ராமேசுவரத்தில் இருந்து நடைபயணம்: ஜூலை 9-ல் தொடங்குவதாக அண்ணாமலை தகவல்

By செய்திப்பிரிவு

மதுரை: ஜூலை 9-ம் தேதி முதல் ராமேசுவரத்தில் இருந்து நடைபயணம் தொடங்க உள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

மதுரை விமான நிலையத்தில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் குறித்து ஆதாரத்தின் அடிப்படையில் விசாரணை நடத்திய பிறகே நடவடிக்கை எடுக்க முடியும். குற்றம்சாட்டும் நபரை கைது செய்த பிறகே போராட்டத்தை கைவிடுவோம் என்று சொல்வதை ஏற்க முடியாது.

அப்படி பார்த்தால் கவிஞர் வைரமுத்து மீதும் 19 பாலியல் புகார்கள் உள்ளன. அவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்த மாட்டோம். அவர் மீதான புகார்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றே வலியுறுத்துகிறோம்.

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வகித்து வந்த நிதித்துறை மாற்றப்பட்டது மதுரைக்கு திமுக இழைத்த துரோகம். பிடிஆர் எந்த தவறும் செய்யவில்லை. அவரது குரல் பதிவை மறுக்கவும் இல்லை. இருப்பினும், முதல்வர் குடும்பத்தை சேர்ந்தவர்களை பற்றி கருத்து தெரிவித்ததால் நிதித்துறை பறிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து திராவிட மாடல் ஆட்சியில் யாருக்கு வேண்டுமானாலும், எது வேண்டுமானாலும் நடக்கலாம் என தெரிகிறது.

அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் வீட்டில் சோதனையிட சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கப்பட்டுள்ளனர். மேயர், துணை மேயர், கவுன்சிலர் போன்ற மக்கள் பிரதிநிதிகளாக இருப்பவர்கள் இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை அதிகாரிகள் மீது கைவைத்தால் இப்படித்தான் பதில் நடவடிக்கை இருக்கும் என்பதை உணர்த்துவதாக இருக்க வேண்டும்.

கர்நாடகாவில் மேகேதாட்டு அணையைக் கட்டுவோம் என தேர்தல் வாக்குறுதி அளித்த காங்கிரஸ் கட்சியின் பதவியேற்பு விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றது சரியல்ல. இதற்கு தமிழக காங்கிரஸ் என்ன பதில் சொல்ல போகிறது. மேகேதாட்டு அணையைக் கட்டினால் பாஜக போராட்டம் நடத்தும்.

தமிழகத்தில் 3 அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யவிருப்பது வருத்தம் அளிக்கிறது. மத்திய அரசு குழுவை அனுப்பி ஆய்வு செய்து அங்கீகாரம் வழங்க வேண்டும் என பாஜகவும் கோரிக்கை வைத்துள்ளது.

எனது நடைபயணம் ராமேசுவரத்தில் ஜூலை 9-ல் தொடங்கும். இதில் தேசியத் தலைவர்கள் பங்கேற்பர். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE