அமெரிக்காவில் அதிபர் தேர்தலையும் தாண்டி மக்களை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் ஒரு விஷயம் போகிமான் கோ (Pokemon Go). சார்ஸ் போல கொடிய வைரஸா இது என விவரம் புரியாதவர்கள் யோசிக்கலாம். போகிமான் கோ ஒரு மொபைல் விளையாட்டு. ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் மொபைல்களில் இலவசமாக பதிவிறக்கம் செய்திடலாம். இந்த விளையாட்டால் தான் கடந்த சில நாட்களாக அமெரிக்க மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
போகிமான் கோ விளையாடிக் கொண்டே கார் ஓட்டியதால் விபத்து, முழு நேரம் போகிமான் கோ விளையாட வேலையை விட்டவர், போகிமான் கோ விளையாடுபவர்களை பின் தொடர்ந்து கொள்ளை சம்பவம் என பரபரப்பான செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
என்ன இது போகிமான் கோ எனத் தெரிந்துகொள்ளும் முன் போகிமான் பற்றிய ஒரு சிறிய பிளாஷ்பேக்கை பார்ப்போம்.
அலபாமாவில் நடைபாதையில் போகிமான் கோ
விளையாடிக்கொண்டே நடப்பவர்கள் | படம்: ஏபி
20 வருட போகிமான் சாம்ராஜ்ஜியம்
பாக்கெட் மான்ஸ்டர்ஸின் ( Poc ket Monsters) சுருக்கமே போகிமான் - பாக்கெட்டில் அடங்கும் குட்டிச்சாத்தான்கள் தான் போகிமான். 1996-ஆம் ஆண்டு நின்டெண்டோ (Nintendo) என்ற ஜப்பானிய நிறுவனத்தால் வெளியிடப்பட்ட வீடியோ கேம் இது. போகிமான் உலகில், சுற்றி மறைந்திருக்கும் சின்னச் சின்ன போகிமான்களை தேடிக் கண்டுபிடித்து அதை நாம் வசப்படுத்த வேண்டும். வசப்படுத்தியதும் அதற்கு பயிற்சி தந்து அதன் சக்திகளை கூட்டி மற்ற போகிமான்களுடன் சண்டையிட்டு அதன் மூலம் இன்னும் சக்திவாய்ந்த போகிமான்களை பெற வேண்டும். இதுதான் போகிமான் விளையாட்டு. இதில் பிகாச்சு (Pikachu) என்ற போகிமான் கதாபாத்திரம் மிகப் பிரபலம்.
தொடர்ந்து பல வீடியோ கேம்கள், அனிமேஷன் திரைப்படங்கள், கார்ட்டூன் தொடர்கள் என இன்று வரை, அதாவது 20 வருடங்களாக போகிமான் பொழுதுபோக்குத் துறையில் கலக்கிக் கொண்டிருக்கிறது.
இதுவரை 73 போகிமான் கேம்களும், 18 போகிமான் திரைப்படங்களும், 800 பகுதிகளைக் கடந்தும் ஓடிக்கொண்டிருக்கும் போகிமான் கார்ட்டூன் தொடரும் வெளியாகியுள்ளன. போகிமான்களின் எண்ணிக்கையும் 700-க்கு மேல் போய்விட்டது. இந்த போகிமான் கலாச்சாரத்தின் சமீபத்திய பரிணாம வளர்ச்சி தான் போகிமான் கோ என்ற மொபைல் விளையாட்டு.
போகிமான் கோ
முழுக்க முழுக்க கணினியில் உருவாக்கப்படுவது வெர்ச்சுவல் ரியாலிட்டி (Virtual Reality) என்றழைக்கப்படும். உண்மையான காட்சிகளில் டிஜிட்டலாக உருவாக்கப்பட்ட விஷயங்களையும் கலப்பது ஆக்மெண்டட் ரியாலிட்டி (Augmented Reality). அப்படி ஆக்மெண்டட் ரியாலிட்டி என்ற தொழில்நுட்பத்தில் வெளியாகியிருக்கும் விளையட்டு போகிமான் கோ.
ஆக்மெண்டட் ரியாலிட்டியில் அமைந்திருக்கும் போகிமான் கோ விளையாட்டின் திரை | படம்: ஏ.எஃப்.பி
நீங்கள் இதை பதிவிறக்கம் செய்து இயக்க ஆரம்பித்ததும் உங்களது மொபைல் திரையில் ஜிபிஎஸ் (GPS) மூலம் கணிக்கப்படும் உங்கள் சுற்றுப்புறத்தின் நிலப்பரப்பு 2டி-ல் (கார்டூன் போல, இரண்டு பரிமாணத்தில்) தோன்றும். அதில் நீங்கள் தேர்ந்தெடுத்த போகிமான் மாஸ்டர் கதாபாத்திரம் நடக்கும். நிஜ உலகில், கையில் மொபைல் திரையை நீங்கள் பார்த்துக் கொண்டே நடந்தால் அந்த கதாபாத்திரமும் திரையில் நடக்க ஆரம்பிக்கும்.
