8 லட்சம் சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வருகை: தோட்டக்கலைத்துறைக்கு ரூ.6.20 கோடி வருவாய்

By ஆர்.டி.சிவசங்கர்


உதகை: நீலகிரி மாவட்டத்துக்கு கோடை சீசன் காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மட்டுமே 8 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். இதன் மூலம் தோட்டக்கலைத் துறை ரூ.6.20 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

சர்வதேச சுற்றுலா நகரமான உதகைக்கு ஆண்டுதோறும் சுமார் 35 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். குறிப்பாக, கோடை சீசன் காலமான ஏப்ரல், மே மாதங்களில் அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். சுற்றுலாப் பயணிகளை கவர கோடை காலத்தில் மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத் துறை மற்றும் தோட்டக்கலைத் துறை சார்பில் கோடை விழா நடத்தப்படுகிறது.

அதன்படி, நடப்பாண்டு மே 6-ம் தேதி கோத்தகிரி நேரு பூங்காவில்‌ காய்கறி கண்காட்சியுடன் கோடை விழா ஆரம்பமானது. தொடர்ந்து, கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி, உதகை ரோஜா பூங்காவில் 18-வது ரோஜா கண்காட்சி, தாவரவியல் பூங்காவில் 125-வது மலர்க் கண்காட்சி, குன்னூரில் பழக் கண்காட்சி ஆகியவை நடைபெற்றன.

மலர்க் கண்காட்சி நடைபெற்ற 5 நாட்களில் மட்டுமே 1.50 லட்சம் சுற்றுலாப் பயணிகள் தாவரவியல் பூங்காவுக்கு வருகை தந்தனர். ரோஜா கண்காட்சியை 50 ஆயிரம் பேரும், பழக் கண்காட்சியை சுமார் 25 ஆயிரம் பேரும் கண்டு ரசித்துள்ளனர்.

தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘இந்தாண்டு ஏப்ரல், மே ஆகிய இரு மாதங்களில் மட்டும் சராசரியாக 8 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். அதன்மூலம் தோட்டக்கலைத் துறைக்கு ரூ.6.20 கோடி வருமானம் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டு கூடுதலாக ரூ.1.20 கோடி வருவாய் கிடைத்துள்ளது” என்றனர்.

கோடை விழா நிறைவு: இந்நிலையில், சுமார் ஒரு மாதம் நடைபெற்ற கோடை விழா நேற்றுடன் நிறைவு பெற்றது. உதகை அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெற்ற நிகழ்வுக்கு கோட்டாட்சியர் துரைராஜ் தலைமை வகித்தார். பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இவற்றை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE