இந்தியாவில் 20 லட்சம் வீடியோக்கள் நீக்கம்: யூடியூப் நடவடிக்கை

By செய்திப்பிரிவு

மும்பை: இந்தியாவில் தவறான தகவல்களைக் கொண்ட 20 லட்சம் வீடியோக்களை நீக்கியுள்ளதாக யூடியூப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் நடைபெற்ற கூகுள் ஃபார் இந்தியா 2023 நிகழ்வின்போது பேசிய யூடியூப் இந்தியாவுக்கான அரசு விவகாரங்கள் மற்றும் பொதுக் கொள்கைத் தலைவரான மீரா சாட், யூடியூப் விதிகளை மீறும் வகையில் பதிவேற்றம் செய்யப்பட்ட 20 லட்சம் வீடியோக்களை நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். நீக்கப்பட்ட பெரும்பாலான வீடியோக்கள் 10-க்கும் குறைவான பார்வைகளை மட்டுமே கொண்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், யூடியூபின் தரத்தை மேம்படுத்தும் நடவடிக்கையாக, வரும் மாதங்களில் இந்தியாவில் ‘வாட்ச் பேஜ்’ என்ற புதிய அம்சத்தையும் யூடியூபில் அறிமுகப்படுத்த இருப்பதாகவும், இந்த அம்சம் பயனர்களுக்கு நம்பகமான செய்திகளை மட்டுமே பரிந்துரைக்கும் என்றும் மீரா சாட் தெரிவித்துள்ளார்.

வீடியோக்கள் நீக்கம் குறித்து எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள யூடியூப் இந்தியா நிர்வாகம், இந்தியாவில் கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரை, உண்மைக்குப் புறம்பான தகவல்களைக் கொண்ட மற்றும் கொள்கை வழிகாட்டுதலின் படி பதிவேற்றம் செய்யப்படாத 20 லட்சம் யூடியூப் வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் இயந்திரக் கற்றல் முறை மற்றும் மனிதர்களை பயன்படுத்தி தொடர் கண்காணிப்பு மூலம் இதனை செய்ததாக கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE