இணையமே நீ நலமா?

By சைபர் சிம்மன்

இணையம் என்பது வெறும் தொழில்நுட்பம் அல்ல. அது ஒரு பொது வளம் என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா? ஆம் எனில் நீங்கள் அதன் ஆரோக்கியம் பற்றி கவலை கொண்டாக வேண்டும். இணையம் எந்த அளவு ஆரோக்கியமாக இருக்கிறது? அதற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் விஷயங்கள் எவை? அவற்றைச் சரிசெய்து இணைய ஆரோக்கியத்தைச் சீராக்குவது எப்படி? இது போன்ற கேள்விகளையும் பொறுப்புள்ள இணையவாசிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்தக் கேள்விகளை அடிப்படையாகக் கொண்டு இணைய ஆரோக்கியத்தை அறிய வைப்பதற்கான முயற்சியில் ‘மொசில்லா’ அமைப்பு இறங்கியுள்ளது. இது தொடர்பாக இணைய ஆரோக்கிய அறிக்கையின் முன்னோட்ட வடிவத்தை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்த முயற்சியின் முக்கியத்துவம், தன்மைக்கேற்ப இந்த அறிக்கையும் ‘ஓப்பன் சோர்ஸ்’ அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, அதில் அனைவரும் பங்கேற்கலாம். கருத்து தெரிவிக்கலாம், திருத்தலாம், மேம்படுத்தலாம்.

இணைய ஆரோக்கியத்துக்காக...

மொசில்லா அமைப்பை நீங்கள் அறிந்திருக்கலாம். இணையத்தின் நன்கறியப்பட்ட பிரவுசர்களில் ஒன்றான ‘ஃபயர்ஃபாக்ஸ்’ பிரவுசரை நிர்வகிக்கும் அறக்கட்டளையாக விளங்கும் மொசில்லா, இணையச் சுதந்திரம், செயல்பாடு, தனியுரிமைப் பாதுகாப்பு தொடர்பான தன்னார்வச் செயல்களிலும் ஈடுபட்டுவருகிறது. இந்த முயற்சிகளின் தொடர்ச்சியாக அண்மையில் இணைய ஆரோக்கியத்தை அறியும் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

இதன் முதல் கட்டமாக இணைய ஆரோக்கிய அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. இந்த அறிக்கை மூலமாக, இணையத்தில் ஆரோக்கியமாக இருக்கும் விஷயங்கள், ஆரோக்கியமில்லாத விஷயங்கள் போன்றவை குறித்து இணையவாசிகளுடன் உரையாடலில் ஈடுபட விரும்புவதாக மொசில்லா செயல் இயக்குநர் மார்க் சுர்மன் குறிப்பிட்டுள்ளார். இணையத்தின் எதிர்காலம் பற்றியும் நாம் மனதில் கொண்டாக வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொது வளமா இணையம்?

இணையம் தொட‌க்கத்தில் எல்லோருக்குமானதாக இருந்தது என்றும், யாரும் எந்தக் கருத்தையும் வெளியிடக்கூடிய, எந்தச் செயலிலும் ஈடுபடக்கூடிய இடமாக இருந்தது என்றும் கூறியுள்ள சுர்மன், அதன் பிறகு நம்முடைய கூட்டுப் படைப்பாற்றல், கண்டுபிடிப்பு மற்றும் சுய வெளிப்பாட்டிற்கான உலகலாவிய மேடையாக இது உருவாகி இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் ஃபேஸ்புக் போன்ற ஒரு சில நிறுவனங்கள் தேடல், ஷாப்பிங், உரையாடல் போன்றவற்றில் ஆதிக்கம் செலுத்தும் நிலையில், வெப்கேம‌ராக்கள் மீது பாட்கள் கொண்டு பெரும் தாக்குதல் நடத்தப்படும் நிலையில், நம்முடைய அளப்பரிய ஆற்றல் கொண்ட பொது வளமான இணையம் தொடர்ந்து பாதுகாப்பானதாக, நம்பகமானதாக நீடிக்க வாய்ப்புள்ளதா எனும் கேள்வி எழுதுள்ளதாகவும் குறிப்பிடுகிறார்.

நம்முடைய வாழ்க்கையில் இணையம் முழுவதும் சூழந்திருக்கும் நிலையில் இந்தக் கேள்வி மிகவும் முக்கியமானது என அவர் கருதுகிறார். இணையம் இப்போதைய சுற்றுச்சூழலாக உருவாகியிருப்பதால் அதன் ஆரோக்கியம் குறித்தும் கண்காணித்துக் கவலை கொண்டாக வேண்டும் என அவர் கூறுகிறார்.

ஐந்து அம்சங்கள்

இதற்காகத்தான் இணையவாசிகள் பங்கேற்போடு இணைய ஆரோக்கிய அறிக்கையை உருவாக்கும் முயற்சியில் மொசில்லா ஈடுபட்டுள்ளது. இணையத்தின் புதுமை, டிஜிட்டல் சமத்துவ‌ம், மையமில்லா தன்மை, தனியுரிமைப் பாதுகாப்பு, இணையக் கல்வி ஆகிய ஐந்து அம்சங்களையும் இணைய ஆரோக்கியத்தின் முக்கிய அம்சமாகக் கருதி இவற்றின் தற்போதைய நிலை மற்றும் எதிர்காலக்கவலை குறித்த கருத்துகளை முன்னோட்ட அறிக்கையில் மொசில்லா வெளியிட்டுள்ளது.

இணையம் என்பது எப்போதுமே எல்லோருக்குமான திறந்த மேடையாக இருக்க வேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளது. இணையத்தில் எல்லோருக்கும் சமமான வாய்ப்பு இருக்க வேண்டும், அனைவரும் தங்கள் வாழ்க்கையை, சமூகத்தை மேம்படுத்திக்கொள்ள இணையத்தைப் பயன்படுத்திக்கொள்ளும் நிலை இருக்க வேண்டும் என்பது டிஜிட்டல் சமத்துவத்தின் முக்கிய அம்சமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு முன்னோட்டமே...

முந்நூறு கோடிப் பேர் பயன்படுத்துவது, விக்கிபீடியா போன்ற திட்டங்கள் இதற்கு உதாரணமாக இருந்தாலும், இணையம் இன்னமும் முழுவதும் பரவலாகாமல் இருப்பதும், ஏற்கெனவே உள்ள வேறு பாடுகளை அதிகரிக்கக்கூடிய நிலையில் இருப்பதும் ஆரோக்கியமில்லா அம்சங்களாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இணைய சீண்டுதல்- தாக்குதல் அதிகரித்துவருவதும், பெண்கள் இதற்கு அதிகம் இலக்காவதும் முக்கியழு பிரச்சுனைகுகளாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

கூட்டுச் சமூக முயற்சி, தொழில்நுட்ப முயற்சி ஆகியவற்றைக் கொண்டு இந்தப் பிரச்சினையைக் கட்டுப்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல ஒவ்வொரு அம்சம் தொடர்பாகவும் தற்போதைய நிலை, பிரச்சினை அதற்கானதீர்வு ஆகியவை இடம்பெற்றுள்ளன. இணையக் கல்விப் பகுதியில், டிஜிட்டல் உலகில் கருத்துகளைத் தெரிவித்துப் பங்கேற்கும் வாய்ப்பும் ஆற்றலும் எல்லோருக்கும் இருக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை ஒரு முன்னோட்ட வடிவம்தான். இதைப் படித்துப் பார்த்து இணையவாசிகள் தங்கள் கருத்துகளையும் திருத்தங்களையும் தெரிவிக்கலாம். அறிக்கையில் இடம்பெற வேண்டிய கருத்துகள் குறித்தும் பங்களிப்பைச் செலுத்தலாம்.

சுற்றுச்சூழலைக் காக்க எப்படிப் பல இயக்கங்கள் உருவாயினவோ அது போலவே இணையத்தின் ஆரோக்கியத்தைக் காப்பதற்கான ஒரு இயக்கம் உருவாக வேண்டும் என்பதே இந்த முயற்சியின் அடிப்படை எண்ணம். நீங்களும் இதில் பங்கேற்க விரும்பினால்: >https://internethealthreport.org/v01/about/

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

20 hours ago

தொழில்நுட்பம்

20 hours ago

தொழில்நுட்பம்

6 days ago

தொழில்நுட்பம்

7 days ago

தொழில்நுட்பம்

7 days ago

தொழில்நுட்பம்

7 days ago

தொழில்நுட்பம்

11 days ago

தொழில்நுட்பம்

12 days ago

தொழில்நுட்பம்

14 days ago

தொழில்நுட்பம்

14 days ago

தொழில்நுட்பம்

17 days ago

தொழில்நுட்பம்

19 days ago

தொழில்நுட்பம்

19 days ago

தொழில்நுட்பம்

20 days ago

தொழில்நுட்பம்

21 days ago

மேலும்