சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் ‘வந்தே பாரத்’ ரயில் பெட்டிகள் தயாரிக்கும் பணி தீவிரம்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் 8 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் ரயில்களை அதிக அளவில் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தேவைக்கு ஏற்ப, 16 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் ரயிலும் தயாரித்து வழங்கப்பட உள்ளது.

ரயில் பெட்டி தயாரிப்பில் உலகப் புகழ்பெற்று விளங்கும் சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் பல்வேறு வகைகளில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் தயாரித்து வழங்கப்பட்டுள்ளன. தற்போது, அதிநவீன வந்தே பாரத் ரயில் தயாரிப்பில் ஐசிஎஃப் அதிக கவனம் செலுத்தி வருகிறது.

தற்போது நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்கள் இடையே இயக்கப்பட்டு வரும் 18 வந்தே பாரத் ரயில்களும் இங்கு தயாரிக்கப்பட்டவைதான். இதில், தெற்கு ரயில்வேயில் மட்டும் சென்னை - மைசூரு, சென்னை - கோவை, திருவனந்தபுரம் - காசர்கோடு ஆகிய 3 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. பொதுவாக இந்த ரயில்கள், 8 அல்லது 16 பெட்டிகளுடன் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், ஐசிஎஃப் தொழிற்சாலையில் 8 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் ரயில்களை அதிக அளவில் தயாரிக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:

ஐசிஎஃப்பில் தற்போது 19-வது வந்தே பாரத் ரயில் தயாரிக்கப்பட்டு, வாரியத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கோவா - மும்பை இடையே ஜூன் 3-ம் தேதி முதல் இந்த ரயில் இயக்கப்பட உள்ளது. இது 8 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் ரயில் ஆகும்.

வரும் மாதங்களில் 8 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் ரயில்கள் அதிக அளவில் தயாரிக்கப்படும். ஏற்கெனவே ஓடும் 8 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் ரயில்களில் தேவை அதிகமாக இருந்தால், கூடுதலாக 8 பெட்டிகள் இணைக்கப்பட்டு 16 பெட்டிகள் கொண்ட ரயிலாக இயக்கப்படும். எனவே, பயணிகள் தேவைக்கு ஏற்ப கூடுதல் பெட்டிகள் சேர்க்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

சென்னை ஐசிஎஃப்பில் 2023-24-ம் நிதி ஆண்டில் 736 வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட உள்ளன. தலா 16 பெட்டிகள் கொண்ட 46 ரயில்கள் அல்லது தலா 8 பெட்டிகள் கொண்ட 92 ரயில்கள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பை ஐசிஎஃப் நிர்வாகத்துக்கு ரயில்வே துறை சில மாதங்களுக்கு முன்பு அனுப்பியது. இந்த உத்தரவின்பேரில், அங்கு வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக தொடங்கி நடந்து வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE