தீங்கிழைக்கும் கடன் செயலிகளை ஆப் ஸ்டோரில் இருந்து நீக்கியது ஆப்பிள்!

By செய்திப்பிரிவு

சென்னை: ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து தீங்கிழைக்கும் கடன் செயலிகள் சிலவற்றை அதிரடியாக நீக்கியுள்ளது ஆப்பிள் இந்தியா. பயனர்கள் இது குறித்து புகார் அளித்த நிலையில் அந்த செயலிகள் நீக்கப்பட்டுள்ளன. முன்னதாக, கூகுள் நிறுவனமும் ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி இயங்க தவறிய ஆயிரக்கணக்கான செயலிகளை பிளே ஸ்டோரில் இருந்து நீக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது கூகுளின் வழியை ஆப்பிளும் பின்பற்றி உள்ளது.

இந்த செயலிகள் ஆப்பிள் போன் பயனர்களின் கான்டக்ட் விவரம், கேலரி மற்றும் போனில் இதர தரவுகளின் அணுகலை பயனர் பதிவு செய்யும் போது பெற்று, பின்னர் பயனர்களை மார்ஃப் செய்யப்பட்ட படங்கள், வீடியோக்கள் மூலம் அச்சுறுத்துவதாக ஆப்பிள் ஆப் ஸ்டோரில் பயனர்கள் புகார் தெரிவித்தனர். அதன் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் டெவலப்பர் புரோகிராம் உரிம ஒப்பந்தம் மற்றும் வழிகாட்டுதல்களை சில செயலிகள் மீறி உள்ளன. அந்த செயலிகள் ஆப் ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஆப்பிள் உறுதி செய்துள்ளது. பாக்கெட் கேஷ், கோல்டன் கேஷ், ஓகே ருப்பி போன்ற செயலிகள் நீக்கப்பட்டுள்ள செயலிகளில் அடங்கும்.

"ஆப் ஸ்டோரில் மோசடி செயல்பாடுகளை ஏற்றுக் கொள்ள முடியாது. அப்படி ஆப்பிளின் சிஸ்டத்தை ஏமாற்ற முயற்சிக்கும் செயலிகள் மற்றும் ஆப் டெவலப்பர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். பயனர்களுக்கு பாதுகாப்பான பயனர் அனுபவத்தை வழங்குவதை உறுதிப்படுத்தும் வகையில் ஆப்பிள் செயலி ரிவ்யூ வழிகாட்டு நெறிமுறைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன" என்று ஆப்பிள் தெரிவித்துள்ளது. முறையற்ற கடன் செயலிகளின் இயக்கத்தை நிறுத்தும் ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின் படியும் ஆப்பிள் ஸ்டோரில் இருந்து சில செயலிகள் நீக்கப்பட்டுள்ளன.

கடந்த 2022-ல் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் சுமார் 2 பில்லியன் மோசடி பரிவர்த்தனைகள் தடுக்கப்பட்டுள்ளதாகவும், ஆப்பிளின் செயலி சார்ந்த வழிகாட்டுதல்களை பின்பற்ற தவறிய 1.7 மில்லியன் செயலிகளுக்கான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும், 4.28 லட்சம் ஆப் டெவலப்பர்களின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் ஆப்பிள் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE