துணிவு, வீர சாகச செயல்களுக்கான கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

By செய்திப்பிரிவு

சென்னை: துணிவு, வீர சாகச செயல்களுக்கான கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசின் பொதுத்துறை செயலர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: துணிவு மற்றும் வீர சாகச செயல்களுக்காக தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கல்பனா சாவ்லா விருது வழங்கப்படுகிறது. சுதந்திர தினவிழாவில் இவ்விருதை முதல்வர் வழங்குவார். இது ரூ.5 லட்சம் பரிசுத்தொகை, சான்றிதழ், பதக்கம் ஆகியவற்றை உள்ளடக்கியது. தமிழ்நாட்டைச் சேர்ந்த துணிச்சலான மற்றும் வீர சாகச செயல்புரிந்த பெண்கள் இவ்விருது பெற தகுதியுடையவர் ஆவர்.

2023-ம் ஆண்டுக்கான கல்பனா சாவ்லா விருதுக்கு பரிந்துரைகள் கோரப்படுகின்றன. விருதுக்கான விண்ணப்பங்கள் மற்றும் பரிந்துரைகள் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் மட்டுமே பெறப்படும். விருதுக்கு பரிந்துரைக்கப்படும் நபர்களின் துணிவு மற்றும் வீர சாகச செயல்கள் அதிகபட்சம் 800 வார்த்தைகளுக்குள் எடுத்துரைக்கப்பட வேண்டும்.

விருதுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஜுன் 30-ம் தேதி ஆகும். தகுதியுடைய நபர்கள் இதற்காக அரசால் நியமிக்கப்படும் தேர்வுக் குழுவால் தேர்வு செய்யப்படுவர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE