முன்னணி குறுஞ்செய்தி சேவையான ‘வாட்ஸ் ஆப்’ அன்மையில் தனது 8-வது பிறந்த நாளைக் கொண்டாடியது. பிறந்த நாளை முன்னிட்டுத் தன் பயனாளிகளுக்கு ‘ஸ்டேட்டஸ்’ எனும் புதிய வசதியையும் அறிமுகம் செய்து பரபரப்பை ஏற்படுத்தியது. ஒருசிலருக்கு இந்த வசதி தானாக அப்டேட்டாகி, ‘இதென்ன புதுசாக ஸ்டேட்டஸ்’ என வியக்க வைத்தது என்றால், மற்றவர்கள் இது பற்றிக் கேள்விப்பட்டு ஆர்வத்துடன் அப்டேட் செய்துகொண்டபோது ஸ்டேட்டஸ் வசதி எட்டிப் பார்த்தது.
வாட்ஸ் ஆப்பில் நன்கு அறிமுகமாகிவிட்ட அரட்டைகள் (சாட்ஸ்), அழைப்புகள் (கால்) இடையே ஸ்டேட்டஸ் வசதி தோன்றுகிறது. கொஞ்சம் நன்றாகக் கவனித்தால், இடப்பக்கத்தில் சின்னதாக கேமரா ஐகானையும் காணலாம். அதை கிளிக் செய்தாலும் ஸ்டேட்டஸ் வசதியை அணுகலாம். இல்லை ஸ்டேட்டஸ் பகுதியை ஒரு தட்டு தட்டியும் அணுகலாம்.
இது நகலா..?
ஸ்டேட்டஸ் வசதி என்பது, நிலைத்தகவலை ஒளிப்படமாக, ஜிஃப் ஆக அல்லது வீடியோ வடிவில் வெளியிடும் வசதி. எந்த வடிவில் இருந்தாலும் அதன் ஆயுள் 24 மணி நேரம்தான் என்பது இந்தப் புதிய வசதியில் உள்ள கூடுதல் அம்சம். இது ஒன்றும் புதிதல்ல, ‘ஸ்நாப்சாட்' வசதியின் நகல்தான் எனும் கருத்தும் முன்வைக்கப்பட்டாலும், வாட்ஸ் ஆப்பின் இந்தப் புதிய வசதி இணைய உலகில் பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை. ஏனெனில் வாட்ஸ் ஆப் 120 கோடி தீவிர பயனாளிகளோடு முன்னணி குறுஞ்செய்தி சேவையாக இருக்கிறது. இந்தியாவில் மட்டும் 20 கோடிப் பயனாளிகள் இருக்கின்றனர். வாட்ஸ் ஆப் பயனாளிகள் தினமும் 5,000 கோடி குறுஞ்செய்திகளைப் பகிர்ந்துகொள்வதாக நிறுவனம் தெரிவிக்கிறது. இதன் மூலம் பகிர்ந்து கொள்ளப்படும் வீடியோக்கள், ஒளிப்படங்கள் மற்றும் ஜிஃப்களின் எண்ணிக்கையும் மலைக்க வைப்பதாகவே உள்ளன.
இந்த எண்ணிக்கையிலான பயனாளிகளையும், அவர்கள் ஆர்வத்தையும் தக்க வைத்துக்கொள்ளும் பொறுப்பு வாட்ஸ் ஆப்பிற்கு இருக்கிறது. இதற்காகவே அவ்வப்போது புதிய வசதிகளை அறிமுகம் செய்தவண்ணம் தன்னைப் புதுப்பித்துக்கொண்டே இருக்கிறது. குரல் வழிச் சேவை உள்ளிட்டவை இப்படி அறிமுகமானவைதான்.
புதுசு என்ன..?
இந்த வரிசையில்தான் இப்போது ஸ்டேட்டஸ் வசதி அறிமுகமாகியுள்ளது. ஆனால், இதற்கு முன்னர் அறிமுகமான புதிய வசதிகளிலிருந்து ஸ்டேட்டஸ் வசதி முக்கிய வேறுபாட்டைக் கொண்டிருக்கிறது. இந்த வசதி வாட்ஸ் ஆப்பின் ஆதார அம்சத்திலிருந்தே கொஞ்சம் மாறுபட்டதாக இருக்கிறது. இதன் மூலம் வாட்ஸ் ஆப்பை நாம் பயன்படுத்தும் விதமும் மாறுவதற்கான வாய்ப்பு உள்ளது.
இந்த வரிசையில்தான் இப்போது ஸ்டேட்டஸ் வசதி அறிமுகமாகியுள்ளது. ஆனால், இதற்கு முன்னர் அறிமுகமான புதிய வசதிகளிலிருந்து ஸ்டேட்டஸ் வசதி முக்கிய வேறுபாட்டைக் கொண்டிருக்கிறது. இந்த வசதி வாட்ஸ் ஆப்பின் ஆதார அம்சத்திலிருந்தே கொஞ்சம் மாறுபட்டதாக இருக்கிறது. இதன் மூலம் வாட்ஸ் ஆப்பை நாம் பயன்படுத்தும் விதமும் மாறுவதற்கான வாய்ப்பு உள்ளது.
இந்த மாற்றத்தைப் புரிந்துகொள்ள முதலில் ஸ்டேட்டஸ் வசதி பற்றி இன்னும் சற்று விரிவாகப் பார்ப்போம். இதன் வசதி மூலம் பயனாளிகள் வீடியோ அல்லது ஒளிப்படத்தைப் பகிர்ந்துகொள்ளலாம். அல்லது வரைகலை அல்லது ஜிஃப்களையும் பின்னணியில் இணைக்கலாம். உள்ளடக்கத்தின் தன்மையை உணர்த்த ‘நச்' என ஒரு வரிக் குறிப்பையும் சேர்த்துக்கொள்ளலாம். அதன் பிறகு இவற்றை ஸ்டேட்டஸ் வடிவில் நிலைத்தகவலாகப் பகிர்ந்து கொள்ளலாம்.
இப்படிப் பகிரப்படும் ஸ்டேட்டஸ் நண்பர்கள் டைம்லைனில் தோன்றும். உங்கள் நண்பர்கள் பகிரும் ஸ்டேட்ட்ஸ்கள் உங்கள் டைம்லைனில் தெரியவரும். அதாவது அவர் நம்முடன் அதைப் பகிர்ந்துகொள்ள விரும்பியிருந்தால்! ஏனெனில், ஸ்டேட்டஸ்களை யார் எல்லாம் பார்க்கலாம் எனத் தேர்வு செய்து கட்டுப்படுத்தும் வசதி இருக்கிறது. ஸ்டேட்டஸை எத்தனை பேர் பார்த்தனர் என்றும் அறிந்து கொள்ளலாம். நிலைத்தகவலை டெலிட் செய்யும் வசதியும் இருக்கிறது.
பயன்பாட்டில் மாற்றம்
பகிரப்பட்ட ஒளிப்படங்கள் பார்க்கப்பட்டவுடன் தானாக மறைந்துவிடும் வசதிதான் ஃபேஸ்புக்கின் வசம் உள்ள ஒளிப்படப் பகிர்வுச் செயலியான இன்ஸ்டாகிராமிலும் அறிமுகம் செய்யப்பட்டது. ஸ்நாப்சாட்டை முக்கியப் போட்டியாளராக ஃபேஸ்புக் கருதும் நிலையில், அதன் வசம் உள்ள மற்றொரு முன்னணிச் சேவையான வாட்ஸ் ஆப்பிலும் இதே வசதி இப்போது ஸ்டேட்டஸாக அறிமுகம் ஆகியுள்ளது.
வாட்ஸ் ஆப்பைப் பொறுத்தவரை இந்த வசதி அதன் ஆதார அம்சத்திலிருந்து மிகப் பெரிய மாற்றம் என்று கருதப்படுகிறது. ஏனெனில் அடிப்படையில் வாட்ஸ் ஆப் என்பது பரிமாற்றத்திற்கான குறுஞ்செய்திச் சேவை. பயனாளிகள் பெரும்பாலும் அதில் கருத்துகள் அல்லது தகவல்களை டைப் செய்து பகிரவும், இப்படிப் பகிரப்படும் தகவல்களை வாசிக்கவும் மட்டுமே பயன்படுத்துகின்றனர். ஒளிப்படம், வீடியோ போன்ற வசதிகள் இருந்தாலும், அடிப்படையில் இது ஒரு பயன்பாட்டு மேடை.
ட்விட்டர் அல்லது ஃபேஸ்புக் போல இதில் ஓயாமல் மற்றவர்கள் வெளியிடும் டைம்லைன் செய்திகளைப் பார்த்துக்கொண்டிருக்கும் வேலை இல்லை. ஸ்டேட்டஸ் இதை மாற்றிவிடக்கூடும். ஸ்டேட்டஸ் மூலம் பயனாளிகள் தங்களுக்கு சுவாரசியமான நிலைத்தகவல்களைப் பகிர்ந்து கொள்வார்கள். எனவே இதன் டைம்லைனில் புதிய பகிர்வு என்ன எனப் பார்த்துக்கொண்டே இருக்க நேரலாம். நண்பர்கள் டைம்லைன் தவிர, விளம்பர நோக்கில் வர்த்தக நிறுவனங்கள் பகிர்ந்துகொள்ளும் நிலைத்தகவல்களையும் பார்க்கும் நிலை வரலாம். வாட்ஸ் ஆப்பிற்கு இது விளம்பரத்திற்கான வழியாகவும் அமையலாம்.
ஆனால் ஒன்று, ஸ்டேட்டஸ் வசதியை எப்படிப் பயன்படுத்திக் கொள்வது என்பது உங்கள் கைகளில்தான் இருக்கிறது. கொஞ்சம் படைப்புத் திறனோடும், கற்பனை ஆற்றலோடும் இந்த வசதியை அணுகலாம். எப்படி நம்மை வெளிப்படுத்திக்கொள்கிறோம், அல்லது எவற்றை வெளியிட இதைப் பயன்படுத்துகிறோம் என்பதும் இதன் வீச்சைத் தீர்மானிக்கும்.
இப்போது, 24 மணி நேரத்தில் மறைந்துவிடும் தன்மையுடன் ஸ்டேட்டஸ் வசதி அறிமுகமாகி இருக்கிறது. இதன் பயன்பாடு எப்படி எல்லாம் விரிகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
1 day ago
தொழில்நுட்பம்
1 day ago
தொழில்நுட்பம்
2 days ago
தொழில்நுட்பம்
2 days ago
தொழில்நுட்பம்
5 days ago
தொழில்நுட்பம்
6 days ago
தொழில்நுட்பம்
7 days ago
தொழில்நுட்பம்
8 days ago
தொழில்நுட்பம்
12 days ago
தொழில்நுட்பம்
16 days ago
தொழில்நுட்பம்
19 days ago
தொழில்நுட்பம்
21 days ago
தொழில்நுட்பம்
29 days ago
தொழில்நுட்பம்
1 month ago
தொழில்நுட்பம்
1 month ago