ChatGPT உடன் பேசலாம்: ஓபன்AI அறிமுகம் செய்துள்ள புதிய அம்சம்

By செய்திப்பிரிவு

சான் பிரான்சிஸ்கோ: ஜெனரேட்டிவ் ஏஐ சாட்பாட் ஆன சாட்ஜிபிடி உடன் பயனர்கள் பேசும் வகையிலான அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது ஓபன் ஏஐ. இதன் மூலம் பயனர்கள் மற்றும் சாட்ஜிபிடி சாட்பாட் இடையில் குரல் வழியில் உரையாடல் மேற்கொள்ள முடியும் என தெரிகிறது.

கடந்த ஆண்டு உலக மக்கள் மத்தியில் அதி தீவிரமாக பேசப்பட்டது சாட்ஜிபிடி. செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட இந்த சாட்பாட் உடன் பயனர்கள் உரையாட முடியும். பயனர்கள் கேட்கின்ற கேள்விகள் அனைத்துக்கும் டெக்ஸ்ட் வழியில் பதில் கொடுக்கும் வல்லமை கொண்டது சாட்ஜிபிடி. கதை, கட்டுரை, கவிதை, கம்ப்யூட்டர் புரோகிராம் என அனைத்தையும் இதில் பெறலாம். ஓபன் ஏஐ எனும் நிறுவனம் சாட்ஜிபிடி-யை வடிவமைத்தது.

இந்த சூழலில் அமேசானின் அலெக்சா, ஆப்பிளின் சிரி போன்ற வாய்ஸ் அசிஸ்டென்ட் இயக்கத்தின் அம்சத்தை அடிப்படையாக கொண்டு சாட்ஜிபிடி-யிலும் பயனர்கள் குரல் வழி உரையாடல் மேற்கொள்ளும் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்போதைக்கு இது சாட்ஜிபிடி பிளஸ் மற்றும் பிஸினஸ் என்டர்பிரைஸ் பயனர்களின் பயன்பாட்டுக்கு மட்டுமே கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கதை, ரெசிபி, கவிதை, பேச்சு, விளக்கம் போன்ற உரைகளை இந்த அம்சத்தின் மூலம் பயனர்கள் கேட்க முடியும் என தெரிகிறது. ஜுனிபர், ஸ்கை, கோவ், எம்ப்ளர், பிரீஸ் என ஐந்து வகையான குரல்களில் சாட்ஜிபிடி பேசுவதை கேட்கலாம் என தெரிகிறது. இதற்காக ஐந்து தொழில்முறை குரல் வல்லுநர்களின் பங்களிப்பை ஓபன் ஏஐ பெற்றுள்ளது.

இதன் மூலம் இதுவரை டெக்ஸ்ட் வடிவில் இருந்த சாட்ஜிபிடி-யின் இயக்கம் மனிதர்களின் குரலை போன்ற வாய்ஸ் அசிஸ்டென்ட்டாக மாற்றம் கண்டுள்ளது. அடுத்த இரண்டு வார காலத்துக்குள் இந்த அம்சம் பயனர்களுக்கு கிடைக்கப்பெறும் என ஓபன்ஏஐ அறிவித்துள்ளது. ஆக, இரவு நேரங்களில் கதை கேட்க, விவாதம் மேற்கொள்ளவும் முடியும். இதேபோல இமேஜ்களை கொண்டும் சாட்ஜிபிடி உடன் பயனர்கள் சாட் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE