‘கோடிங் கற்க வேண்டிய அவசியமில்லை’ - ஏஐ காரணம் அடுக்கும் என்விடியா சிஇஓ

By செய்திப்பிரிவு

கலிபோர்னியா: ஏஐ இருப்பதால் யாரும் கோடிங் கற்க வேண்டியதில்லை என என்விடியா தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) ஜென்சென் ஹுவாங் தெரிவித்துள்ளார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் துணையினால் யார் வேண்டுமானாலும் புரோகிராமர் ஆகலாம் என தெரிவித்துள்ளார்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்த செமி கண்டக்டர் சிப் தயாரிப்பில் உலகின் முதல் நிலை நாடாக திகழ்கிறது என்விடியா. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் பன்னாட்டு நிறுவனம். ஆட்டோமேட்டிவ் மற்றும் மொபைல் கம்யூட்டிங் சார்ந்து சிப் உருவாக்கி வரும் பணியையும் மேற்கொண்டு வருகிறது. அண்மையில் அந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு ஒரே நாளில் 277 பில்லியன் டாலர் அதிகரித்தது. இது, இந்திய மதிப்பில் சுமார் ரூ.23 லட்சம் கோடி. இதன் மூலம் சந்தை மதிப்பில் உலகின் முதல் நிலை தொழில்நுட்ப நிறுவனமாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சூழலில் ஏஐ குறித்து தனது கருத்தை அந்நிறுவனத்தின் சிஇஓ ஜென்சென் ஹுவாங், “கடந்த 10 - 15 ஆண்டுகளாக பிள்ளைகள் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க வேண்டும் என சொல்லியவர்கள் தான் அதிகம். அதோடு புரோகிராமிங் கற்பதும் அவசியம் என சொல்வார்கள். ஆனால், அதன் நிலை நேர்மாறாக உள்ளது. ஏஐ எனும் அற்புத சக்தி மூலம் அனைவரும் புரோகிராமர் ஆகலாம்.

‘சி’, ‘ஜாவா’ மாதிரியான புரோகிராமிங் வேண்டியதில்லை. ஏனெனில், பயனர்கள் சொல்வதை உள்வாங்கிக் கொள்ளும் புரிதலை கணினி கொண்டுள்ளது. நாம் சொல்வதை செய்யும் வல்லமை கொண்ட கணினியை நாம் பெற்றுள்ளோம்” என தெரிவித்துள்ளார். உலக அளவில் மனிதர்களுக்கு மாற்றாக செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட எந்திரங்கள் இயங்குமா என்ற அச்சுறுத்தல் நிலவும் சூழலில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE