எக்ஸ் பயனர்களுக்கு மாதாந்திர பயன்பாட்டுக் கட்டணம்: எலான் மஸ்க் திட்டம்

By செய்திப்பிரிவு

சான் பிரான்சிஸ்கோ: எக்ஸ் (முன்பு ட்விட்டர்) சமூக வலைதளத்தில் பயனார்களிடத்தில் சிறிய அளவிலான மாதாந்திர பயன்பாட்டுக் கட்டணத்தை வசூலிக்க திட்டமிட்டு இருப்பதாக அதன் உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இதன் மூலம் எக்ஸ் தளத்தில் பாட்களின் (Bot) இயக்கத்தை தடுக்க முடியும் என நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கடந்த ஆண்டு வாங்கி இருந்தார். அது முதல் அந்த தளத்தில் பல்வேறு மாற்றங்களை தன் விருப்பத்துக்கு ஏற்ப மேற்கொண்டு வருகிறார். ஊழியர்கள் பணி நீக்கம் தொடங்கி அங்கீகரிக்கப்பட்ட பயனர்களிடத்தில் சந்தா கட்டணம் வரையில் என அது நீள்கிறது. ட்விட்டரின் பெயரை எக்ஸ் என மாற்றி இருந்தார். இந்தச் சூழலில், அண்மையில் இஸ்ரேல் நாட்டு பிரதமர் பெஞ்சமின் உடன் பேசி இருந்தார். அப்போது அவரை இதனை தெரிவித்திருந்தார்.

சுமார் 550 மில்லியன் பயனர்கள் மாதந்தோறும் எக்ஸ் தளத்தை பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் நாள் ஒன்றுக்கு 100 முதல் 200 மில்லியன் பதிவுகளை ஜெனரேட் செய்கிறார்கள். இந்த நிலையில், எக்ஸ் தளத்தில் பாட்களுக்கு தீர்வு காணும் வகையில், சிறிய அளவிலான தொகையை பயன்பாட்டுக் கட்டணமாக வசூலிக்கும் திட்டம் உள்ளது என மஸ்க் தெரிவித்தார். இருந்தாலும் பயனர்களிடத்தில் எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படும், சந்தா செலுத்துவதால் பயனர்களுக்கு கிடைக்கும் அம்சங்கள் என்ன என்பது குறித்த விவரங்களை அவர் பகிரவில்லை.

ஏஐ மற்றும் வெறுப்புப் பேச்சு குறித்தும் மஸ்க் மற்றும் இஸ்ரேல் பிரதமர் இடையிலான உரையாடலில் விவாதிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் எக்ஸ் தளத்தில் பாட்களின் செயல்பாட்டை தடுக்க தடுமாறியுள்ளது குறிப்பிடத்தக்கது. எக்ஸ் தளத்தை வாங்க இதுவும் ஒரு காரணம் என மஸ்க் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ட்விட்டர் ப்ளூ சேவையை பயன்படுத்த விரும்பும் பயனார்களிடத்தில் சந்தா வசூலித்து வருகிறது எக்ஸ். இதற்காக சில பிரத்யேக அம்சங்களை பயனர்களுக்கு அந்நிறுவனம் வழங்கி வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE