‘ட்ரம்ப் உடனான நேர்காணலில் டிடிஓஎஸ் அட்டாக்’ - மஸ்க் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உடனான நேர்காணலில் டிடிஓஎஸ் அட்டாக் நடைபெற்றதாக எக்ஸ் தள உரிமையாளர் எலான் மஸ்க் குற்றச்சாட்டு வைத்துள்ளார். அது குறித்து பார்ப்போம்.

அமெரிக்காவில் விரைவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளராக டொனால்ட் ட்ரம்ப் களம் கண்டுள்ளார். இந்நிலையில், எலான் மஸ்க் உடனான நேர்காணலில் அவர் பங்கேற்றார். இது எக்ஸின் ஸ்பேஸசில் ஒலிபரப்பானது. லட்சக் கணக்கானோர் இதை கேட்டிருந்தனர்.

பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் பேசி இருந்தனர். இச்சூழலில் இந்த நேர்காணல் குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கவில்லை. அதே போல உரையாடலின் போதும் சில தடங்கல்கள் ஏற்பட்டன. இதற்கு டிடிஓஎஸ் அட்டாக் தான் காரணம் என மஸ்க் தெரிவித்துள்ளார்.

அதென்ன டிடிஓஎஸ்? - Large Distributed Denial-Of-Service Attack என்பதன் சுருக்கம் தான் டிடிஓஎஸ். மிக குறைந்த நேரத்தில் அதிகப்படியான கேள்வி/சந்தேகங்களை எழுப்புவதனால் சம்பந்தப்பட்ட தளத்தில் டிராபிக் அதிகரித்து, அந்த தளமே டவுன் ஆகும். அந்த வகையான அட்டாக் தான் எக்ஸ் தளத்தில் ட்ரம்ப் - மஸ்க் உரையாடலின் போது நடந்துள்ளது. இதனை மஸ்க் உறுதி செய்துள்ளார். அதே போல பல்வேறு தளங்களின் தொழில்நுட்ப கோளாறு மற்றும் முடக்கம் குறித்த தகவலை தரவுகளுடன் தரும் டவுன் டிடெக்டர் தளமும் இதனை உறுதி செய்துள்ளது.

இதன் பின்னணியில் ஜனநாயக கட்சியின் மற்றும் ட்ரம்ப்பை ஆதரிக்காதவர்களின் செயல் இருக்கலாம் என சொல்லப்படுகிறது. இதற்கு முன்பும் ஸ்பேஸஸ் உரையாடல் இதே மாதிரியான தடங்கலை எதிர்கொண்டுள்ளது. ஒரே நேரத்தில் அதிகப்படியான பயனர்கள் இந்த உரையாடலை கேட்க விரும்பியதும் தொழில்நுட்ப கோளாறுக்கு காரணமாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது. அது குறித்து எக்ஸ் தளம் தான் விளக்க வேண்டும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE