இணைய உலகில் புதிதாக ஒரு தேடியந்திரம் அறிமுகமாகி இருக்கிறது. லுத்விக் (Ludwig) எனும் அந்தத் தேடியந்திரம் மிகவும் புதுமையானது! புத்திசாலி மொழிபெயர்ப்புச் சாதனம் மற்றும் மொழியியல் தேடியந்திரம் என வர்ணித்துக்கொள்ளும் இந்தத் தேடியந்திரம் ஐரோப்பிய நாடான இத்தாலியில் உருவாக்கப்பட்டுள்ளது. ஏனெனில், லுத்விக் தேடியந்திரம் ஆங்கிலத்தில் சரியாக எழுத உதவும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.
ஒரு தேடியந்திரம் எப்படி ஆங்கிலத்தில் எழுத உதவக்கூடும் என்று கேட்கலாம். பொருத்தமான ஆங்கிலச் சொற்றொடர்களைத் தேடித்தருவதன் மூலம் லுத்விக் இதைச் செய்கிறது.
ஆங்கிலத்தில் நன்றாக எழுதுபவர்களை விட்டுவிடுங்கள். ஆனால் ஓரளவு மட்டுமே ஆங்கிலம் அறிந்தவர்கள், அலுவல் தேவைக்காக ஆங்கிலத்தில் எழுத வேண்டிய நிலை வரும்போது கொஞ்சம் தடுமாறவே செய்வார்கள். அப்படியே எழுதிவிட்டாலும், அது சரியாக இருக்கிறதா எனும் சந்தேகம் இருக்கும்.
இது போன்ற நேரங்களில் லுத்விக் ஆங்கிலம் அறிந்த நண்பன் போல வழிகாட்டும். லுத்விக் தேடியந்திர முகப்புப் பக்கத்தில் டைப்ரைட்டர் சாதன லோகோவின் கீழ் உள்ள தேடல் கட்டத்தில், பயனாளிகள் தாங்கள் சரிபார்க்க விரும்பும் ஆங்கில வாசகத்தை டைப் செய்ய வேண்டும். உடனே, அந்த வாசகத்துக்குப் பொருத்தமான ஆங்கில வாசகங்கள் பட்டியலிப் படும். அவற்றிலிருந்து சரியான வாசகத்தைத் தேர்வு செய்துகொள்ளலாம். அல்லது தாங்கள் எழுதிய வாசகத்துடன் ஒப்பிட்டு அதில் உள்ள தவறுகளைச் சரிசெய்து கொள்ளலாம்.
பிபிசி, நியூயார்க் டைம்ஸ், நியூயார்க்கர் உள்ளிட்ட முன்னணி ஊடகங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட ஆங்கில வாசகத் தொகுப்பில் தேடிப்பார்த்து, பொருத்தமான வாசகங்களை லுத்விக் பரிந்துரைக்கிறது. வரிசையாக ஒவ்வொரு வரியாகத் தட்டச்சு செய்து, அதற்குக் காண்பிக்கப்படும் வாசகப் பட்டியலுடன் ஒப்பிட்டுப் பார்த்து, ஏதேனும் தவறுகள் இருந்தால் திருத்தி நாம் எழுதியதை மேம்படுத்திக்கொள்ளலாம். தவறுகளைத் திருத்திக்கொள்வதோடு, சரியான ஆங்கில வரிகளுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதன் மூலம் ஆங்கிலச் சொற்களின் பயன்பாடு பற்றியும் கற்றுக்கொள்ளலாம்.
ஆங்கிலத்தில் எழுதப்பட்ட கட்டுரைகள், செய்திகள் ஆகியவற்றிலிருந்து திரடப்பட்ட வாசகத் தொகுப்பிலிருந்து, பயனாளிகள் எழுத முயலும் வாசகத்துக்குப் பொருந்தக்கூடிய வரிகளைத் தேடித் தருவதே லுத்விக்கின் முதன்மையான பணி. இதற்கான அல்காரிதம் மொழியியலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலத்தில் அதிகப் பரிச்சயம் இல்லாதவர்களை மனதில் வைத்துக்கொண்டு இது உருவாக்கப்பட்டுள்ளது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
இதன் நிறுவனர்களில் ஒருவரான அன்டோனியோ ரோடோலோ ஆகழ்வாராய்ச்சி மாணவராக இருந்தபோது, தனது துறையில் தொழில்முறை வாய்ப்புகளைச் சர்வதேச அளவில் பெற ஆங்கிலத்தில் கட்டுரைகளை வெளியிடும் நிர்ப்பந்தத்தை உணர்ந்தார். இத்தாலியரான அவருக்கு ஆங்கிலத்தில் கட்டுரைகள் எழுதுவதில் தயக்கம் இருந்ததால், ஆங்கிலச் சொற்களின் தவறான பயன்பாட்டில் திருத்தம் செய்ய உதவும் சேவையின் தேவையை உணர்ந்தார். அதன் பலனாகவே தன்னைப் போன்றவர்களின் பயன்பாட்டிற்காக லுத்விக் மொழியியல் தேடியந்திரத்தை நண்பர்களுடன் இணைந்து உருவாக்கியுள்ளார். இத்தாலியின் சிசிலியைத் தலைமையகமாக கொண்டு லுத்விக் செயல்பட்டுவருகிறது.
ஆங்கிலம் உலக மொழி என வைத்துக்கொண்டால், அது ஆங்கிலம் பேசும் நாடுகளைச் சேர்ந்தவர்களுக்காக மட்டுமல்லாமல் எல்லோருக்குமானதாக இருக்க வேண்டும் என்று பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் ரோடோலோ உலகில் உள்ள எல்லோருக்கும் தொடர்பு கொள்வதில் சம வாய்ப்புகள் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதை நிறைவேற்றும் நோக்கத்துடன்தான் லுத்விக் தேடியந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
லுத்விக் தேடியந்திரத்தில் மேலும் சில மொழி சார்ந்த வசதிகளும் இருக்கின்றன. இதில் ஆங்கில அகராதியும் இணைக்கப்பட்டுள்ளது. பட்டியலிடப்படும் வாசகங்களில் உள்ள புரியாத சொற்களை இருமுறை கிளிக் செய்தால் அவற்றுக்கான பொருள் விளக்கம் தோன்றும். அதே போல ஆங்கிலச் சொற்றொடர்களுக்கான விளக்கத்தையும் பார்க்கலாம். தேவை எனில் இரண்டு வார்த்தைகளுக்கு இடையே எந்தச் சொல் வர வேண்டும் என்றும் தெரிந்துகொள்ளலாம்.
இது தவிர, ஆங்கிலம் சரியாக அறியாதவர்கள் தங்கள் மொழியில் வாசகத்தை டைப் செய்து அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக்கொண்டு அது சரியா என்றும் பார்த்துக்கொள்ளலாம் (கூகுள் மொழிபெயர்ப்புச் சேவை சார்ந்து இது இயங்குகிறது).
ஒவ்வொரு முறையும் சேவையைப் பயன்படுத்தியவுடன், முடிவுகள் திருப்தியாக இருக்கிறதா எனக் கேட்கும் சிறு பெட்டியும் தோன்றுகிறது. அதில் உள்ள ஸ்மைலியை கிளிக் செய்யும்போது உங்கள் முகத்திலும் புன்சிரிப்புத் தோன்றலாம்.
நாம் ஏற்கெனவே பயன்படுத்திய வாசகங்களை மீண்டும் திரும்பிச் சென்று பார்க்கும் வசதியும் இருக்கிறது.
இந்தத் தேடியந்திரத்தின் பெயர் தொடர்பாக சுவாரசியமான தகவல் ஒன்றும் இருக்கிறது. ஆஸ்திரியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற தத்துவ ஞானியான லுத்விக் விட்கென்ஸ்டைன் என்பவர் நினைவாகவே இதற்கு லுத்விக் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ‘என்னுடைய மொழியின் வரம்புதான் என்னுடைய உலகின் வரம்பு' என்னும் வாசகம் அவரது சிந்தனைகளின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.
தேடியந்திர முகவரி: >https://ludwig.guru/
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
15 hours ago
தொழில்நுட்பம்
17 hours ago
தொழில்நுட்பம்
1 day ago
தொழில்நுட்பம்
1 day ago
தொழில்நுட்பம்
4 days ago
தொழில்நுட்பம்
5 days ago
தொழில்நுட்பம்
6 days ago
தொழில்நுட்பம்
7 days ago
தொழில்நுட்பம்
11 days ago
தொழில்நுட்பம்
15 days ago
தொழில்நுட்பம்
18 days ago
தொழில்நுட்பம்
20 days ago
தொழில்நுட்பம்
28 days ago
தொழில்நுட்பம்
1 month ago
தொழில்நுட்பம்
1 month ago