இப்படி நடக்க ஆரம்பித்தால் உங்கள் சுற்றுப்புறத்தில் போகிமான் இருக்கும் இடங்கள் சிறிய சதுர பெட்டிகளாக காண்பிக்கப்படும். அந்த இடத்துக்கு நடந்து / ஓடி சென்றால் அங்கு ஒளிந்து கொண்டிருக்கும் போகிமான் தோன்றும். அதை க்ளிக் செய்தால் உங்கள் மொபைல் கேமராவும் இயங்க ஆரம்பிக்கும். கேமரா லென்ஸ் வழியாக மொபைல் திரையில் பார்த்துக் கொண்டே, கேமராவில் தெரியும் உண்மைக் காட்சிகளோடு போகிமான் குட்டிச் சாத்தான்களை போகி பந்துகள் மூலம் உங்கள் வசமாக்கிக் கொள்ள வேண்டும்.
ஆக்மெண்டட் ரியாலிட்டியில் நிஜ சாலையில் தோன்றும் போகிமான் | படம்: ராய்ட்டர்ஸ்
சில போகிமான்கள் தண்ணீர் பரப்பிலும் இருக்கும், அதற்கு உங்கள் வீட்டுப் பக்கத்தில் இருக்கும் சின்ன குட்டையின் பக்கமோ, ஓடையின் பக்கமோ சென்றால் தான் கண்டுபிடிக்க முடியும். மேலும் போகிமான் ஜிம்களில் மற்ற போகிமான் வீரர்களுடன் சண்டையிட்டு பாயிண்டுகளும் வெல்ல முடியும்.
மொபைல் விளையாட்டும் வினையானது
இப்படி போகிமான்களை தேடி ஏரியா விட்டு ஏரியா சென்று, தெரியாதவர்களிடம் மாட்டிக் கொண்டு திருடு கொடுத்தவர்கள் இருக்கிறார்கள். மற்றவர் வீடுகளில் தெரியும் போகிமான்களை பிடிக்க சுவர் ஏறிக் குதித்து அத்துமீறியவர்கள் பிடிபட்டுள்ளார்கள். இவ்வளவு ஏன், அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் வயோமிங் என்ற நகரத்தில் போகிமான்களை தேடி தன் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் நீர் நிலைக்கு வந்த ஷைலா விக்கின்ஸ் என்ற பெண் அங்கு மிதந்து கொண்டிருந்த ஒரு சடலத்தைப் பார்த்து அலறி போலீஸிடம் சென்றுள்ளார்.
கார் ஓட்டும்போது போகிமான் விளையாட வேண்டாம் என
நெடுஞ்சாலை ஒன்றில் தோன்றும் எச்சரிக்கை வாசகம்
இப்படி போகிமான் கோ விளையாட்டால் மக்கள் திக்குமுக்காடிக் கொண்டிருக்க, இதுதான் நாங்கள் நினைத்தது என்கிறார் இந்த விளையாட்டை உருவாக்கிய ஜான் ஹான்க் (Johan Hanke). இவர் தான் இந்த விளையாட்டை வெளியிட்டுள்ள நியாண்டிக் லேப்ஸ் (Niantic Labs) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி.
அலஸ்காவில், தடை மீறி வரவேண்டாம் என போகிமான்
பயனர்களுக்கு வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை செய்தி
போகிமான் கோ ஒரு உடற்பயிற்சி தான்
"நமது ஆரோக்கியத்துக்காக பல செயலிகளைப் பதிவிறக்கம் செய்து அதனால் எந்த பலனையும் அனுபவிக்காமல் தோல்வியடைந்த ஒரு ஒலிம்பிக் வீரனைப் போல உணர்ந்திருப்போம். ஆனால் போகிமான் கோ விளையாடுபவர்கள் ஒரு இடத்தில் இருக்க முடியாது. நடந்துகொண்டே இருக்க வேண்டும். அதில் உங்களுக்கு எந்தவித அழுத்தமும் இருக்காது. நிஜ உலக இடங்களை இந்த விளையாட்டில் இணைத்திருப்பதால் இதுவரை உங்கள் வீடு அமைந்துள்ள பகுதியில் உங்களுக்கு தெரியவராத பல சுவாரசியமான இடங்கள் இதன் மூலம் தெரிய வரும்" என்கிறார் ஜான் ஹான்க்.
ஜான் ஹான்க் | படம்: ராய்ட்டர்ஸ்
முன்னதாக, ஜான் ஹான்க் உருவாக்கிய தொழில்நுட்பமே பின்னாளில் கூகுள் நிறுவனத்தால் வாங்கப்பட்டு கூகுள் எர்த் (Google Earth) என மாறியது. அதை உருவாக்கியபோது கிடைத்த அனுபவத்தில் தான், போகிமான் கோ விளையாட்டின் முன்னோடியான இங்க்ரெஸ் (Ingress) என்ற, GPS சார்ந்த விளையாட்டை ஜான் ஹான்க் உருவாக்கினார். ஆரம்பத்தில் ஒரு ஏப்ரல் ஃபூல் வேடிக்கையாக தான் போகிமான் கோ ஆரம்பித்தது என்பது கூடுதல் சுவாரசிய தகவல்.
கலாச்சார அடையாளமாக மாறிய போகிமான் கோ
வெளியான சில நாட்களிலேயே அமெரிக்காவில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட விளையாட்டு என்ற சாதனையை போகிமான் கோ படைத்தது. தினமும் 21 மில்லியன் அமெரிக்க மக்கள் இதை விளையாடுகிறார்கள் என ஒரு ஆய்வு சொல்கிறது.
போகிமான் விளையாடும் சக போகிமான் ட்ரெய்னர்கள் ஒன்று சேர்ந்து தங்கள் போகிமான்களுக்குள் சண்டை போட்டு விளையாடும் அம்சமும் இதில் உள்ளதால், இதை ஒட்டி புது நண்பர் சந்திப்புகளை (Pokmon go Dates)அமெரிக்கர்கள் பலர் ஆரம்பித்துள்ளனர். மக்களோடு மக்களாக இணைந்து நேரம் செலவழிக்க முடிவதாக சிலர் கருதுகின்றனர். இதுநாள் வரை உடற்பயிற்சி செய்யாத நாங்கள் போகிமான் கோ-வால் விளையாட்டாக 8-9 கிலோமீட்டர்கள் நடந்து விட்டோம் என பலர் ட்விட்டரில் பகிர்ந்து வருகின்றனர்.
போகிமான் கோ விளையாடி உடற்பயிற்சி செய்தவர்களின் ட்வீட்டுகள்
அமெரிக்கர்கள் மட்டுமல்லாது அமெரிக்க வாழ் இந்தியர்கள், அவர்கள் மூலம் இந்த விளையாட்டைப் பற்றிக் கேள்விப்பட்ட இந்திய வாழ் இந்தியர்கள் என பலரும் இது சார்ந்த மீம்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
ஆக்மெண்டட் ரியாலிட்டி அல்ல இது
இந்நிலையில் இந்த விளையாட்டு முழுக்க ஆக்மெண்டட் ரியாலிட்டி அல்ல. அதன் மிக அடிப்படையான ஆரம்ப வடிவமே இது என்றும் சில தொழில்நுட்ப வல்லுநர்கள் கண்டிப்புடன் கூறியுள்ளனர்.
எது எப்படியோ, அமெரிக்காவில் புது புரட்சியையே ஏற்படுத்தியுள்ள போகிமான் கோ, இப்போதைக்கு அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய நாடுகளில் மட்டுமே பதிவிறக்கம் செய்யக் கிடைக்கிறது. அடுத்த சில வாரங்களில் மற்ற நாடுகளில் (குறிப்பாக சைனா - ஜப்பானில்) வெளியாகும்போது இதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பதற்கு அமெரிக்க சம்பவங்கள் வெறும் ட்ரெய்லர் தான் என நினைக்கத் தோன்றுகிறது.
இந்தியாவில் இன்னும் அதிகாரப்பூர்வமாக இந்த விளையாட்டு வெளியாகவில்லை என்றாலும் இணையத்தில் அமெரிக்க பதிப்பை டவுன்லோட் செய்து நம்மூரிலும் விளையாட ஆரம்பித்துவிட்டார்கள் என்பது கொசுறு செய்தி.
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
9 hours ago
தொழில்நுட்பம்
9 hours ago
தொழில்நுட்பம்
13 hours ago
தொழில்நுட்பம்
3 days ago
தொழில்நுட்பம்
4 days ago
தொழில்நுட்பம்
7 days ago
தொழில்நுட்பம்
7 days ago
தொழில்நுட்பம்
10 days ago
தொழில்நுட்பம்
11 days ago
தொழில்நுட்பம்
11 days ago
தொழில்நுட்பம்
13 days ago
தொழில்நுட்பம்
13 days ago
தொழில்நுட்பம்
14 days ago
தொழில்நுட்பம்
14 days ago
தொழில்நுட்பம்
18 days ago