ஆவலை வீசுவோம் 27: தேடாததை தேட உதவும் தேடியந்திரம்!

By சைபர் சிம்மன்

தேடல் பட்டியலில் முதலில் இடம்பெறும் இணையதளங்கள் அனைத்தையும் விலக்கி விட்டு, தேட உதவும் விநோத தேடியந்திரம்.

மில்லியன் ஷார்ட் மிகவும் மாறுபட்ட தேடியந்திரம். அது முன்வைக்கும் தேடல் வாசகத்தில் இருந்தே இதைப் புரிந்துகொள்ளலாம். வழக்கமாக எல்லா தேடியந்திரங்களும் நீங்கள் நாடி வருவதை தேடித்தருவதாக தெரிவிக்கின்றன என்றால், மில்லியன் ஷார்ட் (Million Short), நீங்கள் கண்டுபிடிக்காதது எதை? என்று கேட்கிறது. இந்த கேள்வியைத்தான் அதன் தேடல் வாசகமாகவும் அமைந்துள்ளது.

மற்ற தேடியந்திரங்கள் போல முன்னணி முடிவுகளை முன்னிறுத்தாமல், தேடல் பட்டியலில் கடைக்கோடியில் உள்ள இணையதளங்களை அது பிரதானமாக பட்டியலிடுகிறது. அதாவது, தேடல் பட்டியலில் முதலில் தோன்றக்கூடிய முதல் பத்து லட்சம் முடிவுகளை நீக்கி விட்டு, அதன் பின்னே இருக்கும் இணையதளங்களை பட்டியலிடுகிறது.

இதன்மூலம் இணையத்தில் வழக்கமாக கண்ணில் பட வாய்ப்பில்லாத இணையதளங்களை கண்டறியலாம் என்றும் அது ஊக்கமளிக்கிறது. இணைய உலகில் கோடிக்கணக்கான இணையதளங்கள் இருக்கின்றன. கூகுள் உள்ளிட்ட தேடியந்திரங்கள் இவை எல்லாவற்றையும் பட்டியலிட்டு தந்தாலும் பெரும்பாலான இணையவாசிகளில் தேடல் என்பது முதல் சில பக்கங்களிலேயே முடிந்து போய் விடுகிறது.

கூகுளில் தேடும் ஒவ்வொரு முறையும் இத்தனை நொடிக்குள் (உண்மையில் ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில்) இத்தனை லட்சம் பக்கங்களை பட்டியலிடுவதாக குறிப்பிடப்பட்டிருக்கும். இந்தக் குறிப்பையே கூட பலரும் கவனித்திருக்க மாட்டார்கள். காரணம், தேடல் பட்டியலின் முதல் பக்கத்திலேயே பொருத்தமான இணையதளங்கள் பட்டியலிடப்படுவதால் பலரும் அதிலேயே திருப்தி அடைந்து வெளியேறி விடுகின்றனர். ஒரு சிலர் கூடுதல் முடிவுகளை நாடி மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது பக்கங்களுக்கு சென்று பார்ப்பதுண்டு. எப்படி இருந்தாலும் அதிகபட்சம் முதல் பத்து பக்கங்களை தாண்டி செல்வது அரிதானதுதான்.

தேடலின் நோக்கமே தேவையான தகவல் அடங்கிய தளங்களை கண்டுபிடிப்பதுதான் என்னும்போது முதல் பக்கத்திலேயே நாடி வந்த தளம் இருந்தால் அதை தாண்டி செல்ல வேண்டிய அவசியம் என்ன?

எல்லாம் சரிதான், ஆனால் தேடல் பட்டியலில் நூறாவது பக்கத்திலோ அல்லது ஆயிரமானது பக்கத்திலோ அல்லது பத்தாயிரமாவது பக்கத்திலோ உள்ள தளங்கள் எப்படிப்பட்டவை என்று எப்போதாவது யோசித்திருக்கிறோமா? ஒரு சுவாரசியத்துக்கேனும் எப்போதாவது இணைய கடலில் ஆழச்சென்று பார்க்க வேண்டும் என்று நினைத்திருக்கிறோமா?

மில்லியன் ஷார்ட் தேடியந்திரம் இதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது. முன்னணி இணையதளங்களை கடந்து சென்று எங்கோ மூளையில் மறைந்து கிடக்கும் தளங்களை இந்த தேடியந்திரம் மூலம் காணலாம். அதாவது, தேடல் பட்டியலின் பத்தாயிரமாவது பக்கத்தில் உள்ள தளங்களை அல்லது பத்து லட்சமாவது பக்கத்தில் உள்ள தளங்களையோ இதன் மூலம் காணலாம்.

மில்லியன்ஷார்ட் தேடியந்திரம் இதனை எப்படி சாத்தியமாக்குகிறது என்றால், தேடலில் ஈடுபடும்போது தேடல் பட்டியலில் முதலில் உள்ள பக்கங்களை நீக்கிவிட வழி செய்கிறது. முகப்புப் பக்கத்தில் தேடல் கட்டம் அருகே இதற்கான வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி முதல் நூறு பக்கங்களையோ, முதல் ஆயிரம் பக்கங்களையோ, முதல் லட்சம் பக்கங்களையோ அல்லது முதல் மில்லியன் பக்கங்களையோ நீக்கி விட்டு எஞ்சியுள்ள பக்கங்களை காணலாம்.

தேடலில் ஈடுபடும்போது ஒவ்வொரு பக்கமாக கிளிக் செய்து பார்த்தாலும் பத்து பதினைந்து பக்கங்களை கடந்த பிறகு ஒரு அலுப்பும் களைப்பும் வந்து விடும் அல்லவா? மில்லியன்ஷார்ட்டோ ஒரே கிளிக்கில் ஆயிரம் ஆயிரம் பக்கங்களாக கடந்து பட்டியலின் கடைக்கோடியில் உள்ள தளங்களை காண வழி செய்கிறது.

பின்னுக்கு தள்ளப்பட்ட இந்தத் தளங்கள் பயனில்லாதவையாக இருக்கலாம். அல்லது இவற்றில் சில முத்துக்களும் இருக்கலாம். இவற்றை கண்டறிய மில்லியன் ஷார்ட் வழி செய்கிறது. இப்படி முடிவுகளை கண்டறிவது வெறும் சுவாரஸ்யம் மட்டும் அல்ல, இணையவாசிகளின் கண்களை மூடும் தேடல் குமிழ், விளம்பர நோக்கிலான பக்கங்கள், எஸ்.இ.ஓ ஜாலங்கள் அவற்றை எல்லாம் விளக்கி விட்டு நல்ல இணையதளங்களை கண்டறிய உதவுகிறது.

நல்லதொரு மாற்று தேடியந்திரமாக உருவாகி இருக்கும் மில்லியன்ஷார்ட் 2012-ம் ஆண்டு அறிமுகமானது. கனடாவில் குடியேறிய இந்தியரான சஞ்சய் அரோரா, தனது எக்ஸ்போனன்ஷியல் லேப்ஸ் நிறுவனம் மூலம் இந்தத் தேடியந்திரத்தை அறிமுகம் செய்தார். ஆரம்பத்தில், சோதனை முயற்சியாகவே இதை அவர் துவக்கினார்.

இணையத்தில் உள்ள சில லட்சம் தளங்கள் திடிரென காணாமல் போய்விட்டால் என்ன ஆகும் என ஒரு நாள் அரோரா கற்பனை செய்திருக்கிறார். இந்தக் கற்பனையே மில்லியன்ஷார்ட் தேடியந்திரமாக உருவானது.

பெரும்பாலும் இணையத்தில் தேடும்போது, விக்கிபீடியா, அபவுட்.காம், பேஸ்புக் உள்ளிட்ட தளங்களின் முடிவுகளே முன்னுக்கு வருவதில் இருந்து மாறுபட்ட அனுபவம் தேடலில் தேவை என்பது அவரது கருத்தாக இருக்கிறது.

மில்லியன்ஷார்ட், மைக்ரோசாப்டின் பிங் தேடியந்திரத்தை அடிப்படையாக கொண்டு தேடல் பட்டியலை அளிப்பதோடு தனது சொந்த தேடல் நுப்டங்களையும் பயன்படுத்தி அதை மேம்படுத்தி தருகிறது. இதில் தேடல் முடிவுகளை நீக்காமல் தேடும் வசதியும் இருக்கிறது. தேவையான அளவு முடிவுகளை நீக்கியும் தேடலாம். இது தவிர, விளம்பர பக்கங்கள், அரட்டை வசதி கொண்ட பக்கங்கள், மின்வணிக பக்கங்கள் ஆகியவற்றை நீக்கிவிட்டு தேடும் வசதியும் இருக்கிறது.

சோதனை நோக்கில் நிறுவப்பட்ட இந்தத் தேடியந்திரம், தேடலை மேம்படுத்திக்கொள்ள பல்வேறு வாய்ப்புகளை வழங்கும் தேடியந்திரமாக வளர்ந்திருக்கிறது. பிரவுசர்களில் நீட்டிப்பாக பயனபடுத்தும் வசதியும் இருக்கிறது.

மில்லியன் ஷார்ட் தேடியந்திர முகவரி: >https://millionshort.com/

* குறிப்பு: இணையவாசிகளின் இருப்பிடம், அவர்களின் கடந்த கால இணைய தேர்வுகள் அடிப்படையில் அவர்களுக்கு பொருத்தமான தேடல் முடிவுகள் முன்வைக்கப்படுவது தேடல் குமிழ் எனப்படுகிறது. இதன் மூலம் இணையவாசிகள் பொதுவாக எல்லோரும் பார்க்க கூடிய தேடல் பட்டியலை பார்க்க முடியாமல் போகலாம்.

- சைபர்சிம்மன்,தொழில்நுட்ப எழுத்தாளர், தொடர்புக்கு enarasimhan@gmail.com

முந்தைய அத்தியாயம் >>ஆ'வலை' வீசுவோம் 26: ஷோடன் எனும் திகில் தேடியந்திரம்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

20 hours ago

தொழில்நுட்பம்

1 day ago

தொழில்நுட்பம்

2 days ago

தொழில்நுட்பம்

3 days ago

தொழில்நுட்பம்

4 days ago

தொழில்நுட்பம்

4 days ago

தொழில்நுட்பம்

11 days ago

தொழில்நுட்பம்

11 days ago

தொழில்நுட்பம்

16 days ago

தொழில்நுட்பம்

18 days ago

தொழில்நுட்பம்

18 days ago

தொழில்நுட்பம்

18 days ago

தொழில்நுட்பம்

21 days ago

தொழில்நுட்பம்

22 days ago

தொழில்நுட்பம்

25 days ago

மேலும்