SearchGPT: AI திறன் கொண்ட தேடுபொறியை அறிவித்தது ஓபன் ஏஐ!

By செய்திப்பிரிவு

சான் பிரான்சிஸ்கோ: ‘SearchGPT’ எனும் செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட தேடுபொறியை அறிமுகம் செய்துள்ளது ஓபன் ஏஐ நிறுவனம். இது பயனர்களுக்கு தகவல்களை திரட்டுவதில் புதிய அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2022-ம் ஆண்டின் இறுதியில் ஓபன் ஏஐ நிறுவனம் சாட்-ஜிபிடி எனும் ஜெனரேட்டிவ் ஏஐ சாட்பாட்டை அறிமுகம் செய்தது. அது டிஜிட்டல் பயனர்கள் மத்தியில் அதீத வரவேற்பைப் பெற்றது. கிட்டத்தட்ட ஜெனரேட்டிவ் ஏஐ பயன்பாடு சார்ந்த புரட்சியை அது ஏற்படுத்தியது என்றும் சொல்லலாம். இந்தச் சூழலில் SearchGPT குறித்து ஓபன் ஏஐ தற்போது அறிவித்துள்ளது.

இப்போதைக்கு இதன் புரோட்டோ டைப் மாடல் தான் வெளியாகி உள்ளது. அதையும் பயனர்கள் ஜாயின் லிஸ்டில் இணைந்து காத்திருந்த பிறகே பெற முடியும். மேலும், இது சில பயனர்களுக்கு மட்டுமே பயன்பாட்டுக்கு கிடைக்கும் எனத் தெரிகிறது. அதாவது 10,000 டெஸ்ட் யூஸர்களுக்கு மட்டுமே முதல் கட்டமாக கிடைக்கும் என தெரிகிறது.

SearchGPT: இந்த தேடுபொறியில் ‘What are you looking for?’ என்ற ஒரு டெக்ஸ்ட் பாக்ஸ் உள்ளது. அதில் பயனர்கள் தங்களுக்கு வேண்டியதை உள்ளிடலாம். பயனர்களின் தேடுதலை லிங்குகள் அடங்கிய லிஸ்டாக வழங்காமல், அதையே ஒழுங்குபடுத்தி வழங்குவதாக ஓபன் ஏஐ தெரிவித்துள்ளது. ஜிபிடி-4 மாடலில் இது இயங்குகிறது. நேரடி கன்டென்ட் ஃபீட் சார்ந்த தகவல்களை தரும் வகையில் தேர்ட் பார்ட்டி பார்ட்னர்ஸ் உடன் இணைந்து இந்த தகவல்களை ஓபன் ஏஐ வழங்குவதாக தெரிகிறது.

இது இப்போதைக்கு பயனர்களின் பயன்பாட்டுக்கு கட்டணமின்றி கிடைக்கும் எனத் தெரிகிறது. மேலும், இது கூகுளின் தேடுபொறிகளுக்கு சவால் அளிக்கும் வகையில் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE