எஸ்எஸ்எல்வி வடிவமைப்பின் தொழில்நுட்பத்தை பகிர திட்டம் - தனியார் நிறுவனங்களுக்கு இஸ்ரோ அழைப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: சிறிய ரக எஸ்எஸ்எல்வி ராக்கெட்களை வடிவமைப்பதற்கான பயிற்சி கருத்தரங்கில் பங்கேற்க தனியார் நிறுவனங்களுக்கு இஸ்ரோ அழைப்பு விடுத்துள்ளது.

விண்வெளி ஆய்வில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை ஊக்குவிப்பதற்காக 2020-ம் ஆண்டு இன்ஸ்பேஸ் என்ற அமைப்பை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) உருவாக்கியது. இதன்மூலம் ராக்கெட், செயற்கைக்கோள் வடிவமைப்பில் தனியார் நிறுவனங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் சிறிய ரக எஸ்எஸ்எல்வி ராக்கெட்களை வடிவமைக்கும் தொழில்நுட்பத்தை தனியார் நிறுவனங்களிடம் பகிர்வதற்கு இஸ்ரோ முன்வந்துள்ளது.

இதுதொடர்பாக இஸ்ரோ வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: சிறிய செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதற்கான தேவைகள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன. அதைக்கருத்தில் கொண்டு எடை குறைவான செயற்கைக்கோள்களை செலுத்த எஸ்எஸ்எல்வி ராக்கெட் வடிவமைக்கப்பட்டது. தற்போது அந்த ராக்கெட்டின் வடிவமைப்பு தொழில்நுட்பத்தை இந்திய தனியார் நிறுவனங்களிடம் பகிர்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

விருப்பமுள்ள நிறுவனங்கள் எஸ்எஸ்எல்வி ராக்கெட்களை வடிவமைக்கவும், வர்த்தகம் மேற்கொள்ளவும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கான பயிற்சி கருத்தரங்கம் ஆகஸ்ட் 2-ம் தேதி பெங்களூரில் நடைபெற உள்ளது.

அதில் பங்கேற்கும் நிறுவனங்களுக்கு எஸ்எஸ்எல்வி ராக்கெட் குறித்த புரிதல் ஏற்படும். அந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பும் தனியார் இந்திய நிறுவனங்கள் https://www.inspace.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். கூடுதல் விவரங்களை மேற்கண்ட தளத்தில் அறியலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE