ChatGPT-4o குரல் பிரதி - ஹாலிவுட் நடிகை அதிருப்தி; ஸ்கை வாய்ஸை நிறுத்திய ஓபன் ஏஐ

By செய்திப்பிரிவு

கலிபோர்னியா: ஓபன் ஏஐ நிறுவனத்தின் ChatGPT-4o மாடல் தனது தனது குரலை பிரதியெடுத்ததாக ஹாலிவுட் நடிகை ஸ்கார்லெட் ஜோஹான்சன் அதிருப்தியை தெரிவித்திருந்தார்.

இந்தச் சூழலில் சர்ச்சைக்கு வழிவகுத்த ஸ்கை வாய்ஸை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக ஓபன் ஏஐ தெரிவித்துள்ளது. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

“கடந்த செப்டம்பர் மாதம் ஓபன் ஏஐ நிறுவனத்தின் சிஇஓ சாம் ஆல்ட்மேன் எனக்கொரு ஆஃபர் தந்தார். ஜிபிடி 4o-வுக்கு எனது குரல் வேண்டுமென தெரிவித்தார். இதன் மூலம் நுகர்வோர் மற்றும் ஏஐ இடையிலான உரையாடல் சுமூகமானதாக இருக்கும் என தெரிவித்தார். அதை பரிசீலித்தேன். இருந்தும் தனிப்பட்ட காரணங்களால் அந்த பணியை என்னால் செய்ய முடியவில்லை.

இது நடந்து 9 மாதங்களான நிலையில் எனது குரலை கிட்டத்தட்ட பிரதிபலிக்கும் வகையில் ஜிபிடி-4oவின் ‘ஸ்கை’ வாய்ஸ் இருப்பதாக குடும்பத்தினர், நண்பர்கள் தெரிவித்தனர். அதன் டெமோவை கேட்டு நானும் அதிர்ச்சியடைந்தேன். அந்த எந்திர குரலுக்கும், எனது குரலுக்கும் பெரிய வித்தியாசங்களை என்னுடன் பழகியவர்களால் கூட அடையாளம் காண முடியாத வகையில் அது உள்ளது.

இது தொடர்பாக சாம் ஆல்ட்மேன் மற்றும் ஓபன் ஏஐ நிறுவனத்துக்கு சட்ட ரீதியாக விளக்கம் கேட்டுள்ளேன். அதோடு ஸ்கை வாய்ஸை உடனடியாக நிறுத்த வேண்டும் என தெரிவித்துள்ளேன்” என நடிகை ஸ்கார்லெட் ஜோஹான்சன் தெரிவித்துள்ளார்.

ஜிபிடி-4o: ஓபன் ஏஐ நிறுவனம் அதன் ஜிபிடி லாங்குவேஜ் மாடலான ‘ஜிபிடி-4o’ மாடலை அண்மையில் அறிமுகம் செய்தது. முந்தையை மாடல்களை காட்டிலும் ஆடியோ மற்றும் விஷுவல் சார்ந்த தெளிவான புரிதலை மிக வேகமாக பெறுகின்ற திறனை இந்த புதிய வெர்ஷன் கொண்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்தது.

ஜிபிடி-4o அறிமுகத்தின் போது அதன் டெமோவை ஓபன் ஏஐ நிறுவன தலைமை தொழில்நுட்ப அதிகாரி மிரா வெளியிட்டார். அப்போது நிகழ் நேரத்தில் சாட் பாட் உடன் சுவாரஸ்ய ஆடியோ உரையாடலை அவர் மேற்கொண்டார். அப்போது ஜிபிடி-4o குரல் வடிவம் எந்திரம் போல இல்லாமல் மனிதர்களின் குரல் போல இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழலில் ஜிபிடி-4o மாடலை ஹாலிவுட் திரைப்படமான ‘ஹெர்’ உடன் சாம் ஆல்ட்மேன் ஒப்பிட்டு பேசி இருந்தார். சாட்ஜிபிடி அறிமுகமான காலம் முதலே இணையதள பயனர்கள் அதனை ‘ஹெர்’ படத்துடன் ஒப்பிட்டு பேசி வருவது வழக்கம். அதில் வரும் ஏஐ எந்திர பாத்திரமான ‘சமந்தா’-வுக்கு குரல் கொடுத்தது ஸ்கார்லெட் ஜோஹான்சன். இதுதான் தற்போது சர்ச்சைக்கு வழிவகுத்துள்ளது.

ஜிபிடி-4o மாடலில் ப்ரீஸ், கோவ், எம்பர், ஜூனிபர் மற்றும் ஸ்கை என ஐந்து குரல்களை ஓபன் ஏஐ சேர்த்திருந்தது. இந்த குரல்கள் அனைத்தும் வாய்ஸ் ஆர்டிஸ்ட் உடன் இணைந்து ஓபன் ஏஐ நிறுவனம் உருவாக்கியதாக விளக்கம் கொடுத்துள்ளது.

ஸ்கை வாய்ஸ் விவகாரத்தில் ஓபன் ஏஐ விளக்கம்: பிரபலத்தின் குரலை ஏஐ பிரதிபலிக்க கூடாது என நாங்கள் விரும்புகிறோம். அந்த வகையில் ஸ்கை வாய்ஸின் குரல் ஸ்கார்லெட் ஜோஹான்சனுடையது அல்ல. அதற்கு வாய்ஸ் ஆர்டிஸ்ட் ஒருவர் குரல் கொடுத்திருந்தார். அதனை பிரைவசி காரணமாக பகிர்ந்து கொள்ள முடியாது.

நூற்றுக்கணக்கான வாய்ஸ் ஆர்டிஸ்டை ஆடிஷன் செய்து இந்த ஐந்து குரல்களை நாங்கள் தேர்வு செய்தோம். இதற்கு ஐந்து மாதங்கள் ஆனது. வரும் நாட்களில் மேலும் சில குரல்களை இந்த அம்சத்தில் சேர்க்க உள்ளோம் என ஓபன் ஏஐ தெரிவித்துள்ளது. இந்த அம்சத்தை கட்டண சந்தா செலுத்தியுள்ள பயனர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE