2017: இணையத்தை அதிரவைத்த தருணங்கள்!

By சைபர் சிம்மன்

இணையம், தொழில்நுட்ப உலகைப் பொறுத்தவரை இந்த ஆண்டில் நிகழ்வுகளும் மைல்கற்களும் நிறைந்த ஆண்டாக இருக்கிறது. கூடவே சர்ச்சைகளும் சோதனைகளும். ரோபோட், இயந்திரக் கற்றல், பொய்ச் செய்தி பிரச்சினை, சைபர் தாக்குதல், புதிய கேட்ஜெட்கள், தானியங்கிமயம் என இந்த ஆண்டு ஆதிக்கம் செலுத்திய நிகழ்வுகள், போக்குகள் பற்றி ஒரு கண்ணோட்டம்.

நான் ரோபோட்!

இந்த ஆண்டு முழுவதும் விதவிதமான ரோபோட்கள் பற்றிய செய்திகள் கண்ணில் பட்டுக்கொண்டே இருந்தன. ஜனவரியில் நடந்த நுகர்வோர் மின்னணுக் கண்காட்சியில் இல்லத் தேவைகளுக்கான நவீன ரோபோட் உள்ளிட்ட எந்திரன்கள் ஹைலைட்டாக அமைந்தன. ஆண்டின் மத்தியில் செயற்கை நுண்ணறிவு ஆற்றல் கொண்ட ‘சோபியா ரோபோ’ சவுதி அரேபியாவின் குடியுரிமை பெற்று உலகின் முதல் ரோபோ பிரஜையானது. சோனி நிறுவனம் ஐபோ நாய்க்குட்டி ரோபோட்டை மீண்டும் அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்தது. சர்வதேச ஒளிப்படப் போட்டியில், ஆண்ட்ராய்டு ரோபோட்டின் ஒளிப்படச் சித்திரம் பரிசுக்காகத் தேர்வானது விவாதத்தை ஏற்படுத்தியது.

இயந்திரக் கற்றல்

இந்த ஆண்டு கவனத்தை ஈர்த்த மற்றொரு முதன்மைக் கருத்தாக்கம் ‘மெஷின் லேர்னிங்’ எனப்படும் இயந்திரக் கற்றல். அதே போலவே செயற்கை நுண்ணறிவு குறித்தும் பெரிதாகப் பேசப்பட்டது. இந்த இரண்டையும் அடிப்படையாகக் கொண்ட பாட்கள் எனப்படும் அரட்டை மென்பொருள்களும் கவனத்தை ஈர்த்தன. ஸ்மார்ட்போனில் டிஜிட்டல் உதவியாளராக வீற்றிருப்பதோடு, சேவைத்துறை உள்ளிட்ட பல துறைகளில் அரட்டை மென்பொருட்கள் கோலோச்சும் நிலை உருவாகும் என ஆருடம் கூறப்பட்டது. செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தில் மனித குலத்துக்கே ஆபத்தாக முடியும் எனும் எச்சரிக்கைக் குரல் ஸ்டீபன் ஹாக்கிங் உள்ளிட்ட விஞ்ஞானிகளால் எழுப்பப்பட்டது.

பொய்ச் செய்தி

‘ஃபேக் நியூஸ்’ எனப்படும் பொய்ச் செய்தி பிரச்சினை பரவலாகக் கவனத்தை ஈர்த்தது. இணையத்தின் நம்பகத்தன்மையைக் காப்பாற்றுவது எப்படி என வல்லுநர்களையும் நெட்டிசன்களையும் அது யோசிக்க வைத்தது. பொய்ச் செய்தி பகிரப்படுவதில் ஃபேஸ்புக், கூகுள் இரண்டும் விமர்சனத்துக்கு ஆளாயின. இரண்டு நிறுவனங்களுமே தங்கள் பங்குக்குப் பொய்ச் செய்திகளை வடிகட்டும் அம்சங்களை அறிமுகம் செய்தன. உலக அளவில் மட்டுமல்லாமல், ஒவ்வொரு நாட்டிலும்கூட உள்ளூர் அளவில் பொய்ச் செய்திகளின் தாக்கத்தை உணர முடிந்தது. இணையம் சமாளிக்க வேண்டிய முக்கிய பிரச்சனையாகப் பொய்ச் செய்தி அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது.

இணைய சமநிலை

பொய்ச் செய்தி பிரச்சினை போலவே இணைய சமநிலையும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பான விவாதம் அமெரிக்காவில் அனல் பறந்தது. இணைய சமநிலை காக்கப்பட வேண்டும் என இணைய முன்னோடிகள் ஒருமித்த குரல் எழுப்பியதை மீறி, அந்த நாட்டில் இணைய சமநிலைக்கு ஆதரவான விதிமுறைகள் விலக்கப்படுவதற்கான முடிவு மேற்கொள்ளப்படது. இது தொடர்பான சட்டரீதியிலான போராட்டம் தொடங்கியிருக்கிறது. மாறாக, இந்தியாவில் இணைய சம நிலைக்கு ஆதரவான உறுதியான பரிந்துரைகளை டிராய் அமைப்பு வழங்கி முன்னுதாரணமாகத் திகழ்கிறது.

சூப்பர் கேட்ஜெட்கள்

இந்த ஆண்டு எண்ணற்ற ஸ்மார்ட்போன் மாதிரிகள் அறிமுகமாயின. ஆனாலும், ஸ்மார்ட் கேட்ஜெட்கள்தான் அதிகக் கவனத்தை ஈர்த்தன. குறிப்பாக, கூகுள் அறிமுகம் செய்த செயற்கை நுண்ணறிவால் தானாகப் படம் எடுக்கக்கூடிய கேமரா இந்தப் பிரிவில் புதிய போட்டியைத் தொடங்கிவைத்தது. கூகுள் நிறுவனம் பிக்சல் ரக போனை நேரடியாகவும் அறிமுகம் செய்தது. ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் தவிர, இல்லங்களுக்கான ஸ்மார்ட் சாதனங்களும் அறிமுகமாயின.

புளுவேல் பீதி

கேண்டி கிரஷ், டெம்பிள் ரன், ஆங்ரி பேர்டு போன்ற விளையாட்டுகளுக்கு இளசுகளும் வாண்டுகளும் அடிமையாகிவிடுவதாக விமர்சனம் இருந்தாலும், இவை பெரும் ஆபத்தானவையாகக் கருதப்படவில்லை. ஆனால், திடீரென இணைய உலகில் முளைத்த புளுவேல் கேம், விடலைகள் மத்தியில் தற்கொலை உணர்வை தூண்டும் தன்மை கொண்டதாகப் பெரும் பீதியை ஏற்படுத்தியது. குறிப்பாக, இந்தியாவில் இந்த பீதி அதிகமாக இருந்தது. நீதிமன்றங்கள் கடிவாளம் போடும் அளவுக்குப் பிரச்சினை தீவிரமானது.

சர்ச்சைச் செயலி

இந்த ஆண்டு வைரலாகப் பரவிய செயலி எனும் பெருமையை சாரா தட்டிச்சென்றது. அனாமதேயமாக நண்பர்களிடம் இருந்து கருத்துகளைக் கோர வழி செய்த இந்தச் செயலி அறிமுகமான சில மாதங்களிலேயே லட்சக்கணக்கில் பதிவிறக்கம் செய்யப்பட்டுப் பரவலானது. ஒரு கட்டத்தில் ஃபேஸ்புக் டைம்லைனில் பார்த்தால் நண்பர்களின் சாரா செயலி சார்ந்த பதிவுகளாக இருந்தன. இந்தச் செயலியின் தன்மையைப் பயன்படுத்திக்கொண்டு பலரும் இணைய தாக்குதலில் ஈடுபட்டதாகவும் புகார் எழுந்தது. இந்தச் செயலி அந்தரங்க உரிமை சார்ந்த கவலையையும் ஏற்படுத்தியது. ஆனால், இந்தச் செயலி வந்த வேகத்தில் காணாமலும்போனது.

ட்விட்டர் 280

குறும்பதிவு சேவையான ட்விட்டரின் அடையாளமே அதன் 140 எழுத்துகள் எனும் கட்டுப்பாடுதான். ஆனால், அந்த வரம்பை இரட்டிப்பாக்கி 280 எழுத்துக்களாக உயர்த்துவத்துவதாக ட்விட்டர் அறிவித்தது. தீவிர ட்விட்டர் அபிமானிகள் இதை ரசிக்கவில்லை என்றாலும், சோதனை முறையில் பயன்படுத்தி பின்னர் அறிமுகம் செய்யப்பட்டது. ட்விட்டரின் இந்த உத்தி சரியானாதா, அது தன் ஆதார அடையாளத்தை இழக்கிறதா என்ற விவாதத்தையும் இது கிளப்பியது.

எம்பி 3-க்கு குட்பை

டிஜிட்டல் இசைத்துறையில் பெரும் மாற்றத்தைக் கொண்டுவந்த எம்பி 3 கோப்பு வடிவத்தின் உரிமம் முடிவுக்கு வந்தது. இதைவிட மேம்பட்ட வடிவமான ஏஏசி கோப்பு வடிவம் முன்னிறுத்தப்படும் என எம்பி 3-யை உருவாக்கிய ஆய்வு அமைப்பு அறிவித்தது. எம்பி 3 கோப்பு வடிவத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதில் எந்தச் சிக்கலும் இல்லை என்றாலும், அதற்கான அதிகாரபூர்வ ஆதரவு இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இதேபோலவே எம்.எஸ். பெயிண்ட், ஆறு நொடி வீடியோ சேவையான வைன் ஆகியவையும் இந்த ஆண்டு மூடுவிழா கண்டன.

ஹாஷ்டேக் இயக்கம்

ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் ஹாஷ்டேக் அறிமுகமான பத்தாண்டு கொண்டாட்டம் இந்த ஆண்டு நடந்தது. 2007-ல் ட்விட்டர் பயனாளிகள் மத்தியில் முதலில் அறிமுகமான ஹாஷ்டேக் இன்று இணையம் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது. ஹாஷ்டேகின் ஆற்றலை உணர்த்தும் வகையில் இந்த ஆண்டு பல ஹாஷ்டேக்குகள் பயன்படுத்தப்பட்டன. அமெரிக்காவில் #மீடு ஹாஷ்டேக் பெண்கள் மீதான பாலியல் தாக்குதல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

இந்தியாவில் அப்பாவிகள் மீது மதத்தின் பெயரால் நடத்தப்படும் வன்முறைக்கு எதிராக #நாட் இன்மைநேம் ஹாஷ்டேக் அமைந்தது. தமிழகத்தில் நீட் தேர்வு விவகாரத்தில் தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் நினைவைப் போற்றும் வகையிலும் அவரது மரணத்துக்கு நியாயம் கேட்கும் வகையிலும் #RIPDrAnitha, #JusticeForAnitha போன்ற ஹாஷ்டேக் பயன்படுத்தப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

1 day ago

தொழில்நுட்பம்

3 days ago

தொழில்நுட்பம்

3 days ago

தொழில்நுட்பம்

3 days ago

தொழில்நுட்பம்

6 days ago

தொழில்நுட்பம்

7 days ago

தொழில்நுட்பம்

10 days ago

தொழில்நுட்பம்

10 days ago

தொழில்நுட்பம்

12 days ago

தொழில்நுட்பம்

14 days ago

தொழில்நுட்பம்

14 days ago

தொழில்நுட்பம்

15 days ago

தொழில்நுட்பம்

16 days ago

தொழில்நுட்பம்

17 days ago

தொழில்நுட்பம்

17 days ago

மேலும்