உலக தொலைக்காட்சி நாள் எப்படி வந்தது? - ஒரு பார்வை

By செய்திப்பிரிவு

தகவல் தொடர்பு, தகவல், பொழுதுபோக்குக் கான ஓர் ஊடகமாகத் தொலைக்காட்சியின் தாக்கம், முக்கியத்துவத்தைக் கொண்டாடும் உலக அளவிலான அனுசரிப்பே ‘உலகத் தொலைக்காட்சி நாள்.’ பொதுக் கருத்தை வடிவமைப்பதிலும் கலாச்சாரப் பன்முகத் தன்மையை மேம்படுத்துவதிலும் நாடுகளிடையே உரையாடலை வளர்ப்பதிலும் தொலைக்காட்சி வகிக்கும் பங்கை இது எடுத்துக்காட்டுகிறது.

உலகத் தொலைக்காட்சி நாள் ஏன்? - 1996, நவம்பர் 21, 22 தேதிகளில் ஐக்கிய நாடுகள் சபை முதல் உலகத் தொலைக்காட்சி இயக்கத்துக்கான கூட்டத்தை நடத்தியது. வேகமாக மாறிவரும் உலகில் தொலைக்காட்சியின் முக்கியத்துவத்தைப் பற்றி விவாதிப்பதற்கும் பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் முன்னணி ஊடகப் பிரமுகர்கள் கூடினர். உலகில் நடைபெறும் மோதல்கள் மீது கவனம் செலுத்தவும் அமைதி, பாதுகாப்புக்கான அச்சுறுத்தல்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் சமூக, பொருளாதாரப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தவும் ஐ.நா., தலைவர்கள் தொலைக்காட்சி நாளை அங்கீகரித்தனர்.

உலகத் தொலைக்காட்சி நாள் ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 21 அன்று அனுசரிக்கப்படுகிறது. இது தனிநபர்கள், ஒளிபரப்பாளர்கள், ஊடக நிறுவனங் களுக்குச் சமூகத்தில் தொலைக்காட்சியின் தாக்கத்தைப் பிரதிபலிக்கும் வாய்ப்பை வழங்குகிறது. - ஸ்நேகா

எப்படிக் கொண்டாடுவது?

* முக்கியமான உலகப் பிரச்சினைகள், அறிவை விசாலமாக்கும் கல்வி, கலாச்சாரப் பன்முகத் தன்மை கொண்ட நிகழ்ச்சிகளைப் பாருங்கள்.
* பன்முகக் கலாச் சாரத்தைப் பிரதிபலிக்கும் சிறந்த படைப்புகளை அளிக்கும் உள்ளூர் மற்றும் சுயாதீனத் தொலைக்காட்சி தயாரிப்புகளை ஆதரியுங்கள்.
* உங்கள் சமூகத்தையும் உலகையும் பாதிக்கும் சமூக, சுற்றுச்சூழல், அரசியல் பிரச்சினைகளை விவாதிப் பதற்கும் உரையாற்றுவதற்கும் தொலைக்காட்சியைப் பயன்படுத்துங்கள்.
* பல்வேறு கலாச்சாரங்களையும் பாரம்பரியங் களையும் பகிர்ந்துகொள்வதன் மூலம் கலாச்சாரப் பரிமாற்றத்தை ஊக்குவிக்க முடியும் என்பதால், உலகத் தொலைக்காட்சி அமைப்புகளை ஆதரியுங்கள்.
* தரம், அறம் மூலம் பொறுப்பான நிகழ்ச்சிகளை வழங்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சி களுக்கு உங்கள் ஆதரவைக் கொடுங்கள். - ஸ்நேகா

மின்னணுத் தொலைக்காட்சியைக் கண்டறிந்தவர்: அமெரிக்காவைச் சேர்ந்த பைலோ டெய்லர் ஃபான்ஸ்வொர்த், 1921இல் 21 வயதில் மின்னணுத் தொலைக்காட்சியைக் கண்டறிந்தார். 14 வயது வரை மின்சாரம் இல்லாத வீட்டில்தான் வசித்து வந்தார். உயர்நிலைப் பள்ளியில் நகரும் படங்களைப் படம்பிடித்து, குறியீடாக மாற்றி, அந்தப் படங்களை ரேடியோ அலைகள் மூலம் வெவ்வேறு சாதனங்களுக்கு நகர்த்தக்கூடிய ஓர் ஊடகத்தைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கினார்.

மின்னணுக் கற்றைகளைப் பயன்படுத்தி நகரும் படங்களை அவரது ஊடகம் படம்பிடித்ததால், அவர் தொலைக்காட்சியைக் கண்டறிய முயன்ற மற்றவர்களைவிட, பல ஆண்டுகள் முன்னோக்கி இருந்தார். தனது தொலைக்காட்சியைப் பயன்படுத்தி ஒரு ’டாலர்’ படத்தை அனுப்பினார்.

அதைப் பார்த்த சக கண்டுபிடிப்பாளர், ’இதிலிருந்து சில டாலர்களை நாம் எப்போது பெறப் போகிறோம்?’ என்று கேட்டார். உலக அளவிலான தகவல் பரவலை ஊக்குவிக்கும் ஒரு சர்வதேச நாளுக்கான அடையாளமாகத் தொலைக்காட்சி மாறும் என்பது அப்போது பைலோ ஃபான்ஸ்வொர்த்துக்கும் அவர் நண்பருக்கும் தெரியாது.

நெருக்கடியான சூழல்களில் தொலைக்காட்சியின் பங்கு: பேரிடர்கள், இயற்கைச் சீற்றங்கள், போர் போன்ற நெருக்கடி காலங்களில் உடனடித் தகவல்களை மக்களுக்குக் கொண்டு சேர்ப்பதில் தொலைக்காட்சி முதன்மையான பங்கு வகிக்கிறது. புயல், வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்களின் போது மக்களுக்குத் தேவையான எச்சரிக்கைகளையும் பாதுகாப்பு வழிமுறைகளையும் உடனுக்குடன் தெரிவிப்பதில் தொலைக்காட்சி ஊடகத்தின் பங்களிப்பு மகத்தானது.

கல்வியும் விழிப்புணர்வும்: கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குக் கல்வி கற்பிப்பதில் தொலைக்காட்சி பெரும் பங்காற்றியது. மேலும் சுகாதார விழிப்புணர்வு, தடுப்பு முறைகள் குறித்த தகவல்களை மக்களுக்குத் தெரிவிப்பதிலும் முக்கியப் பங்கு வகித்தது. ஊரடங்குக் காலத்தில் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்த மக்களுக்குப் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வழங்கி மன அழுத்தத்தைக் குறைப்பதற்கும் தொலைக்காட்சி உதவியது.

நெருக்கடி காலங்களில் சமூக ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதன் மூலம் மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் தொலைக்காட்சி முக்கியப் பங்கு வகிக்கிறது. பேரிடர் காலங்களில் நிவாரண உதவிகள் தேவைப்படும் பகுதிகள், உதவி செய்ய விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரிகள் போன்ற தகவல்களை மக்களுக்குத் தெரிவிப்பதில் தொலைக்காட்சி உதவுகிறது.

உலகை இணைக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்: பல்வேறு மொழிகள், கலாச்சாரங்களின் இருப்பிட மாக இருக்கும் இந்திய நாட்டின் பன்முகத்தன்மையைப் பற்றிப் புத்தகங்கள், கட்டுரைகள் அவ்வப்போது வெளியாகின்றன. எழுத்து வடிவிலான இந்தப் படைப்புகள் வரலாற்றில் முக்கிய மான ஆவணங்கள். இதைப் போல் கலாச்சாரம், பாரம்பரியம் தொடர்பாகத் தொலைக் காட்சிகளில் ஒளிபரப் பாகும் ஒலி-ஒளி (காட்சி) வடிவிலான காணொளிகளும் நிகழ்ச்சிகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை.

மற்ற மாநிலங்களின் கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை ஒருவர் இன்னொருவரோடு பகிர்ந்து கொள்ளவும் அறிந்துகொள்ளவும் தொலைக்காட்சி ஓர் இணைப்புப் பாலமாக இருக்கிறது. இந்தியா மட்டுமல்ல, வெளிநாடுகளைச் சேர்ந்த மக்களைப் பற்றியும் அவர்களின் மொழி, உணவுப் பழக்கங்கள், பாரம்பரியம் ஆகியவற்றைப் பற்றியும் ஒளிபரப்பாகும் தொலைக் காட்சி நிகழ்ச்சிகளால் கடல் தாண்டி யும், கண்டங்கள் தாண்டியும் கருத்து களைப் பரிமாறிக்கொள்ள முடிகிறது.

பிரம்மாண்ட விளையாட்டு நிகழ்வுகளான ஒலிம்பிக், உலகக் கோப்பைத் தொடர்கள் போன்றவை எப்போதும் வெவ்வேறு நாடுகளில் நடத்தப்படுகின்றன. உலகம் எங்கிலும் இருந்து வீரர்கள், வீராங்கனைகள் போட்டிகளில் பங்கேற்பார்கள். இந்தத் தொடர்களின்போது தொலைக்காட்சியின் வழியே ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளைக் கோடிக்கணக்கானோர் அவரவர் வீடுகளில் இருந்தே நேரலையில் கண்டுகளிக்க முடியும்.

இதனால் கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ் போன்ற பிரபல விளையாட்டுகள் மட்டுமன்றிக் கவனம்பெறாத பல விளையாட்டுகளைப் பற்றியும் அறிய முடியும். விளையாட்டுகள் உடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்து வதோடு, வெற்றி-தோல்வி பற்றிய புரிதல், விடாமுயற்சி, மன வலிமை ஆகியவற்றையும் கற்றுத்தரும். - ஸ்பைடி

கல்வியில் தொலைக்காட்சி: தொலைக்காட்சியின் மூலம் உலகில் நடைபெறும் ஒவ்வொரு விஷயத்தையும் உடனுக்குடன் வீட்டில் இருந்தபடியே அறிந்துகொள்ள முடிகிறது. இதன் மூலம் பொது அறிவு விரிவடைகிறது. பெரும்பாலான தனியார் தொலைக்காட்சி அலைவரிசைகள் பொழுதுபோக்கை மையமாக வைத்து நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகின்றன.

ஆனால் அரசு சார்ந்த தொலைக்காட்சி அலைவரிசைகளும் சில தனியார் தொலைக்காட்சி அலைவரிசைகளும் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகின்றன. பாடத்திட்டத்தில் உள்ள பாடங்களைச் சுவாரசியமாகச் சொல்லும் விதத்திலும் நிகழ்ச்சிகள் வழங்கப்படுகின்றன. கார்ட்டூன், திரைப்படங்கள் மூலம் சமூகக் கல்வியும் வழங்கப்படுகிறது.

55 ஆண்டுகளுக்கு முன்... 1969ஆம் ஆண்டு நிலாவில் முதல் முறை மனிதர் தரை இறங்கிய நிகழ்ச்சி கறுப்புவெள்ளையில் ஒளிபரப்பானது. இந்த அரிய நிகழ்ச்சியை 65 கோடி மக்கள் பார்வையிட்டனர்.

இந்தியாவில் தொலைக்காட்சி: இந்தியத் தொலைக்காட்சி சேவைகள் 1959ஆம் ஆண்டு டெல்லியில் தொடங்கப்பட்டன. இது கல்வி ஒளிபரப்புக்காக ஆரம்பிக்கப்பட்டது. 1972இல் மும்பை, அமிர்தசரஸ் வரை நீட்டிக்கப்பட்டன. 1975 வரை 7 இந்திய நகரங்களில் மட்டுமே தொலைக்காட்சி சேவைகள் இருந்தன.

பின்னர் செயற்கைக்கோள் உதவியுடன் இந்தியா முழுவதும் தொலைக்காட்சி சேவைகள் வழங்கப்பட்டன. அகில இந்திய வானொலியின் அங்கமாக இருந்த தொலைக்காட்சி, 1976இல் தனியாகப் பிரிக்கப்பட்டது. 1982இல் தேசிய ஒளிபரப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. அதே ஆண்டில் வண்ணத் தொலைக்காட்சியும் அறிமுகமானது. 1990களுக்குப் பிறகு தனியார் தொலைக்காட்சி அலைவரிசைகள் அறிமுகமாயின.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

2 days ago

தொழில்நுட்பம்

3 days ago

தொழில்நுட்பம்

6 days ago

தொழில்நுட்பம்

6 days ago

தொழில்நுட்பம்

9 days ago

தொழில்நுட்பம்

10 days ago

தொழில்நுட்பம்

10 days ago

தொழில்நுட்பம்

12 days ago

தொழில்நுட்பம்

12 days ago

தொழில்நுட்பம்

13 days ago

தொழில்நுட்பம்

13 days ago

தொழில்நுட்பம்

17 days ago

தொழில்நுட்பம்

19 days ago

தொழில்நுட்பம்

20 days ago

தொழில்நுட்பம்

20 days ago

மேலும்