வாட்ஸ் அப்பில் தொந்தரவு செய்கிறார்களா?- ஸ்க்ரீன்ஷாட்டோடு புகார் அளிக்க புதிய வசதி

 

 

வாட்ஸ் அப்பில் வெறுப்பு செய்திகள், போலியான மெசேஜ்கள், பாலியல் தொல்லைகள், மார்பிங் புகைப்படங்கள் அல்லது ஆபாச வீடியோக்களை அனுப்பி யாராவது உங்களைத் தொந்தரவு செய்தால், புகார் அளித்து நடவடிக்கை எடுக்கச் செய்யலாம்.

 

இன்றைய ஸ்மார்ட் போனின் பிரிக்க முடியாத செயலி வாட்ஸ் அப். உலகின் பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் குறுஞ்செய்திக்கான செயலியாக விஸ்வரூபமெடுத்துள்ளது.

 

அதே நேரம் வாட்ஸ் அப்பில் பல்வேறு விதமான போலி குறுஞ்செய்திகள், மார்பிங் படங்கள் அதிகளவில் பரப்பப்படுகின்றன. குறிப்பாக, பலாத்காரம், குழந்தைகள் கடத்தல், பெண்களைக் கேலி செய்வது, ஆன்மிகத்தில் பெயரால் ஏமாற்றுவது தொடர்பான செய்திகளும் போலியாகச் சித்தரிக்கப்பட்ட ஆடியோ, வீடியோக்களும் வைரலாகி வருகின்றன. மக்கள் இதை நம்பி பல்வேறு இடங்களில் வன்முறைகளிலும், தாக்குதல்களிலும் ஈடுபட்டனர். வெளிமாநில இளைஞர்கள் சிலரைத் திருடனாக நினைத்து பொதுமக்கள் அடித்தே கொன்ற சம்பவமும் உண்டு.

 

அதேபோல பழைய வீடியோக்களை சமீபத்தில் நடந்ததுபோல் சித்தரித்து பரப்பி விடப்படுகின்றன. அண்மையில் திமுக தலைவர் ஸ்டாலின் இதே குற்றச்சாட்டுக்கு ஆளானார். அவர் இந்து திருமணங்கள் குறித்து 2017-ல் பேசிய வீடியோ அண்மையில் பேசியதாகக் கூறப்பட்டது. இதைத் தடுக்கும் வகையில் வாட்ஸ் அப் நிறுவனம்  ஒரே நேரத்தில் 5 பேருக்கு மட்டுமே ஒரு செய்தியை ஃபார்வர்ட் செய்ய முடிகிற வகையில் கட்டுப்பாடு விதித்தது.

 

இதற்கிடையே பெண்களின் எண்ணை எப்படியாவது வாங்கி, அவர்களுக்குப் பாலியல் ரீதியாகத் தொல்லை தருபவர்களும் உண்டு. பிரதான எண் என்பதால், செல்போன் எண்ணை மாற்ற முடியாமல் பெண்கள் அவதிப்படுகின்றனர். ஆண்களில் சிலரும் இதே நிலை ஏற்படுகிறது. இந்நிலையில் இதைத் தடுக்க இந்தியத் தொலை தொடர்புத் துறை இதுகுறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 

இதன்படி, வாட்ஸ் அப்பில் வெறுப்பு செய்திகள், போலியான மெசேஜ்கள், பாலியல் தொல்லைகள், மார்பிங் புகைப்படங்கள் அல்லது ஆபாச வீடியோக்களை அனுப்பி யாராவது உங்களைத் தொந்தரவு செய்தால், அவர்களின் மீது புகார் அளித்து நடவடிக்கை எடுக்கலாம்

 

எப்படிச் செய்வது?

உங்களுக்கு வரும் செய்தியை ஸ்க்ரீன் ஷாட் எடுங்கள். அந்தப் படத்தையும் சம்பந்தப்பட்ட மொபைல் எண்ணையும் ccaddn-dot@nic.in என்ற இ-மெயிலுக்கு அனுப்புங்கள். இந்த செய்தியைப் பெறும் தொலைத்தொடர்புத் துறை, தொலைதொடர்பு சேவை வழங்குநரிடம் இத்தகவலைக் கூறி, காவல்துறைக்கு உரிய தகவல்களை வழங்கும்.

 

முன்னதாக தொலைதொடர்பு சேவை வழங்குநர், ஆட்சேபனைக்குரிய, ஆபாச உள்ளடக்கங்களை அனுமதிக்க முடியாது என்று மத்திய அமைச்சகத்திடம் ஏற்கெனவே உறுதி அளித்திருப்பார். இதன்மூலம் சம்பந்தப்பட்டவர்களை எளிதில் முடக்க முடியும்.

 

சில வாட்ஸ் அப் எண்கள், மொபைல் நெட்வொர்க்காக இல்லாமல் வை-ஃபை நெட்வொர்க்காக இருக்கும். அவற்றை வை-ஃபை அளிக்கும் இணைய சேவை வழங்குநரின் உதவியோடு கண்டுபிடிக்க முடியும்.

 

இந்தியாவில் 20 கோடி பேருக்கு மேல் வாட்ஸ்அப் பயன்படுத்தி வருகின்றனர். உலக அளவில் 150 கோடி பயனாளிகள் வாட்ஸ் அப் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE