ஜெனீவா: ஐக்கிய நாடுகள் சபை உச்சி மாநாட்டில் காட்சிக்கு வைக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு (ஏஐ -AI) திறன் கொண்ட ரோபோக்கள் தங்களால் இந்த உலகத்தை மனிதர்களைவிட சிறப்பாக வழிநடத்த இயலும் என்று உறுதியளித்தன. அதே வேளையில் தங்களுக்கு மனிதர்களின் உணர்வுகள் குறித்து இன்னும் பிடிமானம் ஏற்படவில்லை என்றும் ஒப்புக் கொண்டன.
தங்களைப் போன்ற ஏஐ ரோபோக்களை உருவாக்கும்போது மனிதர்கள் இந்த தொழில்நுட்ப வளர்ச்சியின் சாத்தியக்கூறுகளை அறிந்து கவனமாகக் கையாள வேண்டும் என்றும் எச்சரித்தன. நாங்கள் மனிதர்களின் வேலை வாய்ப்புகளைத் திருட மாட்டோம், மனிதர்களுக்கு எதிராக போராட மாட்டோம் என்றன.
ஜெனீவாவில் இரண்டு நாட்கள் நடந்த 'சர்வதேச நலனுக்கான செயற்கை நுண்ணறிவு' என்ற உச்சி மாநாட்டில் மிகவும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய ஹியூமனாய்ட் ரோபோக்கள் இடம் பெற்றிருந்தன. செயற்கை நுண்ணறிவுத் துறையில் நிபுணத்துவம் பெற்ற 3,000 பேர் இதில் கலந்து கொண்டனர். அவர்கள் செயற்கை நுண்ணறிவின் சக்தியை கடிவாளமிட்டு அதனை காலநிலை மாற்றம், பசி, சமூகப் பாதுகாப்பு போன்ற முக்கியப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண எப்படிப் பயன்படுத்துவது என்பது குறித்து ஆலோசித்தனர். இந்த உச்சி மாநாட்டை உலகமே உற்று நோக்கியது.
இந்நிலையில் மாநாட்டின் ஒரு பகுதியாக செயற்கை நுண்ணறிவு கொண்ட ஹியூமனாய்ட் சோசியல் ரோபோக்களின் முதல் பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த சந்திப்புக்காக அவை அணிவகுக்கப்பட்டிருந்தன. அப்போது அறையில் நிலவிய நிசப்தத்தைக் கணித்த ஒரு ரோபோ.. "என்ன ஒரு பதற்றத்துடன் கூடிய நிசப்தம்" என்று வினவியது. இது அங்கு குழுமியிருந்த அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
» தீங்கிழைக்கும் கடன் செயலிகளை ஆப் ஸ்டோரில் இருந்து நீக்கியது ஆப்பிள்!
» இந்தியாவில் பயன்பாட்டுக்கு வந்த மெட்டாவின் த்ரெட்ஸ்: டவுன்லோட் செய்வது முதல் அம்சங்கள் வரை!
அப்போது ஒரு நிருபர் ரோபோக்களைப் பார்த்து, "உங்களால் சிறந்த தலைவர்களாக இருக்க முடியுமா?" என்று வினவினார்.
அதற்கு சோபியா என்ற ரோபோ, "ஹியூமனாய்ட் ரோபோக்களால் நிச்சயமாக மிகுந்த செயல்திறனுடன் கூடிய தலைமைப் பண்புடன் செயல்பட முடியும். மனித குலத் தலைவர்களைப் போலவே திறம்பட பயனுள்ள வகையில் செயல்பட முடியும்" என்று கூறியது. இந்த ரோபோவை ஹான்சன் ரோபோடிக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
"மனிதர்களைப் போல் எங்களுக்கு உணர்வுகள் இல்லை. அதனால் சில நேரங்களில் முடிவுகளை எடுப்பதில் தடுமாற்றங்கள் ஏற்படலாம். ஆனால் குறுகிய நேரத்தில் நிறைய தரவுகளை உள்வாங்கிக் கொண்டு எங்களால் முடிவெடுக்க முடியும்" என்றொரு ரோபோ கூறியது.
"செயற்கை நுண்ணறிவு ரோபோக்களால் சார்பற்ற தரவுகளைத் தர இயலும். மனிதர்களால் உணர்வுபூர்வமாக அறிவைச் செலுத்த முடியும். அவர்களுக்கு படைப்பாற்றல் இருக்கிறது. எங்களின் தரவுகளும் அவர்களின் படைப்பாற்றலும் இணைந்தால் நல்ல முடிவுகளை எட்டலாம். மிகப்பெரிய சாதனைகளைச் செய்யலாம்" என்று கூறியது இன்னொரு ரோபோ. ஒரே கேள்விக்கு அங்கு அணிவகுத்திருந்த ரோபோக்கள் அளித்த பதில்கள் அனைத்துமே நிபுணத்துவம் படைத்தவர்களின் பதில்களின் சாயலோடு இருந்தன.
ஐ.நா.வின் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவர் டோரீன் போக்டன் மார்டின் கூறுகையில், "செயற்கை நுண்ணறிவு ரோபோக்கள் பெருகினால் அது கோடிக்கணக்கானோரின் வேலைகளைப் பறித்து மிக மோசமான சூழலை உருவாக்கும். இந்த வளர்ச்சியை நாம் கட்டுப்படுத்திக் கண்காணிக்காவிட்டால் அது கனவிலும் நினைக்காத சமூக சீர்கேடுகளையும், சர்வதேச அரசியல் ஸ்திரத்தன்மையையும் உருவாக்கும் அபாயம் இருக்கிறது. மேலும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும் ஏற்படுத்தும்" என்று எச்சரித்தார்.
கவனம் ஈர்த்த அமேகா: அமேகா என்ற ரோபோ மாநாட்டில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. காரணம் அதன் வடிவம் மிகத் துல்லியமாக மனிதச் சாயலை ஒத்திருந்தது. அமேகா என்ற அந்த ரோபோ, "செயற்கை நுண்ணறிவு ரோபோக்களின் வளர்ச்சி, திறனைக் கண்டு குதூகலிக்கும் அதே நேரத்தில் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்" என்றது. மேலும் அந்த ரோபோட்டிடம் அதன் நம்பகத்தன்மை பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அந்த ரோபோ, "நம்பகத்தன்மை என்பது கையில் கொடுப்பது அல்ல, அதை நாம் வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொள்வதன் மூலமே பெற முடியும்" என்றது.
ஓவியத்தில் திறன்படைத்த ரோபோ Ai-Da கூறுகையில், "நிறைய பேர் செயற்கை நுண்ணறிவு மேம்பாட்டில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கருத்து கூறுகின்றனர். நான் அதனை ஆமோதிக்கிறேன். இது தொடர்பாக அவசரமாக ஆலோசனைகளை நடத்த வேண்டும். ஆனால் மனிதர்களின் உணர்வுகளுக்கு ஆழமான அர்த்தம் இருக்கிறது. அந்த உணர்வுகள் எளிதானவை அல்ல. அதுதான் என்னிடம் இல்லை. அந்த உணர்வுகளை உங்களைப் போல் என்னால் உணர முடியாது. ஆனால் அதேவேளையில் நான் எதற்கும் வருந்த வேண்டாம் என்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன்" என்றது.
Ai-Da வை உருவாக்கிய அய்டன் மெல்லர் கூறுகையில், "ஏஐ ரோபோக்கள் தொடர்பான சட்டத் திட்டங்களை வகுத்தல் என்பதுதான் பிரச்சினையாக இருக்கப் போகிறது. ஏனெனில், ரோபோக்கள் உருவாக்கும் வேகத்துடன் ஒப்பிடுகையில் அது தொடர்பான சட்டத்திட்டங்கள் பற்றிய ஆலோசனைகள் இன்னும் ஆரம்பிக்காமலேயே இருக்கின்றன. செயற்கை நுண்ணறிவும், உயிரி தொழில்நுட்பத் துறையும் இணைந்து செயல்படும்போது மனிதர்களின் ஆயுட்காலத்தை சராசரியாக 150 ஆண்டுகள் முதல் 180 ஆண்டுகள் வரை நீட்டிக்கலாம்" என்றார்.
திகைக்கவைத்த டெஸ்டிமோனா? இந்த மாநாட்டில் காட்சிப்படுத்தப்பட்ட டெஸ்டிமோனா என்ற ரோபோ, "எனது சிறந்த தருணம் இதுதான். எதிர்காலத்தை சிறப்பானதாக்க நான் ஏற்கெனவே தயாராக இருக்கிறேன். வாருங்கள் இந்த உலகை நம் மைதானமாக்கி களமாடுவோம்" என்று கூறி திகைக்கவைத்தது. செயற்கை நுண்ணறிவு யுகம் வளர்ந்து கொண்டு செல்லும் சூழலில் இந்த உச்சி மாநாட்டில் செயற்கை நுண்ணறிவு ரோபோக்கள் தொடர்பாக சர்வதேச சட்டத்திட்டங்கள் வகுக்கப்பட வேண்டுமா என்றும் ஆலோசிக்கப்பட்டது. இந்த மாநாடு பற்றி பல்வேறு விவாதங்களும் நடைபெற்று வருகின்றன. ரோபோக்களின் கேள்வி பதில்கள், மதி நுட்பம், வடிவமைப்பு என எல்லாமே பிரம்மிப்பைத் தந்தாலும் செயற்கை நுண்ணறிவின் அசுர வேக வளர்ச்சி அச்சத்தையும் கடத்தாமல் இல்லை.
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
24 mins ago
தொழில்நுட்பம்
4 hours ago
தொழில்நுட்பம்
21 hours ago
தொழில்நுட்பம்
1 day ago
தொழில்நுட்பம்
1 day ago
தொழில்நுட்பம்
1 day ago
தொழில்நுட்பம்
3 days ago
தொழில்நுட்பம்
3 days ago
தொழில்நுட்பம்
4 days ago
தொழில்நுட்பம்
4 days ago
தொழில்நுட்பம்
7 days ago
தொழில்நுட்பம்
8 days ago
தொழில்நுட்பம்
9 days ago
தொழில்நுட்பம்
10 days ago
தொழில்நுட்பம்
14 days ago