குன்றத்தூர் வழுதலம்பேடு சாலையில் உள்ள நத்தம் பகுதி குளம் நாற்றமடிக்கும் குளமான அவலம்

By செய்திப்பிரிவு

குன்றத்தூர் நகராட்சி நத்தம் பகுதியில் உள்ள குளம் குப்பை கழிவுகள், இறைச்சிக்கழிவுகள் என குப்பை கொட்டும் இடமாக மாறி வருவதாகவும், இதனால் அப்பகுதியின் சுகாதாரம் சீர்கெட்டு வருகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என இந்து தமிழ் நாளிதழ் உங்கள் குரல் வாயிலாக நீலகண்டன் என்ற வாசகர் புகார் அளித்திருந்தார்.

அந்த புகாரில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் நகராட்சி, வழுதலம்பேடு சாலை, நத்தம் பகுதியில் குளம் உள்ளது. இந்த குளம் அந்த பகுதியின் நிலத்தடி நீர்மட்ட ஆதாரமாக உள்ளது. இத்தகைய நீர் நிலையை பாதுகாத்து பராமரிப்பதில் தொலைநோக்கு திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை.

இதனால் அருகில் உள்ள ஹோட்டால்கள், குடியிருப்புகளில் இருந்து கொட்டப்படும் குப்பை கழிவுகளால் இந்த குளம் மாசடைந்து பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக அந்த பகுதி கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் சாக்கடை கழிவுகள் நேரடியாக கலந்து குளத்து நீரை மாசுபடுகிறது. மேலும் குப்பை, கட்டிட கழிவுகள், இறைச்சிக்கழிவுகள் என குப்பை கொட்டும் இடமாக மாறியுள்ளது.

நிலத்தடி நீர்மட்ட ஆதாரங்களாக உள்ளஇந்த குளத்தை காக்க, உரிய நடவடிக்கையை காஞ்சி மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும். சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள், பொதுப்பணித் துறை, வருவாய்த் துறை உள்ளிட்ட துறைகளை ஒருங்கிணைத்து, நிதி ஒதுக்கீடு செய்து நீர்நிலை மாசடைவதை தடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் தெரிவித்திருந்தார்.

இது குறித்து குன்றத்தூர் நகராட்சி ஆணையர் தாமோதரனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: நத்தம் பகுதியில் உள்ள இந்த குளத்தில் அப்பகுதி வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து குப்பை கொட்டி வருகின்றனர். இவற்றை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வாரம் ஒருமுறை அந்த பகுதியில் தூய்மை பணியை மேற்கொண்டு வருகிறோம்.

குப்பை கொட்ட கூடாதுநகராட்சி ஊழியர்களிடம் கொடுக்க வேண்டும் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த அவலம் தொடர்கிறது. பல முறை அவர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. குப்பையை கொட்டும் நபர்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த குளத்தை மேம்படுத்த நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அதன்படி இந்த குளத்தின் அருகே ரூ.1.90 கோடி மதிப்பீட்டில் அறிவுசார் நூலகம் கட்டப்பட்டு வருகிறது. இதன் அருகில் அந்த குளம் இருப்பதால் குளத்தையும் சேர்த்து மேம்பாடு செய்ய திட்டமிட்டுள்ளோம். அறிவுசார் மையத்துக்கு வரும் பொதுமக்கள் குளத்தில் நடை பயிற்சி மேற்கொள்ளவும் அமர்ந்து இளைப்பாறும் வகையில் மேம்படுத்தப்படவுள்ளது.

இதற்காக தனியார் நிறுவனங்களில் சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ் நிதி பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிதி கிடைத்தவுடன் குளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இனிவரும் காலங்களில் இந்த குப்பைகள் கொட்டுவதை தடுக்கஅனைத்து நடவடிக்கையில் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE