மேகதாது பிரச்சினையில் உரிய நடவடிக்கை எடுக்காத திமுக அரசு: இபிஎஸ் கண்டனம்

By செய்திப்பிரிவு

சென்னை: மேகதாது பிரச்சினையில் உரிய நடவடிக்கை எடுக்காமல் திமுக அரசு வேடிக்கை பார்ப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "காவேரி நதிநீர் டெல்டா மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாகவும், தமிழகத்தில் உள்ள 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் நீர் ஆதாரமாகவும் விளங்குகிறது.

சமீபத்தில், கர்நாடக மாநிலத்தில் ஆட்சிப் பொறுப்பேற்ற காங்கிரஸ் அரசின் துணை முதல்வர் டி.கே. சிவகுமார் கடந்த 30.5.2023 அன்று நடத்திய ஆய்வுக் கூட்டத்தில், மேகதாது திட்டத்தை முன்னுரிமை அடிப்படையில் அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஏற்கெனவே காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் மேகதாது அணை கட்ட 9,000 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்று அறிவித்துள்ளது. இவரது செயலுக்கு, தனது கடுமையான எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டிய திமுக அரசின் நீர்வளத் துறைக்கு பொறுப்பு வகிக்கும் மூத்த அமைச்சர் அவர்கள் கொஞ்சல், கெஞ்சல் மற்றும் தாஜா செய்து கண்துடைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

காங்கிரஸும் - திமுகவும் இணைந்து இலங்கையில் பல லட்சம் தமிழர்கள் மடிவதற்கு காரணமாக இருந்ததுபோல், இங்குள்ள காவேரி படுகை விவசாயிகளையும், காவேரி நீரை குடிநீர் ஆதாரமாகக் கொண்ட மக்களையும் இந்த திமுக அரசு வஞ்சிக்கப் பார்க்கிறதோ என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஏற்கெனவே இந்த ஆட்சியாளர்கள் கையாலாகாதவர்கள் என்பதை உணர்ந்து கொண்ட அண்டை மாநிலங்கள், தமிழகத்தை பாலைவனமாக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளன. இந்த திமுக ஆட்சியாளர்களின் உறுதுணையோடு நமது கனிம வளங்கள் கேரளாவிற்கு கடத்திச் செல்லப்படுகிறது என்று நாள்தோறும் செய்திகள் வெளிவருகின்றன.

இந்நிலையில், தமிழகத்தில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், கர்நாடகாவில் ஆட்சிக்கு வந்த ஒரே வாரத்தில் அனைத்து தடைகளையும் தகர்த்து மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று பொங்குவதன் ரகசியம் என்ன? தமிழக ஆட்சியாளர்களுக்கு கர்நாடகாவில் பல்வேறு தொழில்கள் உள்ளதால், அவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கமாட்டார்கள் என்ற எண்ணத்தோடு மேகதாது அணையை கட்டியே திருவோம் என்று அறிவிப்பினை வெளியிட்டுள்ளதோ என்ற சந்தேகம் தமிழக மக்களிடையே எழுந்துள்ளது? கர்நாடகாவில் யார் ஆட்சியில் இருந்தாலும், அது காவேரி பிரச்சினை என்றாலும், மேகதாது பிரச்சினை என்றாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கடுமையாக எதிர்த்தது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அரசியல் ரீதியாகவும், தொடர் சட்டப் போராட்டத்தினாலும் 5.2.2007 அன்று காவேரி நடுவர் மன்றம் இறுதி ஆணை வெளியிடப்பட்டது. தொடர்ந்து 19.2.2013 அன்று மத்திய அரசிதழில் காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணை வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, எனது தலைமையிலான அரசு கொடுத்த அழுத்தத்தின் காரணமாக 16.2.2018 அன்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, தமிழகத்திற்கு கர்நாடக அரசு, இரு மாநில எல்லையான பில்லிகுண்டுலுவில் 177.25 டி.எம்.சி. அடி நீர் வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. அதனைத் தொடர்ந்து, காவேரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவேரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவை அமைக்கப்பட்டது.

கர்நாடகாவின் முந்தைய அரசு, மேகதாதுவில் அணை கட்ட முயற்சி எடுத்தபோது, எனது தலைமையிலான அம்மாவின் அரசு சட்ட ரீதியாகவும், மத்திய அரசோடும் பேச்சுவார்த்தை நடத்தி அணை கட்டுவதை தடுத்து நிறுத்தியது.

மேலும், நான் முதல்வராக இருந்தபோதும், தற்போது எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போதும், பிரதமரை நேரில் சந்திக்கும்போதெல்லாம் கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டும் முயற்சிகளைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்ததோடு, அவ்வாறு அணை கட்டினால் தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும் என்பதையும் எடுத்துக் கூறியுள்ளேன்.

பன்மாநில நதிநீர் தாவாச் சட்டம் 1956-ன்படி, நதிநீரை தடுப்பதற்கோ அல்லது திசை திருப்புவதற்கோ எந்த மாநிலத்திற்கும் உரிமை கிடையாது என்று தெள்ளத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், காவேரி நடுவர் மன்றம் அதன் இறுதி ஆணையில், எந்த ஒரு திட்டத்தினையும் செயல்படுத்தும் முன்னரே, கீழ்ப் பாசன மாநிலங்களின் ஒப்புதலைப் பெற வேண்டும் என தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.

மேகதாது விவகாரத்தில் இந்த நிர்வாகத் திறனற்ற திமுக அரசை நம்பி எந்த பிரயோஜனமும் இல்லை. மேகதாதுவின் குறுக்கே அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக மாநில காங்கிரஸ் அரசின் முயற்சியை கடுமையாகக் கண்டிப்பதோடு, தமிழகம் வறண்ட பாலைவனமாக மாறாமல் தடுக்க, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அனைத்துப் போராட்டங்களையும் முன்னெடுக்கும் என்று கர்நாடக மாநில அரசை எச்சரிக்கிறேன்." இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

28 mins ago

தமிழகம்

10 mins ago

தமிழகம்

52 mins ago

தமிழகம்

12 mins ago

தமிழகம்

38 mins ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்