ஃபிளிப்கார்ட் தள்ளுபடி விற்பனையும் இணையவாசிகளின் ஆவேசமும்!

By சைபர் சிம்மன்

மின் வணிக இணையதளமான ஃபிளிப்கார்ட் அறிவித்த 'பிக் பில்லியன் டே' தள்ளுபடி விற்பனை இணையவாசிகள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பையும் ஏற்படுத்தியிருக்கிறது; எதிர்பாராத ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

அலைமோதும் கூட்டத்திற்கு ஏற்ப ஃபிளிப்கார்ட் இணையதளம் ஈடுகொடுக்க முடியாததால், அறிவித்தபடி பொருட்களை வாங்க முடியாமல் ஏமாற்றம் அடைந்த இணையவாசிகள் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தங்கள் ஆவேசத்தை குறும்பதிவுகளாக்கி வருகின்றனர்.

ஸ்மார்ட்போன் யுகத்தில் இணையம் மூலம் பொருட்களை வாங்கும் மின் வணிகம் இந்தியாவில் முன் இருந்ததைவிட வேகமாக பிரபலமாகி வருகிறது. இந்திய மின் வணிகச் சந்தையில் ஃபிளிப்கார்ட் முன்னிலை வகிக்கும் நிலையில், சர்வதேச மின் வணிக ஜாம்பவானான 'அமேசான்', இந்திய சந்தையில் தனது இருப்பை தீவிரமாக்கி வருகிறது. இதன் காரணமாக இந்திய மின் வணிக சந்தையில் போட்டியும் தீவிரமாகி இருக்கிறது.

இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஃபிளிப்கார்ட் அக்டோபர் 6 முதல் 10-ம் தேதி வரை சிறப்புத் தள்ளுபடி விற்பனையை விளம்பரம் செய்திருந்தது. கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக ஃபிளிப்கார்ட் இது பற்றி விளம்பரம் செய்து வந்தது. அதன் நிறுவனர்கள் சார்பில் வாடிக்கையாளர்களுக்கு இ-மெயில் மூலமும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஒரு ரூபாய்க்கும் பொருள்!

'பிக் பில்லியன் டே' என வருணிக்கப்பட்ட இந்தத் தள்ளுபடி விற்பனை இன்று (திங்கள்கிழமை) காலை 8 மணிக்கு துவங்கியது. 50 சதவீதம் வரை தள்ளுபடியில் பொருட்களை வாங்கலாம் என ஃபிளிப்கார்ட் கூறியிருந்தது, சில பொருட்களை ஒரு ரூபாய்க்கு வாங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எதிர்பார்க்க கூடியது போலவே இந்த விற்பனை அறிவிப்பு இணையவாசிகள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. ஆனால், ஆர்வத்துடன் பொருட்களை வாங்க ஃபிளிப்கார்ட் இணையதளத்திற்குச் சென்ற பலருக்கும் ஏமாற்றம் தரும் அனுபவம் ஏற்பட்டதாக சமூக ஊடகங்களில் கருத்துக்கள் எதிரொலிக்கின்றன.

ஃபிளிப்கார்ட் இணையதளம் முடங்கியதாக பலரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். அதன் இணையதளம் மிகவும் மெதுவாக செயல்படுவதாகவும் பலரும் தெரிவித்துள்ளனர். இன்னும் பலரோ, எந்தப் பொருளை வாங்க முற்பட்டாலும், இருப்பில் இல்லை அல்லது விற்றுத் தீர்ந்துவிட்டது என பதில் வருவதாக ஏமாற்றம் தெரிவித்துள்ளனர். பலர் தங்கள் பகுதியில் டெலிவரி கிடையாது என தெரிவிக்கப்படுவதாக குறைப்பட்டுக் கொண்டுள்ளனர்.

ரஜினியால் வாங்க முடிந்ததா?

ஃபிளிப்கார்ட்டில் பொருட்களை வாங்க முற்பட்டு தங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை இணையவாசிகள் பில் பில்லியன் டே (#BigBillionDay) எனும் ஹாஷ்டேக் அடையாளத்துடன் வெளியிட்டு வருகின்றனர். இதன் விளைவாக ட்விட்டரில் இந்த ஹாஷ்டேக் பிரபலமாகி விட்டது. நொடிக்கு பத்து அல்லது 20 குறும்பதிவுகள் வீதம் இது தொடர்பான குறும்பதிவுகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. #FlipkartSale எனும் ஹாஷ்டேகிலும் குறும்பதிவுகள் வெளியாகினறன.

பலர் ஆவேசமாக குறும்பதிவு செய்கின்றனர் என்றால், இன்னும் சிலர் லேசான கேலியுடன் நையாண்டி செய்து வருகின்றனர்.

'பில் பில்லியன் டே' தொடர்பான இணையவாசிகள் மனநிலையை சுட்டிக்காட்டும் சில குறும்பதிவுகள்:

* அக்டோபர் 6 தான் புதிய முட்டாள்கள் தினம்: @AnkitKhandelwal

* இன்று ஐஆர்சிடிசி இணையதளம் ஃபிளிப்கார்ட்டை விட வேகமாக செயல்படுகிறது: @maulinshah9

* 45 சர்வர் பிழை செய்திகளை வாங்க முடிந்தது: @tweetershanky

* நேரம் வீண். @flipkart முட்டாளுக்குகிறது. எல்லாம் இருப்பில் இல்லை. சிலவற்றில் பிழை செய்திகள்: @alakshendra27

* நான் ஒரு இருப்பில் இல்லையை ஃபிளிப்கார்ட்டில் வாங்கினேன்: @storm_b0rn

* ஃபிளிப்கார்ட்டில் விற்று தீர்ந்துவிட்டது; ஐஆர்சிடிசியில் பிறகு முயற்சிக்கவும்: @gautamverma23

* ஃபிளிப்கார்டில் பிக் பில்லியன் டே விற்பனை 8.05-க்கு முடிந்துவிட்டது. வருகைக்கு நன்றி: @GabbbarSingh

* எனக்கு பணம் மிச்சமாச்சு, #BigBillionDay-ல் அல்ல, இருப்பில் இல்லாததால்; @JadduJhappi

* அபத்தமாக இருக்கிறது. எனது பொருட்களை தேர்வு செய்தேன். தெற்கு டெல்லியில் டெலிவரி கிடையாது எனும் செய்தி வருகிறது: @shilpitewari

* இன்று ரஜினிகாந்தால் ஃபிளிப்கார்ட்டில் வாங்க முடிந்ததா? @asrivastava75

* ஆடித்தள்ளுபடியின் அதி ஆடம்பர இணையதள வேர்சனே #FLIPKART-ன் #BigBillionDay; @6_mugam (தமிழில் வெளியான குறும்பதிவு)

இவை தவிர இன்னும் தொடர்ந்து ஆவேச குறும்பதிவுகள் வெளியாகி கொணிட்ருக்கின்றன. சிலர் முதலிலேயே விலையை உயர்த்திவிட்டு இப்போது தள்ளுபடி தருவதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஃபிளிப்கார்ட்டுக்கு போட்டியாக அமேசான் மற்றும் ஸ்னேப்டீல் தளங்களும் சலுகைகளை அறிவித்திருந்தன. பல குறும்பதிவுகள் அமேசன் மற்றும் ஸ்னேப்டீல் வார்த்தைகளை ஃபிளிப்கார்ட் விற்பனையுடன் ஒப்பிட்டு அழகாக பகடி செய்திருந்தன.

இதனிடையே, ஃபிளிப்கார்ட் தரும் செய்தி, 'தள்ளுபடி விற்பனை முடிய இன்னும் சில மணி நேரங்களே இருக்கிறது, ஆகவே முந்துங்கள்' என்பதாக இருக்கிறது.

சைபர்சிம்மனின் வலைப்பதிவுத் தளம்>http://cybersimman.wordpress.com/

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

19 hours ago

தொழில்நுட்பம்

3 days ago

தொழில்நுட்பம்

3 days ago

தொழில்நுட்பம்

6 days ago

தொழில்நுட்பம்

7 days ago

தொழில்நுட்பம்

7 days ago

தொழில்நுட்பம்

9 days ago

தொழில்நுட்பம்

9 days ago

தொழில்நுட்பம்

10 days ago

தொழில்நுட்பம்

10 days ago

தொழில்நுட்பம்

14 days ago

தொழில்நுட்பம்

16 days ago

தொழில்நுட்பம்

17 days ago

தொழில்நுட்பம்

17 days ago

தொழில்நுட்பம்

19 days ago

மேலும்