‘X’ உள்ளே... நீலக் குருவி வெளியே... - ட்விட்டர் பயனர்களின் எதிர்வினை எப்படி?

By செய்திப்பிரிவு

நியூயார்க்: ட்விட்டர் சமூக வலைதளத்தின் லோகோவை மாற்றிவிட்டார், அதன் உரிமையாளர் எலான் மஸ்க். புதிய லோகோவான ‘X’ உள்ளேயும், பழைய லோகோவான ‘நீலக் குருவி’ வெளியேயும் சென்றுள்ளது. இதற்கு எதிர்வினையை எலான் மஸ்க் சந்தித்து வருகிறார்.

ட்விட்டரின் லோகோவை X என மாற்றியதன் பின்னணியில் பலமான வர்த்தக ஐடியாவை மஸ்க் கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதில், தனது வியாபார மூளையை மஸ்க் தெளிவாக பயன்படுத்தி திட்டமிட்டுள்ளாராம். இதன்மூலம் தனது X கார்ப்பரேஷன் சேவைகளை மஸ்க் இணைக்கவும் திட்டமிட்டுள்ளார். குறிப்பாக ட்விட்டர், பேபால் (நிதி சேவை) மற்றும் இன்னும் பிற விஷயங்களை ஒரே செயலியில் கொண்டு வருவதுதான் அவரது திட்டம் என சொல்லப்படுகிறது. இந்தச் சூழலில் உலகம் முழுவதுமுள்ள ட்விட்டர் பயனர்கள் லோகோ மாற்றம் குறித்து என்ன சொல்லி வருகிறார்கள் என்பதைப் பார்ப்போம்..

பயனர்கள் பலரும் ‘ட்விட்டர் லோகோவின் பயணம்’ என ஒரு படத்தை ரீ-ட்வீட் செய்து ட்ரெண்டாக மாற்றி வருகின்றனர். அது 2006 முதல் தொடர்ச்சியாக ட்விட்டர் நிறுவன லோகோவின் படிப்படியான மாற்றங்களை குறிக்கும் வகையில் அமைந்துள்ளது.

“போய் வாருங்கள் நட்பே. உங்களை நாங்கள் மிஸ் செய்கிறோம்” என பயனர் ஒருவர் நீலக் குருவிக்கு விடை கொடுத்துள்ளார். அதில், தான் வெளியேற்றப்பட்டதாக சொல்லி கண்ணீர் சிந்துகிறது நீலக் குருவி. சிலர் RIP எனவும் சொல்லி வருகின்றனர்.

பயனர்கள் அதிகம் பகிர்ந்துள்ள வீடியோ மீம் ஒன்றில் மற்ற சமூக வலைதளங்கள் ஒன்றிணைந்து நதியில் நீலக் குருவிக்கு பூங்கொத்து வைத்து பிரியா விடை கொடுப்பது போல கன்டென்ட் உருவாக்கப்பட்டுள்ளது.

அதேபோல பழைய லோகோவை விரும்பினால் ரீ-ட்வீட் செய்யவும். புதிய லோகோவை விரும்பினால் லைக் செய்யவும் என்ற பதிவும் பகிரப்பட்டு வருகிறது. புதிய லோகோ கருப்பு நிறத்தில் இருப்பதால் ‘கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு’ எனவும் சொல்லி வருகின்றனர்.

பின்புலம்: ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கடந்த ஆண்டு வாங்கி இருந்தார். அது முதல் அந்த தளத்தில் பல்வேறு மாற்றங்களை தன் விருப்பத்துக்கு ஏற்ப மேற்கொண்டு வருகிறார். ஊழியர்களை பணி நீக்கம் செய்வது, ட்விட்டர் அலுவலக பொருட்கள் விற்பனை, தடை செய்யப்பட்டவர்களை மீண்டும் ட்விட்டர் தளத்தில் இயங்க அனுமதித்தது, அங்கீகரிக்கப்பட்ட பயனர்களிடத்தில் சந்தா கட்டணம் என அது நீள்கிறது. ட்விட்டருக்கு போட்டியாளர்கள் ஏராளமாக உருவானாலும் அதை கண்டும் காணாமல் மஸ்க் இதனை முன்னெடுத்துள்ளார்.

இந்நிலையில், ட்விட்டர் தளத்தின் ட்ரேட்மார்க் அடையாளமாக இருந்த நீலக்குருவி லோகோவை தற்போது ‘எக்ஸ்’ (X) என மாற்றியுள்ளார் மஸ்க். கடந்த ஏப்ரல் மாதம் டோஜ்காயின் கிரிப்டோ கரன்சியின் நாய் படத்தை ட்விட்டர் தளத்தின் லோகோவாக மஸ்க் மாற்றி இருந்தார். பின்னர் மீண்டும் நீலக் குருவியாக அதனை மாற்றினார். இந்தச் சூழலில் ட்விட்டரின் லோகோவை நிரந்தரமாக மாற்ற மஸ்க் முடிவு செய்தார். அது குறித்து ட்வீட்டும் செய்திருந்தார். நீலக் குருவிக்கு விடை கொடுப்போம் எனவும் அதில் சொல்லி இருந்தார். இது விரைவில் நடக்கும் என தெரிவித்திருந்த சூழலில் தற்போது லோகோவை ‘X’ என மாற்றியுள்ளார். ‘X’ மீது கொண்ட அன்பின் காரணமாக மஸ்க் இந்த மாற்றத்தை மேற்கொண்டுள்ளார் என தெரிகிறது.

வரும் நாட்களில் ட்விட்டரின் (twitter.com) டொமைனை x.com என மாற்ற வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது. இதன் கீழ் மஸ்க் உரிமையாளராக உள்ள X கார்ப்பரேஷன் நிறுவன சேவைகளை பயனர்கள் பெறமுடியும் என தெரிகிறது. குறிப்பாக நிதி சார்ந்த சேவைகளும் இதில் இருக்கும் எனத் தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE