எங்கிருந்தாலும் பிசியோதெரபி ஆலோசனை பெறலாம்: வந்து விட்டது ‘என் பிசியோ ’ செயலி

By ஒய். ஆண்டனி செல்வராஜ்

மதுரை: மக்களிடையே பிசியோதெரபி சேவையை எளிதில் கொண்டு சேர்க்கும் வகையில், எங்கிருந்தாலும் ஆலோசனை பெற வசதியாக ‘என் பிசியோ’ (N PHYSIO) என்ற செயலியை மதுரையைச் சேர்ந்த பிசியோதெரபிஸ்ட்கள் அறிமுகப்படுத்த உள்ளனர்.

இன்றைய வாழ்வியல் சூழலில் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற தொற்றா நோய்களினாலும், உடல் உழைப்பு குறைந்ததாலும் பலர் உடல் இயக்க பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர். உடற் பயிற்சிகளை பரிந்துரை செய்யக் கூடிய பிசியோதெரபி சேவை தேவைப்படும் இச்சூழலில், ‘என் பிசியோ’ எனற செயலியை மதுரையைச் சேர்ந்த பிசியோதெரபிஸ்ட்கள் அறிமுகப்படுத்த உள்ளனர்.

மருத்துவ உதவி தேவைப்படும் மக்களுக்கு அருகில் உள்ள கிளினிக்குகளை கண்டறிய உதவுவது, வீட்டுக்கு வந்து பிசியோதெரபி சேவை வழங்கும் பிசியோதெரபிஸ்ட்டை தொடர்பு கொள்ள உதவுவது, ஆன்லைன் ஆலோசனை என அனைத்து வசதிகளும் இச்செயலியில் உள்ளன.

இதுகுறித்து ‘என் பிசியோ’ செயலி ஒருங் கிணைப்பாளர் வெ.கிருஷ்ணகுமார் கூறியதாவது: பெண்கள், முதியோர் உடலநலப் பாதிப்பு தொடர்பாக ஆலோசனை பெறுவதில் தயக்கம் காட்டு கின்றனர். அவர்கள் உடல் இயக்க பயிற்சிகள் தொடர் பாக ஆன்லைன் மூலம் ஆலோசனை பெற்று பயன்பெறும் வகையில் இந்த செயலி வடி வமைக்கப் பட்டுள்ளது. கிளினிக்குகளுக்கு சிகிச்சை பெற செல்வதற்கான கால விரயம், பண விரயம் தவிர்க்கப்படும்.

ஆர்த்தோ, நியூரோ, ஃபிட்னஸ், கார்டியோ போன்ற சிறப்பு பிரிவு பிசியோதெரபிஸ்ட் ஆலோசனை கிராமப்புற மக்களுக்கும் எளிதில் கிடைக்க செய்வதே இச்செயலியை அறிமுகப்படுத்துவதன் பிரதான நோக்கமாகும்.

கால் மூட்டு வலி, ஆஸ்டியோ ஆர்தரைடிஸ் பிரச்சினைக்கு கட்டண சலுகையுடன் சிகிச்சையை இச்செயலி மூலம் பெறலாம். ‘என் பிசியோ’ செயலி அறிமுக விழா மதுரையில் ஜூன் 4-ம் தேதி நடைபெற உள்ளது. சில நாட்களில் இது பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE