சீமான், திருமுருகன் காந்தி ட்விட்டர் பக்கங்கள் முடக்கம்: முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

By செய்திப்பிரிவு

சென்னை: நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஆகியோரின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். ட்விட்டர் முடக்கத்தை விலக்கிச் சமூக வலைதளத்தை அதற்கான தரத்துடன் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று முதல்வர் கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோரது ட்விட்டர் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்வதே அறம். கழுத்தை நெரிப்பது அல்ல. ட்விட்டர் முடக்கத்தை விலக்கிச் சமூக வலைத்தளத்தை அதற்கான தரத்துடன் செயல்பட அனுமதிக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக நேற்று, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகளான பாக்கியராசன், இடும்பாவனம் கார்த்தி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோரின் ட்விட்டர் பக்கங்கள் ஒரே நேரத்தில் முடக்கப்பட்டன. சீமானின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கமான @SeemanOfficial முடக்கப்பட்டுள்ளது. சட்டபூர்வ கோரிக்கையை ஏற்று இந்தியாவில் கணக்கு நிறுத்திவைக்கப்படுவதாக அந்தப் பக்கத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துவந்த நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலினும் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE