இணையவாசிகள் எண்ணிக்கை: 2014 இறுதிக்குள் அமெரிக்காவை முந்தும் இந்தியா!

இந்த ஆண்டின் இறுதியில், இணையத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கையில் அமெரிக்காவை இந்தியா முந்திவிடும் என்று கூகுள் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் ராஜன் ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

மேலும், 2018-ஆம் ஆண்டில் ஏறக்குறைய 50 கோடி இந்திய மக்கள் இணையம் பயன்படுத்துவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

“இந்த ஆண்டின் இறுதிக்குள், இணையம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அமெரிக்காவை காட்டிலும் இந்தியாவில் அதிகமாக இருக்கும். இந்த எண்ணிக்கை இரண்டு மடங்கு வித்தியாசம் இருக்கும். அதுமட்டுமின்றி, இந்தியாவில் உள்ள பாதி பேர் இணையம் பயன்படுத்துவார்கள்”, என்று அவர் தெரிவித்தார்.

இந்த தகவலை, ஃபிக்கி (FICCI) பெண்கள் அமைப்பு நடத்திய 'டிஜிட்டல் இந்தியா' என்ற நிகழ்ச்சியில் அவர் தெரிவித்தார்.

இந்தியாவில் இணைய பயனீட்டாளர்கள் 100 லட்சம் பேரிலிருந்து 1000 லட்ச பேருக்கு வருவதற்கு 10 ஆண்டுகள் எடுத்துக்கொண்டது. தற்போது, ஒவ்வொரு மாதமும் 50 லட்ச புதிய பயனீட்டாளர்கள் வருகின்றனர். இன்றைய தேதியில், 20 கோடி பேர் இணையத்தை பயன்படுத்துகின்றனர்.

மேலும், இந்தியாவில் பொருட்களை வாங்குவதற்கான தளமாக இணையம் அதிகரித்துக்கொண்டு வருகிறது என்று அவர் தெரிவித்தார்.

வருங்காலத்தில் வளரக்கூடிய தொழில்நுட்பம் குறித்து பேசுகையில், இன்னும் நான்கு ஆண்டுகளில் அணியக்கூடிய உபகரணங்கள் (Wearing Gadgets) நூறு கோடி மக்களை சென்றடையும் என்று தெரிவித்துள்ளார்.

ஸ்மார்ட்போன் தொழில்நுட்பம், நூறு கோடி மக்களை சென்றடைய எட்டு ஆண்டுகள் ஆனது. “தொழில்நுட்பத்தின் அடுத்த வளர்ச்சி அணிக்கூடிய உபகரணங்கள். இந்த உபகரணங்கள் மிக விரைவில் உலகம் முழுதும் பிரபலமாகும்”, என்று அவர் தெரிவித்தார்.

2020-ஆம் ஆண்டில், 5 பில்லியன் மக்கள் இணையம் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என்று ராஜன் ஆனந்தன் குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE