சட்டத்திற்கு புறம்பான மேகதாது அணை திட்டத்தை கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஓபிஎஸ்

By செய்திப்பிரிவு

சென்னை: கர்நாடக அரசுக்கு தேவையான அழுத்தத்தைக் கொடுத்து, சட்டத்திற்கு புறம்பான மேகதாது அணை திட்டத்தை கர்நாடக அரசு கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிப் பொறுப்பேற்றதையடுத்து, 30-05-2023 அன்று நடைபெற்ற நீர்பாசனத் துறை உயர் அதிகாரிகளுக்கான கூட்டத்திலேயே மேகதாது திட்டத்தை முன்னுரிமை அடிப்படையில் அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதற்குத் தேவையான ஏற்பாடுகளை உடனடியாக செய்ய வேண்டுமென்றும் கர்நாடக துணை முதல்வர் உத்தரவிட்டு இருப்பது தமிழக மக்களிடையே, குறிப்பாக தமிழக விவசாயிகளிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி ஆண்டுதோறும் தமிழகத்திற்கு 177.25 டி.எம்.சி. நீரை மாதாந்திர அட்டவணையின்படி கர்நாடகம் அளிக்காத நிலையில், மேகதாது அணை திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கர்நாடக துணை முதல்வர் கூறி இருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலாகும். தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையேயான காவேரி நதிநீர்ப் பங்கீடு என்பது 1892 மற்றும் 1924ம் ஆண்டுகளில் மெட்ராஸ் மாகாணத்திற்கும், மைசூர் மாகாணத்திற்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலானது.

மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்டபோது, இந்திய அரசமைப்புச் சட்டக் கூறு 262-ன் கீழ் 1956ம் ஆண்டு பன்மாநில நதி நீர்த் தாவாச் சட்டத்தின் படி, பன் மாநில நதியான காவேரி ஆற்றின் குறுக்கே எந்தவொரு திட்டத்தையும் கர்நாடக அரசு தன்னிச்சையாக மேற்கொள்ள இயலாது. காவேரி ஆறு பாயும் மாநிலங்களில், கர்நாடகம் மேல் நதிக் கரை மாநிலமாக விளங்குவதால், கூடுதலாக அணை கட்டுவதற்கு கீழ்மடை மாநிலமான தமிழ்நாட்டின் அனுமதியை பெற்றே ஆகவேண்டும். இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ளது.

இந்தச் சூழ்நிலையில், மேகதாது அணைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கர்நாடக மாநில துணை முதல்வர் கூறுவது இந்திய அரசமைப்புச் சட்டத்தையும், உச்ச நீதிமன்றத்தையும் அவமதிப்பதாகும். கர்நாடக மாநில துணை முதல்வரின் இந்தக் கூற்று தமிழகத்திற்கு வரும் காவேரி ஆற்றின் நீரைத் தடுத்து நிறுத்துவதற்கு சமம். ஏற்கெனவே காவேரியிலிருந்து தமிழகத்திற்கு உரிய தண்ணீருக்குப் பதிலாக உபரி நீர் தான் கிடைத்துக் கொண்டிருக்கின்ற நிலையில், மேகதாது அணை திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் தமிழகத்திற்கு வருகின்ற நீர் முற்றிலும் நின்றுவிடும் அபாயம் ஏற்படும்.

மேகதாது அணைத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், அதன் மூலம் 67 டி.எம்.சி. நீரை கர்நாடகம் கூடுதலாக தேக்கிக் கொள்ளலாம். ஏற்கெனவே போதிய நீர் இல்லாததன் காரணமாக சாகுபடி பரப்பு குறைந்துள்ள நிலையில், நிலத்தடி நீர் மூலம் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், மேகதாது அணை கட்டப்பட்டால் ஒட்டுமொத்த விவசாயமும் வெகுவாகப் பாதிக்கப்படும். தமிழ்நாடு பாலைவனமாக மாறிவிடும் சூழ்நிலை உருவாகும். கர்நாடக மாநிலத்தின் இந்த நிலைப்பாடு காவேரி நதிநீர்ப் பங்கீட்டில் தமிழகத்திற்கு உள்ள உரிமையை பறிக்கும் செயலாகும்.

இதுபோன்ற நடவடிக்கை தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது என்று சொல்வதற்கு சமம். இதன் மூலம் காவேரி ஆற்றிலிருந்து கீழ்மடை மாநிலமான தமிழகத்திற்கு வருகின்ற உபரி நீர் நின்று விடும் சூழ்நிலை ஏற்படுவதோடு, வேளாண் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டு வேளாண் தொழிலே முடங்கும் அபாயம் ஏற்படும். இந்த நிலையில், கர்நாடக துணை முதல்வருக்கு பதில் அளித்துள்ள தமிழக நீர்வளத் துறை அமைச்சர்,
மேகதாது பற்றிய முழு விவரத்தை அதிகாரிகள் இன்னும் கர்நாடக துணை முதல்வருக்கு சொல்லியிருக்க மாட்டார்கள் என்று கூறியிருக்கிறார்.

தற்போது கர்நாடக துணை முதல்வராக உள்ள டி.கே. சிவகுமார், கர்நாடக சட்டமன்றப் பேரவைக்கு எட்டு முறை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது தெரியாமல், பல ஆண்டு காலம் அமைச்சராக இருந்தவர் என்பது தெரியாமல், ஓராண்டு காலம் நீர்ப்பாசனத் துறை அமைச்சராக இருந்தவர் என்பது தெரியாமல், மேகதாது பற்றிய முழு விவரத்தை அதிகாரிகள் சொல்லி இருக்கமாட்டார்கள் என்று நீர்வளத் துறை அமைச்சர் சொல்வதிலிருந்து யார் விவரம் அறிந்தவர், யார் விவரம் அறியாதவர் என்பதையும், கர்நாடக மாநில துணை முதல்வர் வேண்டுமென்றே மேகதாது அணைத் திட்டம் குறித்து பேசியிருக்கிறார் என்பதையும் அறிவார்ந்த தமிழக மக்கள் எளிதில் புரிந்து கொள்வார்கள்.

கர்நாடக மாநில துணை முதல்வர் ஏதோ விவரம் தெரியாமல் பேசியிருக்கிறார் என்ற தொனியில் நீர்வளத் துறை அமைச்சர் விடுத்துள்ள அறிக்கை நகைப்புக்குரியதாக உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில் மேகதாது அணைத் திட்டம் முற்றிலுமாக கைவிடப்பட வேண்டும் என்பதுதான் அனைத்துக் கட்சிகளின் நிலைப்பாடு. தமிழகத்தில் நடைபெறுவது தி.மு.க. ஆட்சி. கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெறுகிறது.

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி வர பாடுபட்ட தமிழக முதல்வர், மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வர வேண்டும் என்று பாடுபட்டுக் கொண்டிருக்கின்ற தமிழக முதல்வர், கர்நாடக அரசிடம் பேசியும், காங்கிரஸ் மேலிடத்தில் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி கர்நாடக அரசுக்கு தேவையான அழுத்தத்தைக் கொடுத்தும், சட்டத்திற்கு புறம்பான மேகதாது அணை திட்டத்தை கர்நாடக அரசு கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதற்கு இசையவில்லை என்றால், காங்கிரஸ் கட்சியுடனான உறவை முறித்துக் கொள்வோம் என்று எச்சரிக்கை விடுத்து, தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வேண்டுமென்று அதிமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்