கூகுள் 13 வயதுக்குட்பட்ட சிறாருக்கு ஜி-மெயில், யூடியூப் சேவையை அனுமதிக்க வாய்ப்பு

ஜி-மெயில், யூடியூப் மற்றும் உள்ள சேவைகளில் 13 வயதுக்கு உட்பட்ட சிறார் கணக்குத் தொடங்குவதற்கான அனுமதியை கூகுள் நிறுவனம் வழங்குவதற்கான வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கூகுள் நிறுவனம் தனது சேவைகளில் சிலவற்றுள் 13 வயதுக்கு உட்பட்டவர்களையும் கணக்கு தொடர அனுமதிக்க உள்ளதாக 'தி டைம்ஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும், அதில் பெற்றோரின் கண்காணிப்புக்கான வசதி ஏற்படுத்தப்படும் என்றும், கணக்கு வைத்திருக்கும் 13 வயதுக்கு உட்பட்டவர்களின் பயன்பாடுகள் குறித்த விவரம் பெற்றோர் கவனத்திற்காக, 'டாஷ்போர்டில்' வெளியாகும் என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்த முழுமையான தகவல்களை தொழில்நுட்ப வலைத்தளமான 'தி இன்ஃபர்மேஷன்' வெளியிட்டது.

கூகுள் நிறுவனத்தின் நம்பத்தகுந்த வட்டாரத்திடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், இந்த விவகாரம் குறித்து விளக்கம் கேட்கப்பட்டதற்கு, "வதந்திகளுக்கும் ஊகங்களுக்கும் பதில் அளிக்க முடியாது" என்று கூகுள் நிறுவனம் கூறியுள்ளது.

13 வயதுக்கு உட்பட்டவர்கள், இணைய சேவை கணக்குகளைப் பெற, ஃபேஸ்புக் மற்றும் கூகுள் ஆகிய இரு நிறுவனங்களும் இதுவரை அனுமதி வழங்கவில்லை. ஆனால், பலர் வயது வரம்பை மறைத்து, சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகின்றனர்.

அமெரிக்காவில் உள்ள சிறார் இணைய தனிப் பாதுகாப்புச் சட்டத்தின்படி, 13 வயதுக்கு உட்பட்டவர்களின் தகவல்களை சேகரிக்கும் நடவடிக்கைகளுக்கு கட்டுப்பாடு விதி உள்ளது. இதன் காரணமாக சிறாருக்கான இணைய சேவைகளை ஏற்படுத்துவதில் கட்டுப்பாடு நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE