ஐஎம்இஐ எண்ணை மாற்றினாலும் தொலைந்த செல்போனை கண்டுபிடிக்கலாம்!

By ம.மகாராஜன்

சென்னை: ஐஎம்இஐ எண்ணை மாற்றினாலும் தொலைந்த செல்போனை கண்டுபிடிக்கலாம் என தேசிய சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் இ.காளிராஜ் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் சைபர் க்ரைம் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றை தடுக்க மத்திய அரசு பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. சைபர் தாக்குதல்கள் தொடர்பாக விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சைபர் குற்றங்களுக்கு எதிராக பொதுமக்கள் புகார் அளிப்பதை ஊக்குவிக்கும் வகையில், https://cybercrime.gov.in என்ற பிரத்யேக இணையதளத்தை மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. சைபர் குற்றங்கள் தொடர்பான புகார்களை இந்த இணையதளம் மூலமாகவோ, ‘1930’ என்ற இலவச தொலைபேசி எண்ணிலோ தெரிவிக்கலாம். இதை கண்காணிக்க டிஜிபி அலுவலகத்தில் தனிக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, சைபர் குற்றங்களை தடுக்கும் நோக்கில் மத்திய சாதன அடையாள பதிவேடு (சிஇஐஆர்), காலர் நேம் பிரசன்டேஷன் (சிஎன்ஏபி) ஆகிய புதிய திட்டங்களை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து தேசிய சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் இ.காளிராஜ் கூறியதாவது: பெரும்பாலும் செல்போன் தொலைந்துவிட்டால், ‘பழைய செல்போன்தான். போனால் போகட்டும். தொலைந்தது கிடைக்காது’ என்ற எண்ணத்தில் பலரும் விட்டுவிடுவார்கள். ஒருசிலர் மட்டுமே காவல் துறையில் புகார்கொடுப்பார்கள். திருடுபோகும் செல்போன்களை விஷமிகள் பல்வேறு சைபர் குற்றங்களுக்கு பயன்படுத்தக்கூடும் என்பதால், அதுகுறித்து புகார் அளிக்க வேண்டியது அவசியம்.

காவல் துறையில் புகார் அளித்தாலும்கூட, ‘செல்போனில் இருக்கும் 15 இலக்க சர்வதேச செல்போன் சாதன அடையாள எண்ணை (ஐஎம்இஐ) மாற்றிவிட்டால், கண்டுபிடிப்பது சிரமம்’ என்ற கருத்தும் உள்ளது. மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள ‘சிஇஐஆர்’ திட்டம் மூலம், தொலைந்த செல்போனின் ஐஎம்இஐ எண், சிஇஐஆர் பதிவேட்டில் பதிவு செய்யப்படும்.

இந்த 15 இலக்க ஐஎம்இஐ எண்ணில் எப்போதும் ஒருரகசிய குறியீடு இருக்கும். தொலைந்த செல்போனின் ஐஎம்இஐ எண்ணை யாராவது மாற்ற முயற்சிக்கும்போது, அதில் உள்ள அந்த ரகசிய குறியீடு மாறி, ‘புதிதாக மாற்றப்பட்டுள்ள ஐஎம்இஐ எண் தவறானது’ என சிஇஐஆர் பதிவேட்டுக்கு உடனே குறுந்தகவல் அனுப்பிவிடும். ஐஎம்இஐ எண்ணை மாற்ற முயற்சிக்கும் நபரின் அப்போதைய இருப்பிடம் (‘லொக்கேஷன்’) சிஇஐஆர் பதிவேட்டுக்கு சென்றுவிடும். செல்போன் தொலைந்ததாக புகார் தரப்பட்டுள்ள காவல் நிலையத்துக்கு இந்த தகவல்களை சிஇஐஆர் அனுப்பிவிடும். எனவே, ஐஎம்இஐ எண்ணை மாற்றினாலும், காணாமல்போன செல்போனை கண்டுபிடிக்க முடியும்.

‘ட்ரூகாலர்’ மோசடியை தடுக்க திட்டம்: அதேபோல, செல்போனில் அழைப்பவரின் பெயரை தெரிந்துகொள்ள பலரும் பயன்படுத்தும் செயலி ‘ட்ரூகாலர்’. இதில், சம்பந்தப்பட்ட அழைப்பாளர் தனது பெயரை எவ்வாறு பதிவு செய்துள்ளார்களோ, அந்த பெயரைதான் ‘ட்ரூகாலர்’ காண்பிக்கும். இதனால், ED (அமலாக்கத் துறை), சிபிஐ என்பதுபோல பதிவு செய்து வைத்தும், சிலர் மோசடிகளில் ஈடுபடுகின்றனர். இதை தவிர்க்க, மகாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்களில் காலர் நேம் பிரசன்டேஷன் (சிஎன்ஏபி) என்ற திட்டம் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதில், அழைப்பாளர்கள் தங்கள் இஷ்டத்துக்கு பெயரை பதிவு செய்ய முடியாது. ‘கேஒய்சி’ படிவத்தில் என்ன பெயர் கொடுத்து, சிம்கார்டு வாங்குகிறோமோ, அந்த பெயரைதான் இது காண்பிக்கும். தவிர கூடுதலாக வேறு எந்த தகவலும் இதில் காட்டப்படாது. இத்திட்டம் அடுத்த ஆண்டு நாடு முழுவதும் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE