ஒ
ரு படமோ வீடியோவோ நிகழ்வோ இணையத்தில் வைரலாகப் பரவுவது என்பது நிச்சயம் ஆய்வுக்குரிய விஷயம்தான். வைரலாகும் நிகழ்வுகளையும் செய்திகளையும் அடையாளம் காண்பதற்கென பிரத்யேக இணையதளங்களும் உருவாகி இருக்கின்றன.
அடுத்த சூப்பர் ஹிட் படத்துக்கான எதிர்பார்ப்புபோலவே, இணைய உலகிலும் அடுத்த வைரல் நிகழ்வு எது எனும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இப்போதும்கூட, சீனாவில் பள்ளி மாணவர் ஒருவர் பனிபடர்ந்த பகுதியைக் கடந்து பள்ளிக்குப் படிக்க வரும் ஒளிப்படம் வைரலாகி இருக்கிறது. துருக்கியில் சிரியா நாட்டு அகதி மாணவர் ஒருவர், ஷூ பாலிஷ் சாதனத்தைத் தனது தோளில் சுமந்தபடி, உடற்பயிற்சிக் கூடத்தில் பயிற்சி பெறுபவர்களை ஏக்கத்துடன் பார்க்கும் காட்சி வைரலாகப் பரவி, அந்த மாணவருக்கு ஆயுட்கால இலவச உறுப்பினர் சந்தா கிடைக்க வழி செய்திருக்கிறது.
முதல் வைரல் வீடியோ
இணையத்தில் முதலில் வைரலான வீடியோ வைரல் தன்மைக்கான இலக்கணக் கூறுகளைக் கொண்டது. முதல் வைரல் காலத்தில் பிராட்பேண்ட் எனும் அதிவேக இணைய வசதி கிடையாது. இணையத்தில் வீடியோ கோப்பைப் பதிவேற்றுவதும் தரவிறக்கம் செய்து பார்ப்பதும் பொறுமையைப் சோதிக்கும் விஷயம். தகவல் பரிமாற்றத்துக்கு இமெயிலே முக்கிய சாதனம். இமெயில் இணைப்புக் கோப்புகளின் அளவு பெரும் தடையாகவும் இருந்தது.
இத்தகைய சூழலில் 1997-ல் கோபக்கார மனிதர் தோன்றும் அந்த வீடியோ காட்சி வெளியானது. ‘பேட்டே.ஜெபெக்’ எனும் தலைப்பிலான அந்த வீடியோ காட்சியின் பல்வேறு வடிவங்களை நீங்களும்கூடப் பார்த்திருக்கலாம். ஏனெனில், அந்த வீடியோ வைரலாகப் புகழ்பெற்றது. இன்றளவும் அது பகிரப்பட்டு வருவதற்குக் காரணம் அந்த வீடியோவின் உள்ளடக்கம்தான்.
கோபக்கார மனிதர்
அலுவலக அறையில் அமர்ந்திருக்கும் ஊழியர் ஒருவர் பொறுமையில்லாமல் கம்ப்யூட்டர் கீபோர்டை விரல்களால் இயக்கிக்கொண்டிருக்கிறார். சில நொடிகளில் அதிருப்தி ஆவேசமாக மாற, அந்த கீபோர்டை எடுத்து கம்ப்யூட்டர் மானிட்டர் மீது போட்டு உடைக்கிறார். அருகே இருந்த ஊழியர்கள் அதிர்ச்சியில் எட்டிப்பார்க்க, அந்தக் கோபக்கார மனிதர், மானிட்டரை காலால் உதைத்துத் தள்ளுவதோடு, அந்த வீடியோ முடிகிறது.
தொழில்நுட்பத்தால் ஏற்படக்கூடிய அதிருப்தியைக் கச்சிதமாக வெளிப்படுத்தியதாகக் கருதப்படும் அந்த வீடியோ காட்சி, அந்தக் காலகட்டத்தில் பெரும்பாலானோரின் இமெயில் பெட்டியை எட்டிப்பார்த்தது. வீடியோ கோப்புகளை இமெயிலில் பகிர்வது கடினம் என்பதை மீறி, அந்த வீடியோ பலரால் ஆர்வத்தோடு பகிரப்பட்டது. இதன் விளைவாக அந்த வீடியோ காட்சி தொடர்பான செய்தி நாளிதழ்களிலும் தொலைக்காட்சிகளிலும் வெளியானது.
இப்படித்தான் அந்த வீடியோ வைரலாகப் பரவியது. இணையம் வைரல் யுகத்தில் அடியெடுத்து வைக்காத காலம் என்பதால், அப்போது அதை யாரும் உணரவில்லை. வைரல் வீடியோ எனும் கருத்தாக்கமும் அப்போது உருவாகவில்லை. ஆனால், இவற்றையெல்லாம் மீறி, வைரல் நிகழ்வுக்கான அடிப்படைக் கூறுகள் அந்த வீடியோவில் இருப்பதை இப்போது புரிந்துகொள்ளலாம்.
ஏமாற்று வீடியோ
முதலில் அந்த வீடியோ தொழில்நுட்பத்தின் போதாமையை உணரும்போது வெளிப்படக்கூடிய போதாமைக்கான வடிகாலாகக் கருதப்பட்டது. அதிருப்தியை வெளிப்படுத்த ஒரு பொருளைப் போட்டு உடைப்பது தவறில்லை எனும் எண்ணத்தையும் உறுதிப்படுத்தியது. இணையத்தில் பகிரவும் பார்த்து ரசிக்கவும் ஏற்ற வகையில் 30 நொடிகளுக்கும் குறைவாக இருந்தது.
ரசிக்கத்தக்க இந்த அம்சங்கள் தவிர, அந்த வீடியோவில் சந்தேகிக்கக்கூடிய அம்சமும் இருந்தது. வீடியோவை நன்றாகப் பார்த்தால், கம்ப்யூட்டரை அடித்து நொறுக்கும் மனிதர் லேசாக புன்னகைக்கிறார் என்பதை ஒருவர் கண்டறிந்து கூறினார். ஆக, இணையத்தின் முதல் வைரல் வீடியோவாக மட்டுமல்ல, ஒருவிதத்தில் முதல் ஏமாற்று வீடியோவாகவும் அது அமைந்ததிருந்தது. ஆனால், எதுவுமே திட்டமிடப்படாமல், எல்லாமே தற்செயலாக நடந்தது என்பதுதான் விஷயம்.
வீடியோவில் இருந்த கோபக்கார மனிதர் வின்னி லிக்கியார்டி (Vinny Licciardi ) என்பவர் அமெரிக்காவின் கொலரோடாவில் இருந்த லோரோனிக்ஸ் எனும் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நிறுவன அலுவலகத்தில் அந்த வீடியோ படமாக்கப்பட்டது. ஆனால் அவருக்கு நிறுவனம் மீது எந்தக் கோபமும் இல்லை. அப்போது நிறுவனம் பாதுகாப்பு கேமரா சாதனத்தை உருவாக்கி இருந்தது. அந்த கேமராவின் படம் பிடிக்கும் திறமையை விளக்கிக் காட்டுவதற்காக வீடியோ படம் எடுக்க அதன் தலைவர் பீட்டர் ஜான்கோவ்ஸ்கி விரும்பினார்.
எல்லாம் டூப்பு
அந்த விளம்பர வீடியோவுக்காகத்தான் லிக்கியார்டி நடித்தார். முதல் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து அவர் பணம் எடுத்துவிட்டு, நிறுவன குடோனில் திருடும்போது பிடிபடுவதுபோல காட்சியைப் படமாக்கினர். இதனிடையே கீபோர்டால் கம்ப்யூட்டரை அடித்து நொறுக்கும் காட்சியையும் படம் பிடித்தனர். இந்தக் காட்சியை நிறுவனத் தலைவர்தான் படமாக்கினார். முதல் முறை நடிக்கும்போது லிக்கியார்டியால் சிரிப்பை அடக்க முடியததால் மீண்டும் ஒருமுறை அந்தக் காட்சியை எடுத்துள்ளனர். அதன் பிறகு அந்த வீடியோவை சி.டி.யாக மாற்றி நிறுவன விற்பனைக் கையேடுகளுடன் அனுப்பி வைத்தனர். அத்தோடு அந்த விஷயத்தை மறந்தும் விட்டனர்.
சில மாதங்கள் கழித்து, அந்த வீடியோ காட்சி இமெயிலில் உலா வரத் தொடங்கியது. கம்ப்யூட்டரை ஒருவர் போட்டு உடைக்கும் அந்த வீடியோ பலரைக் கவர்ந்ததால், முதலில் நிறுவனங்களுக்கு இடையே பகிரப்பட்டது. அப்போது வீடியோ காட்சிகளைப் பார்ப்பதில் பிரச்சினை இருந்ததால், அதன் அளவு சுருக்கப்பட்டு, 30 நொடிக்கும் குறைவான கோப்பாக மாற்றப்பட்டது. இதன் பிறகே அதை இமெயிலில் பகிர்வது சாத்தியமானது. இப்படிப் பகிரப்பட்ட வீடியோ கோப்பு, ஒரு கட்டத்தில் லிக்கியார்டியின் இமெயிலையும் எட்டிப்பார்த்தது.
கேள்வியான உள்ளடக்கம்
இதனிடையே பெனாட் ரிகாட் (Benoit Rigaut) என்பவர் இந்த வீடியோவால் கவரப்பட்டு அதற்காக ஓர் இணையதளத்தையும் உருவாக்கினார். அந்தத் தளத்தில் வீடியோவைத் தரவிறக்கம் செய்ய வழி செய்தவர், அந்த வீடியோவின் உள்ளடக்கம் குறித்த கேள்விகளையும் எழுப்பியிருந்தார். வீடியோவிலுள்ள மனிதர் லேசாக சிரித்துக்கொண்டிருப்பதை சுட்டிக்காட்டிய அவர், இந்த வீடியோ உருவாக்கப்பட்டதற்கான உண்மையான நோக்கம் வேறு என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இது கற்பனையான குற்றச்சாட்டாக அமைந்தாலும், ஒரு இணைய நிகழ்வை அக்குவேறு ஆணி வேறாக அலசி, ஆராய்ந்து அதன் பின்னணியில் உள்ள உண்மையைக் கண்டறிவதற்கான முயற்சியின் தொடக்கப் புள்ளியாக இது கருதப்படுகிறது. இதே பாணியில் பல இணையதளங்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு, கோபக்கார மனிதர் வீடியோ யூடியூப்பிலும் பதிவேற்றுப்பட்டுள்ளது. இதே பாணியில் தொழில்நுட்ப சாதனங்களைப் போட்டு உடைக்கும் வீடியோக்களும் தொடர்ந்து உருவாக்கப்படுகின்றன. வயர்டு தொழில்நுட்ப இதழில் இந்த முதல் வைரல் வீடியோ பற்றிய அலசல் கட்டுரை வெளியாகியுள்ளது: goo.gl/Qiz7BB
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
1 day ago
தொழில்நுட்பம்
2 days ago
தொழில்நுட்பம்
2 days ago
தொழில்நுட்பம்
2 days ago
தொழில்நுட்பம்
6 days ago
தொழில்நுட்பம்
7 days ago
தொழில்நுட்பம்
9 days ago
தொழில்நுட்பம்
9 days ago
தொழில்நுட்பம்
12 days ago
தொழில்நுட்பம்
13 days ago
தொழில்நுட்பம்
14 days ago
தொழில்நுட்பம்
15 days ago
தொழில்நுட்பம்
16 days ago
தொழில்நுட்பம்
16 days ago
தொழில்நுட்பம்
16 days ago