சுரங்கப் பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களை படம் பிடித்த எண்டோஸ்கோபி கேமரா: செலுத்தப்பட்டது எப்படி?

By செய்திப்பிரிவு

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம் சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக சில்க்யாரா-பர்கோட் இடையே 4.5 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 12-ம் தேதி இந்த சுரங்கப் பாதையில் மண் சரிந்தது. அதனால் சுரங்கப் பாதைக்குள் 41 தொழிலாளர்கள் சிக்கி உள்ளனர்.

அவர்களை மீட்பதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் முதல் முறையாக செவ்வாய்க்கிழமை காலை சுரங்கத்தில் சிக்கியுள்ள அவர்களது வீடியோ வெளியானது. எண்டோஸ்கோபி கேமரா மூலம் இது சாத்தியமானது.

சுரங்கத்துக்கு வெளியில் இருந்து மண் சரிவுக்குள் செலுத்தப்பட்டுள்ள 6 இன்ச் அளவு கொண்ட குழாயினுள் நெகிழ்வு தன்மை கொண்ட எண்டோஸ்கோபி கேமரா மற்றும் அதன் ஓயர்கள் அனுப்பப்பட்டன. அந்த முயற்சி வெற்றிகரமாக சிக்கியுள்ள தொழிலாளர்களை அடைந்ததன் மூலம் அவர்களை பார்க்க முடிந்தது. டெல்லியில் இருந்து திங்கட்கிழமை இரவு இந்த கேமரா கொண்டு வரப்பட்டது. ‘விரைவில் பத்திரமாக மீட்டு விடுவோம்’ என மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எண்டோஸ்கோபி கேமரா? இந்த சாதனம் மருத்துவ துறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது குறித்து எண்டோஸ்கோப் சோதனை மேற்கொண்டவர்கள் அறிந்திருக்கலாம். இதனை நோயாளியின் உடலுக்குள் செலுத்துவதன் மூலம் உறுப்புகளின் நிலையை அறிந்து கொண்டு, அதற்கு ஏற்ற வகையில் மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பார்கள். புது வகை எண்டோஸ்கோபி கேமரா ‘சிப் ஆன் டிப்’ தொழில்நுட்பத்தில் இயங்குகிறது. துல்லியமான படத்தை பெற இதில் எல்இடி-யும் பொருத்தப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி தான் குழாயினுள் செலுத்தி தொழிலாளர்களின் வீடியோ காட்சி பெறப்பட்டுள்ளது. பொதுவாக இது மாதிரியான சிக்கலான மீட்பு பணிகளின் போது இந்த வகை கேமரா பயன்படுத்தப்படும் என சொல்லப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE