Rewind 2023: சாட்பாட் முதல் டீப்ஃபேக் வரை - ஆண்டு முழுவதும் AI ஆட்சி!

By எல்லுச்சாமி கார்த்திக்

2023-ல் தான் உலக அளவில் அனைத்து தரப்பு மக்களின் அன்றாட வாழ்விலும் என்டர் ஆனது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம். அதை வைத்து பார்த்தோம் என்றால், இந்த ஆண்டு உலக மக்களை ஆண்டது ஏஐ என்றும் சொல்லலாம். இதற்கு முன்பு வரை அங்கொன்றும், இங்கொன்றுமாக அத்தி பூத்தது போலவே ஏஐ-யின் பயன்பாடு இருந்து வந்தது. இந்த சூழலில் ஏஐ தொழில்நுட்பத்தை உலக அளவில் விரிவு செய்தது ஜெனரேட்டிவ் ஏஐ. அதற்கான விதையை விதைத்தது Open AI-யின் சாட்ஜிபிடி தான்.

தொடக்கதில் ஜெனரேட்டிவ் ஏஐ ஏற்படுத்திய ஆர்வம் காரணமாக பலர் அது சார்ந்த டூல்களை பயன்படுத்தினர். இதன் பயன்பாடு எளிதான வகையில் இருந்தது இதற்கு காரணம். பொழுதுபோக்காக இதன் தொடக்கம் இருந்தது. நாட்கள் செல்ல செல்ல கல்வி சார்ந்து, பொதுவான ஆலோசனை பெற, தகவல்களை திரட்ட, புரோகிராம்களுக்கான கோடிங் பெற, ஆடியோ - வீடியோ - இமேஜ் கன்டென்ட்களை பெற என அதன் பயன்பாடு பரவலானது.

2023-ன் தொடக்கத்திலும், அதன் முடிவிலும் ஏஐ சார்ந்த பயன்பாடு கண்டுள்ள மாற்றம் என்பது பெரிய அளவிலானது. வெறுமனே தொழில்நுட்ப வளர்ச்சி என இல்லாமல் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்த வகையில் தொழிலண்டப துறைக்கு இது மறக்க முடியாத ஆண்டாகவே 2023 அமைந்துள்ளது. இத்தகைய சூழலில் இந்த ஆண்டில் ஏஐ ஏற்படுத்திய பெஸ்ட் மற்றும் வொர்ஸ்ட் தருணங்கள்/நிகழ்வுகள் குறித்து பார்ப்போம்.

பாட்களின் பங்கு: கடந்த 2022-ல் ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி அறிமுகமானபோது பயனர்கள் அதன் ஊடாக உரையாடல் வடிவில் டெக்ஸ்ட்களை மட்டுமே ஜெனரேட் செய்யும் பாட் என்ற வகையில் அது இருந்தது. இப்போது டெக்ஸ்ட், இமேஜ் மற்றும் ஆடியோவை இதில் பயனர்கள் பெற முடிகிறது. இலவச பயன்பாடு என்பது கடந்து ப்ரீமியம் வெர்ஷனும் பயன்பாட்டில் உள்ளது. அதேநேரத்தில் கூகுள் நிறுவனத்தின் ‘பார்ட்’ சாட்பாட் ஜிபிடி-க்கு போட்டியாக வந்து நிற்கிறது. இதை கூகுளில் பயனர்கள் பெற முடிவது மிகவும் எளிது. முக்கியமாக பல்வேறு கூகுள் சேவைகளை கையாளும் திறன் கொண்டுள்ளது. இது தவிர பல்வேறு ஜெனரேட்டிவ் ஏஐ பாட்கள் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.

அச்சுறுத்திய ஏஐ: கல்வி நிலையங்களில் மாணவர்கள் சாட்பாட்களை பயன்படுத்தி வினாக்களுக்கு விடை தர கூடாது, வீட்டுப்பாடம் செய்யக் கூடாது என உலக நாடுகளை சேர்ந்த கல்வி கூடங்கள் கட்டுப்பாடு அறிவித்தன. வெறும் டெக்ஸ்ட் என் இல்லாமல் ஆடியோ, வீடியோ மற்றும் இமேஜ் என மல்டிமீடியா கன்டென்ட்களை ஜெனரேட்டிவ் ஏஐ ஜெனரேட் செய்வது பல்வேறு கலைஞர்களை அதிர்ச்சி கொள்ள செய்தது. குறிப்பாக ஐடி துறையில் பணி செய்யும் ஊழியர்கள் மேற்கொள்ளும் குறிப்பிட்டட் சில பணிகளை ஏஐ மேற்கொள்ளும் வல்லமை கொண்டுள்ளது. அதனால் தங்களது போட்டியாளர்களாக ஐடி பணி செய்யும் ஊழியர்கள் ஏஐ-யை பார்க்கின்றனர்.

மறுபக்கம் தனிநபர்கள் ஏஐ சார்ந்த டூல்களை கையாளும் விதம் பல்வேறு துறைகளில் ஆளுமை மிக்கவர்களாக வலம் வருபவர்களையே கலங்க செய்துள்ளது. அதனால் அதனை சட்ட முறைகளுக்குள் நெறி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது.

ஹாலிவுட் சினிமா ஸ்ட்ரைக்: ஹாலிவுட்டில் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. கதை உருவாக்கத்திலும் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கதை விவகாரத்தில் இத்தொழில்நுட்பத்தின் பங்கு அதிகரித்தால் தங்களின் வேலை பறிபோகலாம் என்று ஹாலிவுட் திரை எழுத்தாளர்கள் கருதினர்.

இதையடுத்து ஒரு சின்னத்திரை நிகழ்ச்சிக்கு 6 முதல் 12 எழுத்தாளர்களைப் பயன்படுத்துவது, வேலை உத்தரவாதம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து ஹாலிவுட் திரை எழுத்தாளர்கள் சங்கம் தயாரிப்பு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். அதில் முன்னேற்றம் ஏற்படாததால் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது ஹாலிவுட்டில் சினிமா துறையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த மே மாதம் தொடங்கிய இந்தப் போராட்டம் நவம்பர் வரை நீடித்தது. சுமார் 118 நாட்களுக்கு பிறகு அவர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு, 3 ஆண்டுகளுக்கான ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டது.

டீப்ஃபேக்: அமெரிக்கா, இந்தியா என உலக நாடுகளில் அதிக கவனம் பெற்றது டீப்ஃபேக் விவகாரம். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரதமர் மோடி உள்ளிட்டோரின் டீப்ஃபேக் கன்டென்ட்கள் கவனம் பெற்றன. தொடர்ந்து நடிகை ராஷ்மிகா மந்தனாவின் போலி வீடியோ இந்தியாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதற்கு காரணம் அந்த வீடியோ சித்தரிக்கப்பட்ட விதம்.

போலி வீடியோக்கள், ஆடியோக்கள், புகைப்படங்கள் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது. நான் கர்பா நடனமாடுவது போன்ற போலி வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி இதுகுறித்து அப்போது கருத்து தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், போலி வீடியோக்கள், ஆடியோக்கள், புகைப்படங்களை உருவாக்கி சமூக வலைதளங்களில் வெளியிடுவோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் புகார் அளிக்கப்பட்ட 24 மணி நேரத்துக்குள் போலி வீடியோக்களை சமூக வலைதளங்கள் நீக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

ஏஐ மூலம் ஆடைகள் அகற்றம்: டீப்ஃபேக் ஏற்படுத்திய தாக்கம் அடங்குவதற்குள் ஏஐ மூலம் ஆடைகளை அகற்றும் நியூடிஃபை (Nudify) கவனம் பெற்றது. இதற்கெனவே ஏஐ துணை கொண்டு இயங்கும் பிரத்யேக வெப்சைட்டுகள், மொபைல் போன் செயலிகள் போன்றவையும் உள்ளது. 2023-ம் ஆண்டில் மட்டும் பிரபல சமூக வலைதளங்களில் இதன் விளம்பரங்கள் 2400 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவலும் வெளியானது. இது சமூக வலைதளத்தில் தங்களது படங்களை பகிரும் நபர்களை அச்சுறுத்தியது. பெரும்பாலும் பெண்களின் ஆடைகளை அகற்றவே இந்த செயலிகள் பயன்படுத்தப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.

யுத்தக் களத்தில் தாக்குதல் மேற்கொள்ள, விளையாட்டுக் களத்தில் வர்ணனை போன்ற பணிகளை செய்ய, ஏஐ மூலம் கல்வி கற்க, மருத்துவம் என பல்வேறு துறை சார்ந்து செயற்கை நுண்ணறிவின் பங்கு பாசிட்டிவான வகையில் கவனம் பெற்றது. அதேநேரத்தில் மனிதர்களுக்கு எதிராக ஏஐ எந்திரங்கள் இயங்குமா என்ற அச்சமும் மக்களிடையே நிலவுகிறது.

அது குறித்து கடந்த ஜூலையில் சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் நடந்த செயற்கை நுண்ணறிவு குறித்த உச்சி மாநாட்டில் ரோபோக்கள் பதில் அளித்தன. “மனிதர்களின் வேலைகளை பறிக்க மாட்டோம், மனிதர்களுக்கு எதிராக செயல்பட மாட்டோம்’’ என அப்போது தெரிவித்தன. இப்போதைக்கு அந்த ரோபோக்கள் சொன்ன வார்த்தையை கேட்டு ஆறுதல் கொள்வோம்.

> இந்து தமிழ் திசை டிஜிட்டலில் 2023-ல் தொடங்கப்பட்ட ஏ.ஐ சிறப்புத் தொடரின் சமீபத்திய அத்தியாயம் > AI சூழ் உலகு 14 | செயற்கை நுண்ணறிவு துணையுடன் ஆடைகளை அகற்றும் அதிர்ச்சி!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

23 hours ago

தொழில்நுட்பம்

2 days ago

தொழில்நுட்பம்

3 days ago

தொழில்நுட்பம்

3 days ago

தொழில்நுட்பம்

8 days ago

தொழில்நுட்பம்

12 days ago

தொழில்நுட்பம்

15 days ago

தொழில்நுட்பம்

17 days ago

தொழில்நுட்பம்

25 days ago

தொழில்நுட்பம்

29 days ago

தொழில்நுட்பம்

30 days ago

தொழில்நுட்பம்

1 month ago

தொழில்நுட்பம்

1 month ago

தொழில்நுட்பம்

1 month ago

தொழில்நுட்பம்

1 month ago

மேலும்