ஜிபிடி-4o அறிமுகம்: ChatGPT-யின் டெக்ஸ்ட், விஷுவல், ஆடியோ திறனை மேம்படுத்திய ஓபன் ஏஐ

By செய்திப்பிரிவு

சான் பிரான்சிஸ்கோ: ஓபன் ஏஐ நிறுவனம் அதன் ஜிபிடி லாங்குவேஜ் மாடலின் ‘ஜிபிடி-4o’ மாடலை திங்கள்கிழமை அன்று அறிமுகம் செய்தது. இதன் மூலம் ChatGPT-யின் டெக்ஸ்ட், விஷுவல், ஆடியோ திறன் விரைந்து செயல்படும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இது அந்த நிறுவனத்தின் ப்ளேக்‌ஷிப் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ‘ஜிபிடி-4 ஆம்னி’ என சொல்லப்படுகிறது. அதையே சுருக்கமாக ‘ஜிபிடி-4o’ என ஓபன் ஏஐ டேக் செய்துள்ளது. முந்தையை மாடல்களை காட்டிலும் ஆடியோ மற்றும் விஷுவல் சார்ந்த தெளிவான புரிதலை மிக வேகமாக பெறுகின்ற திறனை இந்த புதிய வெர்ஷன் கொண்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கூடிய விரைவில் இது பயனர்களின் இலவச பயன்பாட்டுக்கு கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஜிபிடி-3.5 மாடல் தான் பரவலாக சாட்ஜிபிடி பயனர்களின் பயன்பாட்டுக்கு இலவசமாக கிடைத்து வருகிறது. ஜிபிடி-4 மாடலை பயன்படுத்த கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன் டெமோவை ஓபன் ஏஐ நிறுவன தலைமை தொழில்நுட்ப அதிகாரி மிரா வெளியிட்டார். அப்போது நிகழ் நேரத்தில் சாட் பாட் உடன் சுவாரஸ்ய உரையாடலை மேற்கொண்டார் மிரா. இதன் குரல் வடிவம் எந்திரம் போல இல்லாமல் மனிதர்களின் குரல் போல இருந்தது. மேலும், கணிதம் சார்ந்த கேள்விகளுக்கு, அதற்கான பதிலை மட்டும் தராமல் அதை எப்படி கண்டறிந்தது என்பது குறித்த படிப்படியான புரிதலையும் பயனர்களுக்கு வழங்குகிறது.

ஒரு செல்ஃபி வீடியோவை பார்த்து, அதில் இடம் பெற்றிருக்கும் நபரின் உணர்ச்சியை அடையாளம் காணும் திறனையும் கொண்டுள்ளது. சந்தையில் சக நிறுவனங்களுக்கு சிறந்த போட்டியை தரும் வகையில் ஜிபிடி-4o வடிவமைக்கப்பட்டு உள்ளதாக டெக் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த புதிய ஜிபிடி-4o மாடல் மூலம் ஏஐ பாட் மற்றும் பயனர்களுக்கு இடையிலான உரையாடலில் சுவாரஸ்யம் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022-ம் ஆண்டு உலக மக்கள் மத்தியில் அதி தீவிரமாக பேசப்பட்டது சாட்ஜிபிடி. செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட இந்த ஜெனரேட்டிவ் ஏஐ சாட்பாட் உடன் பயனர்கள் உரையாட முடியும். பயனர்கள் கேட்கின்ற கேள்விகள் அனைத்துக்கும் டெக்ஸ்ட் வழியில் பதில் கொடுக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டு இருந்தது. பின்னர் குரல், படம், வீடியோ என அந்த உரையாடல் வடிவம் அடுத்தடுத்த மாடலில் அப்டேட் செய்யப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE