விக்கிபீடியாவில் ‘பேஜ் பிரிவியூ’ எனும் புதிய வசதி அறிமுகமாகி உள்ளது. திரையரங்குகளில் டிரைலர் காட்டுவதைப் போல, இணையத்தில் ஒளிப்படங்களை ‘தம்ப் நெய்ல்கள்’ எனப்படும் துண்டுப் படங்களாகப் பார்ப்பதுபோல, இந்த வசதி விக்கி கட்டுரை இணைப்புகளை முன்னோட்டமாகப் பார்க்க வழி செய்கிறது. மிகவும் எளிமையான இந்த வசதி, இணையவாசிகளின் விக்கிபீடியா அனுபவத்தை இன்னும் மேம்படுத்தலாம். அதைவிட முக்கியமாக விக்கிபீடியாவில் உலவும்போது தொலைந்துபோவதைக் கட்டுப்படுத்த உதவும்.
ஆதார பலம்
விக்கிபீடியாவில் தொலைந்துபோவது எனக் குறிப்பிடுவது ஆச்சரியத்தை அளிக்கலாம். விக்கிபீடியாவைத் தொடர்ந்து பயன்படுத்துவோர் இந்த அனுபவத்தை உணர்ந்திருப்பார்கள். விக்கிபீடியா பக்கத்தில் ஒரு கட்டுரையை வாசித்துக்கொண்டிருக்கும்போது அதில் உள்ள இணைப்புகளை ஒவ்வொன்றாக வரிசையாக கிளிக் செய்துகொண்டே இருப்பதைத்தான் இப்படிச் சொல்கின்றனர். அதாவது, வாசிக்க ஆரம்பித்த கட்டுரையிலிருந்து விலகி, இணைப்புகளைப் பின்தொடர்ந்து சென்றுகொண்டிருப்பது.
‘ஹைபர் லிங்ஸ்’ எனப்படும் இத்தகைய இணைப்புகள்தாம், இணையத்தின் ஆதார பலம். மற்ற எந்த சேவையையும்விட விக்கிபீடியாவில் இதன் தாக்கத்தைத் தீவிரமாக உணரலாம். இப்போது வழக்கமான விக்கிபீட்டியா கட்டுரை ஒன்றின் வடிவத்தை நினைத்துப் பாருங்கள். தலைப்பு, அறிமுகம், துணைத்தலைப்புகள் என நீளும் கட்டுரையின் முடிவில், அடிக்குறிப்புகள் தவிர இன்னும் பிற இணைப்புகளும் இருக்கும். இவை தவிர கட்டுரை நெடுகிலும், முக்கியமான பதங்களில் நீல நிற இணைப்புகள் மின்னுவதைப் பார்க்கலாம். இந்த இணைப்புகள் ஒவ்வொன்றையும் ‘கிளிக்’ செய்தால், அவை தொடர்புடைய கட்டுரைக்கான பக்கத்துக்கு அழைத்துச்செல்லும்.
மூல கட்டுரை
நாம் வாசிக்கும் கட்டுரையின் சாராம்சத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள விரும்பினாலோ கட்டுரையில் புரியாத அம்சங்கள் இருந்தாலோ இவ்வாறு இணைப்புகளை கிளிக் செய்து கூடுதல் விவரங்களைத் தெரிந்துகொள்வது தவிர்க்க இயலாதது. ஒருவிதத்தில், விக்கி கட்டுரைகளுக்கு வலுச் சேர்ப்பதும் இந்த இணைப்புகள்தாம். உதாரணத்துக்கு ‘ஸ்டிரீமிங் மீடியா’ எனும் பதத்தையே எடுத்துக்கொள்வோம். இதற்கான விளக்கத்தை அளிக்கும் அறிமுக வாசகத்திலேயே மல்டிமீடியா, எண்ட் யூசர், மீடியா பிளேயர், வீடியோ ஆன் டிமாண்ட், லைவ் ஸ்டிரீமிங் போன்ற வார்த்தைகள் நீல நிற இணைப்புகளைக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம்.
முற்றிலும் புதிய தலைப்புகளில் உள்ள கட்டுரைகளை வாசிக்கும்போது, புரியாத பல வார்த்தைகளுக்கான இணைப்புகளைப் பார்க்கலாம். இவற்றை எல்லாம் படித்துப் பார்த்தால்தான் மூலக் கட்டுரை கொஞ்சமாவது புரியும். சில நேரத்தில் கட்டுரை தரும் சுவாரசியத்தில் அதில் உள்ள இணைப்புகளை எல்லாம் ‘கிளிக்’ செய்யத் தோன்றும். விக்கிபீடியா பயன்பாட்டில் இந்த அனுபவம் தவிர்க்க இயலாதது மட்டுமல்ல; மிகவும் பயனுள்ளதும்கூட.
இந்த அனுபவத்தில் சிக்கல் இல்லாமல் இல்லை. மூலக் கட்டுரை தொடர்பான இணைப்புகளை ‘கிளிக்’ செய்யும்போது அவை ஒவ்வொன்றுக்கும் பிரவுசரில் தனித்தனிப் பெட்டிகளை (டேப்) திறக்க வேண்டியிருக்கும். இணைப்புகள் அதிகமானால், பிரவுசரில் பெட்டிகள் நீண்டுகொண்டே செல்லும். சில நேரத்தில், இணைப்புகள் வழியே முன்னேறிச்செல்லும்போது மூலக் கட்டுரையிலிருந்து விலகி வெகு தொலைவு சென்றுவிட நேரலாம். இது கவனச் சிதறலாகவும் அமையலாம்.
சிக்கலுக்குத் தீர்வு
இந்தச் சிக்கலுக்கான தீர்வைத்தான் விக்கிபீடியா தளத்தை நிர்வகிக்கும் விக்கிமீடியா அமைப்பு அறிமுகம் செய்திருக்கிறது. ‘பேஜ் பிரிவியூ’ எனும் பெயரிலான இந்த வசதி, இனி இணைப்புகளைத் தேடிச் செல்வதற்கு முன்பு அதிலுள்ள தகவல்களை முன்னோட்டமாகப் பார்த்துவிடலாம். ஒரு கட்டுரையை வாசித்துக்கொண்டிருக்கும்போதே அதிலுள்ள இணைப்புகள் குறித்து மேலும் தகவல்கள் தேவை என நினைத்தால், அந்த வார்த்தை மீது மவுசைக் கொண்டுசென்றால் போதும். அது தொடர்பான முன்னோட்டக் குறிப்பு சின்ன பெட்டியாகத் தோன்றும். அதில் கட்டுரையின் அறிமுக வாசகங்கள், ஒளிப்படம் உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்றிருக்கும். இணைப்பை கிளிக் செய்வதா வேண்டாமா என்பதை இதை வைத்துத் தீர்மானிக்கலாம்.
இதன் மூலம் இணைப்புகள் திசைமாறிச் செல்வதைத் தவிர்க்கலாம். கவனச் சிதறலும் இருக்காது. நேரமும் மிச்சம்.
குறிப்பிட்ட வார்த்தை அல்லது கருத்தைப் புரிந்துகொள்வதற்காக ஒன்றுக்கும் மேற்பட்ட பெட்டிகளை பிரவுசரில் திறக்க வேண்டிய விக்கிபீடியாவின் மைய பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் இந்த வசதி அமைவதாக, இது தொடர்பான விக்கிபீடியா பக்கம் தெரிவிக்கிறது. விக்கிபீடியாவைத் தலைகீழாக மாற்றிவிடக்கூடிய அளவுக்குப் புரட்சிகரமான வசதி இல்லை என்றாலும், விக்கி அனுபவத்தில் முக்கியமான ஒன்றுதான்.
2014-ல் சோதனை முறையில் முதன் முதலாக இதன் முன்னோட்ட வசதி உருவாக்கப்பட்டது. பின்னர் பயனாளிகள் கருத்து பெறப்பட்டு இந்த அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இடையே மொபைலிலும் இந்த வசதி தலைகாட்டியது. விக்கிபீடியா அதன் முகப்புப் பக்க இடைமுகத்தில் அத்தனை விரைவில் மாற்றங்களை செய்வதில்லை என்பதால் இந்த வசதி தொடர்பான அழகியல் உள்ளிட்ட பல அம்சங்கள் பரிசீலிக்கப்பட்டு முன்னோட்ட வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வசதியை முயன்று பார்க்கலாம். வேண்டாம் என்றால், செயலிழக்கச் செய்துவிடலாம்.
நீங்களும் பயன்படுத்திப் பார்த்து உங்கள் அனுபவத்தைப் பகிரலாம்: https://www.mediawiki.org/wiki/Page_Previews
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
1 hour ago
தொழில்நுட்பம்
1 day ago
தொழில்நுட்பம்
1 day ago
தொழில்நுட்பம்
1 day ago
தொழில்நுட்பம்
5 days ago
தொழில்நுட்பம்
6 days ago
தொழில்நுட்பம்
8 days ago
தொழில்நுட்பம்
8 days ago
தொழில்நுட்பம்
11 days ago
தொழில்நுட்பம்
12 days ago
தொழில்நுட்பம்
13 days ago
தொழில்நுட்பம்
14 days ago
தொழில்நுட்பம்
15 days ago
தொழில்நுட்பம்
15 days ago
தொழில்நுட்பம்
15 days ago