''ஐபோன் 15 மாடல் ஃபோன் அதிகம் ஹீட் ஆகிறது'': பயனர்கள் தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: அண்மையில் இந்தியா உட்பட உலக நாடுகளில் ஐபோன் 15 சீரிஸ் ஃபோன்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்தது. இந்த சூழலில் ஐபோன் 15 மாடல் ஃபோன்கள் அதிகம் சூடாவதாக (Heat) பயனர்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ஆப்பிள் நிறுவன போனுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக இந்த சிக்கல், புரோ மாடல்களை பயன்படுத்தி வரும் பயனர்கள் அதிகம் எதிர்கொள்வதாக தகவல்.

இது குறித்த தகவலை ஆப்பிள் ஆன்லைன் ஃபாரம் (Forum), எக்ஸ் போன்ற சமூக வலைதளங்களில் பயனர்கள் தெரிவித்துள்ளனர். ஃபேஸ் டைம் வீடியோவில் சாட் செய்யும்பொது அல்லது தொலைபேசி அழைப்பை மேற்கொள்ளும்போது அல்லது கேமிங்கில் ஈடுபடும்போது ஐபோன் 15-ன் பின்புறம் அல்லது பக்கவாட்டு பகுதி ஹீட் ஆவதாக பயனர்கள் தெரிவித்துள்ளனர். பயனர்களில் சிலருக்கு ஃபோனை சார்ஜ் செய்யும்போதும் இந்த சிக்கலை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

ஆப்பிள் டெக்னிக்கல் குழுவினரும் இந்த சிக்கல் குறித்து பயனர்களுக்கு விளக்கம் கொடுத்துள்ளதாக தெரிகிறது. ஐபோன் அதிகம் சூடாவது குறித்த முந்தைய பயனர் வழிகாட்டுதலை அவர்கள் தரப்பில் பயனர்களுக்கு பரிந்துரைப்பதாக தகவல். அதீத அப்ளிகேஷன் பயன்படுத்துவது, புதிய சாதனத்தை முதல் முறையாக செட் செய்யும் போதும் இந்த சிக்கல் வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

கடந்த காலங்களில் ஐபோன் சார்ந்த சிக்கல்கள் எழும்போது அதற்கு சாஃப்ட்வேர் அப்டேட் மூலம் ஆப்பிள் நிறுவனம் தீர்வு கண்டது. டைப்-சி யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் உடன் முதல் முறையாக சந்தையில் ஐபோன் அறிமுகமாகி உள்ளது. ஆப்பிள் நிறுவன வருவாயில் ஐபோனின் பங்கு ஐம்பது சதவீதம் என தெரிகிறது. அதனால் இதற்கு ஆப்பிள் விரைந்து தீர்வு காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE