மத்திய அரசின் அவசர சட்டத்தை திமுக எதிர்க்கும்: கேஜ்ரிவால் சந்திப்புக்குப் பின் முதல்வர் ஸ்டாலின் உறுதி

By செய்திப்பிரிவு

சென்னை: "டெல்லி மாநில அரசுக்கு சாதகமாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பு நிறைவேறக் கூடாது என்ற எண்ணத்தோடு ஆளும் பாஜக அரசு ஓர் அவசர சட்டத்தை பிறப்பித்திருக்கிறது. இந்த அவசர சட்டத்தை திமுக கடுமையாக எதிர்க்கும். அதில் எந்த மாற்றமும் கிடையாது" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

டெல்லி மாநில அரசின் அதிகாரத்தைப் பறிக்கும் அவசர சட்டத்தை நிராகரிக்க ஆதரவு கோரி டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் ஆகியோர் வியாழக்கிழமை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்தனர். பின்னர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது முதல்வர் ஸ்டாலின் கூறியது: “டெல்லி முதல்வருக்கு, அதேபோல் அவர் சார்ந்திருக்கக் கூடிய, அவர் தலைவராக இருக்கக்கூடிய ஆம் ஆத்மி கட்சிக்கு நெருக்கடி ஏற்படுத்த வேண்டும் என்று முடிவு செய்து, மோடி தலைமையில் இருக்கக்கூடிய பாஜக ஆட்சி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கக் கூடிய ஆட்சியை சுதந்திரமாக செயல்படவிடாமல் பல்வேறு நெருக்கடிகளை தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் டெல்லி துணைநிலை ஆளுநர் மூலமாகத் பல்வேறு தொல்லைகளெல்லாம் தொடர்ந்து வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

"பணியாளர்கள்" தொடர்பாக 5 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு டெல்லி அரசுக்கு சாதகமான ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறது. ஆனால் அது நிறைவேறக் கூடாது என்ற ஒரு எண்ணத்தோடு பாஜக ஆட்சி, அதை எதிர்த்து மத்திய அரசு இன்றைக்கு ஒரு அவசரச் சட்டத்தை பிறப்பித்து இருக்கிறது. இந்த அவசரச் சட்டத்தை நிச்சயமாக திமுக கடுமையாக எதிர்க்கும், அதில் எந்த மாற்றமும் கிடையாது.

எனவே, இதுகுறித்து இரு முதல்வர்களும் இன்று எங்களோடு கலந்து பேசி, மற்ற மாநிலத்தில் இருக்கக்கூடிய முதல்வர்களும் பல்வேறு கட்சியினுடைய தலைவர்களும் என்னென்ன நிலையில் இருக்கிறார்கள் என்ற அந்த சூழ்நிலையைப் குறித்து நாங்கள் கலந்து பேசினோம். ஆகவே, அந்த வகையில் இந்தக் கூட்டம் நடந்திருக்கிறது. நிச்சயமாக, எல்லா மாநிலத்தினுடைய முதல்வர்களும் அகில இந்திய அளவிலுள்ள கட்சியின் தலைவர்களும் இதற்கு ஆதரவு தரவேண்டும் என்று நான் இந்த நிகழ்ச்சியின் மூலமாக அவர்களையெல்லாம் கேட்டுக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

இந்தச் சந்திப்பு என்பது கடந்த வாரமே நடந்திருக்க வேண்டும். சென்ற வாரம் டெல்லியினுடைய முதல்வர் கேஜ்ரிவால் என்னோடு தொடர்பு கொண்டு நேரம் கேட்ட நேரத்தில் அப்போது நான் ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளுக்கு செல்லுகிறேன், வந்தவுடன் தேதி தருகிறேன் என்று சொன்னேன். நேற்று இரவு தான் நான் சென்னைக்கு வந்தேன் என்பது உங்களுக்குத் தெரியும். வந்தவுடனே அவரை சந்திக்க நேரம் கொடுத்து, அந்த வகையில்தான் இந்த சந்திப்பு நடந்திருக்கிறது. மிக ஆரோக்கியமாக, நாட்டிலே ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும் என்ற அந்த உணர்வோடு இந்தக் கூட்டம் நடந்திருப்பது உள்ளபடியே மகிழ்ச்சியளிக்கிறது. ஆகவே இது தொடர வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.

அப்போது, 12-ம் தேதி நடைபெறவுள்ள கூட்டம் பற்றி பேசியிருக்கிறீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த முதல்வர், "அது பற்றியும் பேசியிருக்கிறோம். அது சூழ்நிலை வருகிறபோது சொல்கிறோம். 12ம் தேதி நிதிஷ்குமார் கூட்டத்தைக் கூட்டுவதாக முடிவு செய்திருக்கிறார். ராகுல் காந்தி வெளிநாட்டிற்கு சென்றிருக்கிற காரணத்தால் காங்கிரஸ் கட்சியும் அதில் கலந்துகொள்ள முடியாத ஒரு சூழ்நிலை இருக்கிறது . அதேபோல் 12ம் தேதி என்னைப் பொறுத்தவரையில், நானும் கலந்துகொள்ள முடியாத நிலை. காரணம், ஒவ்வொரு வருடமும் மேட்டூர் அணையை திறந்துவைக்கக்கூடிய ஒரு நிகழ்ச்சி இருக்கிறது. ஆகவே, தேதியை மாற்றி வையுங்கள் என்று நானும் சொல்லியிருக்கிறேன், காங்கிரஸ் தலைவர் கார்கேவும் சொல்லியிருக்கிறார். இப்போது கேஜ்ரிவால் இடத்திலும் நாங்கள் சொல்லியிருக்கிறோம். அவரும் தேதி மாற்றுவதற்கான முயற்சியில் நான் ஈடுபடுகிறேன், கட்டாயமாக மாற்றி வைக்கப்படும் என்ற உறுதியை தந்திருக்கிறார்" என்று அவர் கூறினார்.

அப்போது மத்திய அரசு, மாநில அரசினுடைய அதிகாரங்களை தொடர்ந்து பறித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் இப்படியான ஒரு ஒன்றிணைப்பு என்பதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த முதல்வர், "ஜனநாயகத்தைக் காப்பதற்கு இப்படிப்பட்ட ஒருங்கிணைப்பு அவசியம் தேவை. இது தொடர வேண்டும். இது நாடாளுமன்றத் தேர்தலுக்காக மட்டுமல்ல, ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக இது தொடர வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம், அது தொடர வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை" என்று அவர் கூறினார்.

முன்னதாக, தேசிய தலைநகர குடிமைப் பணி ஆணையத்தை (என்சிசிஎஸ்ஏ) உருவாக்குவதற்கான அவசர சட்டத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி அண்மையில் பிறப்பித்தார். தேசிய தலைநகர் பிரதேச டெல்லி அரசு சட்டத்தை (1991) திருத்தும் வகையிலும், குடிமைப் பணி அதிகாரிகளை கட்டுப்படுத்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி அரசுக்கே அதிகாரம் உள்ளது என உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நிராகரிக்கும் வகையிலும் இந்த அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த அவசர சட்டம், டெல்லி அரசின் ஏ பிரிவு அதிகாரிகள் மற்றும் டெல்லி, அந்தமான் நிக்கோபர், லட்சத்தீவுகள், டாமன் டையு, தாத்ரா நாகர் ஹவேலி யூனியன் பிரதேசங்களின் குடிமைப் பணி (டிஏஎன்ஐசிஎஸ்) பிரிவைச் சேர்ந்த டெல்லி அதிகாரிகள் நியமனம் மற்றும் மாறுதல் விவகாரத்தில் பரிந்துரை செய்வதற்கான அதிகாரத்தை மத்திய அரசுக்கு வழங்குகிறது. அவசர சட்டத்தின்படி, என்சிசிஎஸ்ஏ-வுக்கு டெல்லி முதல்வர் தலைமை தாங்குவார். டெல்லியின் நிர்வாகியாக துணைநிலை ஆளுநர் செயல்படுவார் என்றும் குடிமைப் பணி அதிகாரிகள் நியமனம் மற்றும் பணியிட மாறுதல் விவகாரத்தில் அவருக்கே இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் உள்ளது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

52 mins ago

தமிழகம்

35 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்