பிரதமரின் இந்தி உரையை தமிழில் மொழி பெயர்த்த ‘பாஷினி’ AI @ காசி தமிழ்ச் சங்கமம்-2

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் பிரதமர் மோடியின் இந்தி உரையை தமிழாக்கம் செய்ய ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் முயற்சிக்கப்பட்டது.

உத்தரபிரதேச மாநிலம் வாராணசியில் 2-வது ஆண்டாக காசி தமிழ்ச் சங்கமம் நேற்று முன்தினம் தொடங்கியது. இதை தொடங்கி வைத்த பிரதமர் மோடியின் இந்தி உரையை தமிழில் மொழிபெயர்க்க வேண்டி, ஏ.ஐ. தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் முதல்முறையாக இந்த முயற்சியை மேற்கொண்டது. இதையொட்டி விழாவில் தமிழ்நாட்டிலிருந்து வந்தவர்களுக்கு ஹெட்போன் வசதி அளிக்கப்பட்டது. ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த ஹெட்போனில் பிரதமரின் இந்தி உரை தமிழில் மொழிபெயர்ப்பாகி வந்தது. இதனை பார்வையாளர்கள் கேட்டு வியந்தனர்.

இதனை தனது உரையில் குறிப்பிட்ட பிரதமர் மோடி, ‘‘இங்கு ஆர்டிபிஷியல் இன்டலிஜன்ஸ் மூலமாக புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒரு புதிய துவக்கம் ஏற்பட்டுள்ளது. எனது உரை உங்களுக்கு போய் சேர்வது மேலும் எளிதாகி உள்ளது” என்றார். அப்போது பிரதமர் மேடையிலிருந்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை நோக்கி ஆங்கிலத்தில் “இது சரியாக உள்ளதா அண்ணாமலை?” என கேட்டறிந்தார்.

பிறகு “தமிழ்நாட்டின் நண்பர்களே இது சரியாக உள்ளதா? இதை நான் முதன்முறையாகப் பயன்படுத்தி உள்ளேன். எதிர்காலத்திலும் இதை பயன்படுத்துவேன். இதன் மீது நீங்கள் விளக்கமான கருத்துகளை கூற வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.

டிஜிட்டல் குரலாக ஒலித்த இந்த மொழிபெயர்ப்பில், ‘பாஷினி’ எனும் செயலியின் உதவியும் பயன்படுத்தப்பட்டிருந்தது. பாஷினி செயலியில் எந்த ஒரு இந்திய மொழியையும் தங்கள் தாய்மொழியில் கேட்கும் வசதி உள்ளது. இந்த செயலி மூலம், 22 மொழிகளில் பதிவுகள், 14 மொழிகளில் விவாதங்கள் மற்றும் குரல்கள் மொழிபெயர்க்கப்படுகின்றன. எனினும் இதில் இன்னும் நூறு சதவீதம் துல்லியமான மொழிபெயர்ப்பு கிடைக்கவில்லை எனக் கருதப்படுகிறது. மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை சார்பில் நாளேடுகளுக்கும், ஊடகங்களுக்கும் வெளியிடப்படும் மத்திய அரசின் செய்திக்குறிப்புகளிலும் முயற்சிக்கப்பட்டு முழுப்பலன் கிடைக்கவில்லை.

இதனால் சில மாற்றங்களுக்கு பிறகு இந்த செயலி அரசு சார்பில் பயன்படுத்தப்படும் என எதிர்பாக்கப்படுகிறது. எனினும், பாஷினி செயலியை ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் மூலம் சிறு குறு மத்திய தொழில்துறையின் ஸ்டாட்அப்பினர் மற்றும் புதிய கண்டுபிடிப்பாளர்கள் ஏற்கெனவே பயன்படுத்தி வருகின்றனர். எனவே, புதிய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இதை பயன்படுத்த திட்டமிடப்படுகிறது. இதனால் மொழி பெயர்ப்பாளர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளதால், இந்த முறைக்கு கடும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE