Rabbit R1 | மொபைல் போனுக்கு மாற்று? - AI உள்ளிட்ட அம்சங்களுடன் விற்பனை அமோகம்!

By செய்திப்பிரிவு

நியூயார்க்: கடந்த 2023-ம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் Humane நிறுவனத்தின் AI Pin என்ற சாதனத்தின் அறிமுகம் ஸ்மார்ட் கேட்ஜெட் ஆர்வலர்கள் மத்தியில் கவனம் பெற்றிருந்தது. இத்தகைய சூழலில் Rabbit எனும் அமெரிக்க ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் தயாரிப்பான ‘R1’ எனும் சாதனம் தற்போது அதீத கவனம் பெற்றுள்ளது. இதுவரை தலா 10,000 வீதம் 5 பேட்ச் ‘ஆர்1’ சாதனம் முன்பதிவு ஆகியுள்ளது. தற்போது ஆறாவது பேட்ச் முன்பதிவு தொடங்கி உள்ளது.

சதா சர்வ காலமும் கூவும் மொபைல் போனின் நச்சரிப்பை அணைக்க விரும்பும் மக்கள் தான் இன்று அதிகம். அதற்கு மாற்றாக அறிமுகமாகி உள்ள சாதனம் என்று சொல்லி தான் ‘ஆர்1’ பிராண்ட் செய்யப்படுகிறது. பார்க்க மொபைல் போனை போலவே இந்த சாதனம் உள்ளது. என்ன வழக்கமாக மொபைல் போன்களின் திரை வழியே அதனை பயன்படுத்துவோம். ஆனால், ஆர்1-ல் பெரும்பாலான பணிகள் வாய்ஸ் கமெண்ட் மூலம் மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கெனவே பிரத்யேக (Squishy) பட்டன் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் திரையின் அளவு மிகவும் சிறியது. இதுவும் நமது பாக்கெட்களில் கச்சிதமாக அடங்கும் கருவி தான்.

தொலைபேசி அழைப்பு மேற்கொள்ள, மெசேஜ் அனுப்ப உட்பட இன்னும் பிற பணிகளை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரேபிட் ஓஎஸ்-ல் (இயங்குதளம்) இயங்கும் இந்த சாதனத்தின் திரை அளவு 2.88 இன்ச். இதில் சிம் கார்டு பொருத்தி பயனர்கள் பயன்படுத்தலாம். 4ஜி நெட்வொர்க்கில் இந்த சாதனம் இயங்கும். இதில் ஜெனரேட்டிவ் ஏஐ அம்சம் இடம்பெற்றுள்ளது. அதன் ஊடாக பல்வேறு தகவல்களை பயனர்கள் பெற முடியும். இதில் இடம்பெற்றுள்ள கேமரா 360 டிகிரியில் படம் பிடிக்கும். மீடியா டெக் எம்டி6765 ஆக்டா-கோர் (ஹீலியோ பி-35) ப்ராசஸரை கொண்டுள்ளது. 4ஜிபி மெமரி, 128 ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. இதன் விலை ரூ. 16,500.

“மனித குலத்துக்கு உற்ற தோழனாக இருக்கும் வகையில் எளிய வகையிலான கணினியாக இருக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் இதனை வடிவமைத்துள்ளோம்” என ரேபிட் நிறுவன சிஇஓ ஜெஸ்ஸி விளக்கம் தந்துள்ளார். கடந்த 9-ம் தேதி முதல் 12-ம் தேதி வரையில் அமெரிக்காவில் நடைபெற்ற நுகர்வோர் எலெக்ட்ரானிக்ஸ் ஷோவில் (CES 2024) இந்த சாதனம் காட்சிக்கு வைக்கப்பட்டது. வரும் மார்ச் மாத வாக்கில் பயனர்களின் பயன்பாட்டுக்கு டெலிவரி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE