புனைப்பெயரில் அஞ்சாமல் கருத்து சொல்ல வகை செய்கிறது ஃபேஸ்புக்

பயனர்கள் தங்களது அசல் பெயரைப் பயன்படுத்தாமலோ, புனைப்பெயரிலோ பதிவுகளை பகிர்ந்துகொள்ளும் வகையில் புதிய செயலி (App) ஒன்றை ஃபேஸ்புக் அறிமுகப்படுத்தவுள்ளது.

இந்தச் செயலி, ஃபேஸ்புக் உடன் இணைக்கப்படாமல், தனி செயலியாக இயங்கும் எனத் தெரிகிறது.

ஒரு கருத்தை வெளியிடுவதால், தங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுமோ என்று தயக்கம் காட்டும் பயனர்கள், தைரியமாக தங்களது பார்வையை பதிவு செய்யவே இந்த முயற்சி என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதன்மூலம், தாங்கள் சொல்லப்படும் கருத்துகள் மற்றவர்களைச் சென்றடையுமே தவிர, தங்களது உண்மையான அடையாளம் வெளிவராது என்பது கவனிக்கத்தக்க அம்சமாக இருக்கும்.

மேலும், ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட தலைப்புகளில் விவாதிக்க, சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ள, சம்பந்தப்பட்ட பயனர்களுடன் உரையாட, தனி இணைய குழுமங்களை உருவாக்கும் வகையில் இந்தச் செயலி செயல்படும் என்று கூறப்படுகிறது.

இது குறித்து 'தி நியூயார்க் டைம்ஸ்' பத்திரிக்கையில் வெளிவந்த செய்தியில், "தங்களது நிஜப் பெயரை பயன்படுத்த தயங்கும் பயனர்கள் புனைப்பெயர்களைக் கொண்டு விருப்பமான தலைப்புகளில் பதிவுடும் வகையில் இந்தச் செயலி இயங்கும்.

இந்தச் செயலி, பயனிரின் ஃபேஸ்புக் பக்கத்தோடு இணைக்கப்படுமா இல்லையா என்பது குறித்து இதுவரை தெரிவிக்கப்படவில்லை" என விவரிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க், தனித்து செயல்படும் புதிய செயலிகளை அறிமுகப்படுத்துவதில் இனி தங்கள் நிறுவனத்தின் கவனம் இருக்கும் என்று கூறியிருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

சில நாட்களுக்கு முன் ஃபேஸ்புக் நிறுவனம், புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளைப் பகிர்ந்துகொள்ள 'ஸ்லிங்ஷாட்' என்ற செயலியை அறிமுகப்படுத்தியது.

'ஃபேஸ்புக் மெசன்ஜர்' செயலியும் இதுவரை 500 மில்லியனுக்கும் அதிகமான முறைகள் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இதோடு 'இன்ஸ்டாகிராம்' சம்பந்தபட்ட ஒரு தனி செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE