக்கப்படுகின்றன என்பதுதான் விஷயம்.
இந்த வகை நிகழ்ச்சிகளைப் பார்த்து ரசிக்கப் பார்வையாளர்கள் எதுவுமே செய்ய வேண்டியதில்லை. இஷ்டம் போலப் பார்க்கலாம். நடுவே பல நொடிகள் பார்க்காமல் விட்டாலும் எதுவும் ஆகிவிடாது. அதனால்தான் இவை விரும்பிப் பார்க்கப்படுகின்றன.
இதே காரணத்தினால்தான் ஒன்றுமே நிகழாத ஜாக்சன் சாலை சந்திப்பு வீடியோ விரும்பிப் பார்க்கப்படுவதாக விளக்கம் அளிக்கப்படுகிறது. இந்த வீடியோவில் ஒருவித தியானத் தன்மை இருக்கிறது. பரபரப்பும், மன அழுத்தமும் மிக்க நவீன வாழ்க்கைக்கு நடுவே இந்த வீடியோ ஒருவித ஆசுவாசத்தை அளிக்கிறது.
நீங்களும் அந்த அனுபவத்தை நீங்களும் பெற: >https://youtu.be/psfFJR3vZ78
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
15 hours ago
தொழில்நுட்பம்
1 day ago
தொழில்நுட்பம்
2 days ago
தொழில்நுட்பம்
3 days ago
தொழில்நுட்பம்
4 days ago
தொழில்நுட்பம்
4 days ago
தொழில்நுட்பம்
11 days ago
தொழில்நுட்பம்
11 days ago
தொழில்நுட்பம்
16 days ago
தொழில்நுட்பம்
18 days ago
தொழில்நுட்பம்
18 days ago
தொழில்நுட்பம்
18 days ago
தொழில்நுட்பம்
21 days ago
தொழில்நுட்பம்
22 days ago
தொழில்நுட்பம்
25 days ago