சென்னை: தமிழகத்தில் ஏப்ரல் மாதம் வரையிலான காலாண்டுக்கான வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. புதிதாக சேர்க்கப்பட்ட 1.23 லட்சம் வாக்காளர்களுடன், மொத்தம் 6.12 கோடி வாக்காளர்கள் உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்திய தேர்தல் ஆணையம், ஆண்டுதோறும் ஜனவரி 1 மட்டுமின்றி, ஏப்ரல் 1, ஜுலை 1 மற்றும் அக்டோபர் 1 ஆகிய நாட்களில், தகுதியான இளைஞர்களை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அறிவுறுத்தியுள்ளது.
இனி ஆண்டுதோறும் ஒவ்வொரு காலாண்டிலும் வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கப்படும். 18 வயது நிறைவடைந்த இளைஞர்கள், பதிவு செய்து கொள்ளலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்த பின், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்படும்.
அந்த அடிப்படையில், வரும் ஏப்ரல் 1-ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு, வாக்காளர் திருத்தப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் புதிதாக 1,23,064 வாக்காளர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. 51,295 வாக்காளர்கள் முகவரி மாற்றம் செய்துள்ளனர். 9,11,820 வாக்காளர்களின் பெயர்கள் இடப்பெயர்ச்சி, இறப்பு மற்றும் இரட்டைப் பதிவு ஆகிய காரணங்களுக்காக நீக்கப்பட்டுள்ளன. மேலும், 2,60,103 வாக்காளர்களின் பதிவுகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
» மின்வாரிய அதிகாரிகள் லஞ்சம் வாங்கினால் கடும் நடவடிக்கை - லஞ்ச ஒழிப்பு டிஜிபி எச்சரிக்கை
தற்போது வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியல்படி, தமிழகத்தில் 3,01,18,904 ஆண்கள், 3,11,09,813 பெண்கள், 7979 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 6,12,36,696 வாக்காளர்கள் உள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உட்பட்ட சோழிங்கநல்லூர் தொகுதியில் அதிகபட்சமாக 6,51,077 வாக்காளர்கள் உள்ளனர். அடுத்ததாக கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் 4,54,919 வாக்காளர்கள் உள்ளனர். தமிழகத்திலேயே குறைந்த வாக்காளர்கள் கொண்டது சென்னை மாவட்டத்தில் உள்ள துறைமுகம் தொகுதியாகும் இதில் 1,69,292 வாக்காளர்கள் உள்ளனர். அதேபோல, நாகை மாவட்டம் கீழ்வேளூர் தொகுதியில் 1,69,750 வாக்காளர்கள் உள்ளனர்.
மேலும், வாக்காளர் பட்டியலில் 3,400 வெளிநாடு வாழ் வாக்காளர்களும், 4,34,583 மாற்றுத் திறனாளி வாக்காளர்களும் உள்ளனர். 18 முதல் 19 வயது வரையிலான வாக்காளர்களின் எண்ணிக்கை 8,80,612 ஆகும். வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரியின் ‘https://elections.tn.gov.in/’ என்ற வலைதளத்தில் காணலாம். அதில் தங்கள் பெயரை சரிபார்த்துக் கொள்ளலாம்.
வாக்காளர் பட்டியல் தொடர் திருத்த நடைமுறைகள் தற்போது செயல்பாட்டில் உள்ளன. கடந்த ஏப்.1-ம் தேதி வரை 18 வயது நிறைவடைந்த தகுதியானவர்கள், தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.
வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகத்தில் படிவம் 6-ஐ சமர்ப்பித்து, விண்ணப்பிக்கலாம். இதுதவிர ‘https://voters.eci.gov.in/’ என்ற இணையதளம் மூலமும், கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து “Voter Helpline App” என்ற செயலியை பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம்.
வாக்காளர் பட்டியல் நகலை புகைப்படம் இல்லாமல், வாக்காளர் பதிவு அலுவலரிடம் இருந்து சட்டப்பேரவைத் தொகுதிக்கு ரூ.100 கட்டணம் செலுத்தி பெறலாம்.
இந்திய தேர்தல் ஆணைய அறிவுறுத்தல்படி, அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கி, மாவட்ட தொடர்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் மாவட்ட தொடர்பு மையங்களை “1950” என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு, தேர்தல் தொடர்பான தகவல்களை அறியலாம். தலைமைத் தேர்தல் அதிகாரியின் அலுவலகத்தில் 1800-4252-1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுடன், மாநில தொடர்பு மையம் இயங்கி வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் 5-ம் தேதி நிலவரப்படி தமிழகத்தில் 3,04,89,866 ஆண்கள், 3,15,43,288 பெண்கள் மற்றும் 8,027 மூன்றாம் பாலினத்தவர் என 6,20,41,179 வாக்காளர்கள் இருந்தனர்.
தமிழகத்தில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலைவிட, தற்போது 8.04 லட்சம் வாக்காளர்கள் குறைந்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
29 mins ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago